தினகரனும், ஆஞ்ஜியோகிராமும்.

சாவு எப்படியெல்லாம் ‘பெப்பே’ காட்டுகிறது. மருத்துவமனையில் இருக்கும்போது தினகரன் மறுபடியும் சாவு பற்றிய விளக்கத்தை கண்டறிய முயன்றார். சாவுக்கும் தனக்குமான இடைவெளி எதனாலும் நிரப்பப்படாமல் அது தனக்கு மிகவும் அண்மித்த நிலையில் இருப்பதாகவே அவருக்குப் பட்டது. பிகோரோ யாரோ… பிகோர்தானே அது? யாராக இருந்தால் என்ன? அறிவுக்கு எட்டிய விதத்தில் தன் வரையில் சரியாகச் சிந்தித்திருக்கிறான் என்பதே உண்மை.

அன்று தொழிற்சாலையில் – அது ஏன் நடந்தது ? – மூச்சுத்தினறல் போல் வந்து, இருதயம் அடைக்குமாற்போல் படவே மருத்துவமனைக்கு வரவில்லையா? விசாரித்ததில் க்ஷணப்பொழுதொன்றில் மாரடைப்பு. ஆனால் சாவு சம்பவிக்கவில்லை.

ஆக, சாவு தனக்கு நிஜமாகவே ‘பெப்பே’ காட்டுவதாகவே தினகரன் திண்ணமாக நம்பினார். தேகம் வியர்த்து, சமநிலை இழந்து, தன்னையே சுற்றி விழ்ந்தபோது …!

ஒருவேளை கண்டிருந்தால். தன்னை நிஜத்திலும் ஒருதடவை அப்படிச் சிந்தித்துப் பார்த்தார். தானே பார்த்துக்கொண்டிருக்க, தினகரன் நிலத்தில் சரிவதுபோல், முதுகினைக் காட்டிக்கொண்டு தண்ணீர், தண்ணீர் என்பதுபோல் அதன் பிறகு அப்படியே சாவு அவரைப் பற்றிக் கொள்வதுபோல்.

தினகரனுக்கு சிரிப்பாக இருந்தது. அவருக்கு இன்னமும் சிரிப்பாகவே இருந்தது. அப்போது ஈ ஒன்று அவரின் காதருகே வந்து ரீங்காரமெழுப்பி பின் அப்பால் பறந்து சென்றது. தினகரனின் கண்கள் ஈயை பின் தொடரலாயிற்று.

துரதிஷ்டம் நிரம்பிய ஈயானது சாளரத்தில் கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பது தெரியாமல் சடாரென்று போய் மோதியது. ஒரு க்ஷணம் தலை சுற்றியிருக்க வேண்டும். தடுமாறி பாதி வரை விழுந்து பின்னர் ஏதோவொரு தைரியத்தில் பறக்க முயற்சி செய்து அப்போதும் முடியாமல் ஒரேடியாய் விழுந்து பின் இறந்தது. 

கடந்த வெள்ளிக்கிழமை ( 20. 07. 18 ) தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருக்கும் போது தினகரனுக்கு மூச்சுத் தினறல் ஏற்பட்டு நெஞ்சு அடைக்குமாற்போல் படவே தண்ணீர், தண்ணீரென்று பிதற்றினார். சூசானா அவர் வாயில் தண்ணீரைப்  பருக்கியபோது இரண்டு மிடறு குடித்தார். பின்னர் ஆசுவாசமடைந்ததைப் போல் உணர்ந்தார்.

இருந்தாலும், – அவர் எவ்வளவோ அடம்பிடித்தும் கேட்காமல் – ‘ஒன்றும்  பிரச்சனையில்லை; ஒருதடவை மருத்துவமனைக்குச் சென்று தேகத்தை முழுவதுமாக பரிசோதித்துவிட்டு வா’ என்று சூசானா அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாள்.

மார்பிலும், விரலிலும் வயர்கள் பொருத்தப்பட்டிருக்கும்போது சாவு தன் கரங்களை நீட்டி தன்னைப் பற்றிக்கொண்டுள்ளதாகவே அவருக்குப் பட்டது. வாழ்வதை உணர்கிறோம். ஆனால், சாவினை எப்படி உணர்வது? இரண்டாவது தடவையாக தினகரனுக்கு இந்தச் சந்தேகம் வந்தது.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்து சடாரென்று விழிப்பதுபோல் சாவிலிருந்து எழுந்து கொண்டார். மருத்துவப் பெண் அவரின் காதில் நீங்கள் இறந்து விட்டீர்கள் ,ஆனால், இறப்பதற்கு முன் இந்த அறிக்கையில் கையொப்பமிட மறந்து போனீர்கள். ஆகவே, இந்த அறிக்கையில் ஒரு கையொப்பத்தினை எழுதிவிட்டு மறுபடியும் மரணித்து விடுங்கள் என்றாள்.

தினகரன் மறுபடியுமாய் சிரித்துக் கொண்டார்.

 

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.