நன்றி சாரு.

சாதனா எழுதிய “தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்” என்ற சிறுகதைத் தொகுதிக்கு இன்று முன்னுரை எழுத அமர்ந்தேன். எழுத ஆரம்பித்ததுமே அது அத்தனை சுலபமானது அல்ல என்று உணர்ந்தேன். ஏனென்றால், ஜார்ஜ் பத்தாயின் (Georges Bataille) மரணம் பற்றிய கட்டுரையையும், eroticism பற்றிய கட்டுரைகளையும் படிக்காமல் எழுதுவது இந்தத் தொகுதிக்கு நியாயமானதல்ல. தமிழில் முதல் முதலாக மரணமும் பாலியலும் இணையும் ஒரு பிரதியைப் படிக்கிறேன். சம்பத்தின் இடைவெளி மரணம் பற்றிய நாவல். ஆனால் சாதனா மரணத்தினூடே காமத்தை இணைக்கிறார். காமத்தை ரொலான் பார்த் la petite mort என்று சொல்வதைப் போல. பெத்தி மோர்த் என்றால் சிறிய மரணம். உடல் உறவின் போது நம்மை மறக்கிறோம் அல்லவா, அது ஒரு சிறிய மரணம். ஜனனம், மரணம் என்கிறோம். மரணத்தின் தொடர்ச்சி ஜனனம். ஜனனம் காமத்திலிருந்து பிறக்கிறது. மரணம் சூன்யம். பூஜ்யம். அதனால்தான் இன்னார் பூஜ்யமடைந்தார் என்கிறோம். இந்தப் பூஜ்யம்தான் யோனி என்கிறார் ஜார்ஜ் பத்தாய். The Story of the Eye என்ற நாவல் முழுவதுமே இதைப் பற்றியதுதான். கண்ணின் கதை உண்மையில் யோனியின் கதைதான். பூஜ்யம், கண், யோனி, முட்டையின் மஞ்சள் கரு என்று அடுக்கிக் கொண்டு செல்கிறார் பத்தாய். கழுத்தை நெறிக்கும் போது விந்து வெளியாகிறது. எக்ஸ்டஸியிலும் அதுவே நடக்கிறது.

தமிழில் இப்படி ஒரு பிரதியை முதல்முதலாகப் படிக்கிறேன். ஆனால் இப்படிச் சொல்லும் போதே அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் தொகுதியிலும் ஜார்ஜ் பத்தாய் பற்றி நான் விவரித்தது ஞாபகம் வருகிறது. ஆனால் அந்தத் தொகுதி முழுக்க முழுக்கவுமே மரணமும் காமமும் பற்றியது அல்ல என்று நினைக்கிறேன். இருந்தாலும் எல்லாவற்றையும் படித்தாக வேண்டும்.

சாதனாவுக்கு முன்னுரை கொடுக்க அதிகம் தாமதமாகி விட்டது. காரணம், சாதனா தான். ஏனென்றால், இரண்டு மாத காலம் திரும்பத் திரும்ப அவர் கதைகளைப் படித்துக் கொண்டே இருந்தேன். முன்னுரையை நாளைக்குள் முடித்து விடுவேன். இந்தச் சிறிய குறிப்பிலிருந்து நான் வெளியேறவும் கூடும். ஆனால் தமிழில் மிக முக்கியமான ஒரு சிறுகதைத் தொகுப்பாக இருக்கும் சாதனாவின் ”தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்.” விரைவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் தமிழ்ப் பிரிவான எழுத்து பிரசுரத்திலிருந்து நூல் உங்களுக்குக் கிடைக்கும். சாதனா இதுவரை பொறுமையாக இருந்ததற்கு நன்றி.

Advertisements