ஜே.கே யுடன் ஓர் உரையாடல்.

“ஆக்காட்டி” இதழுக்காக அதன் ஆசிரியர் தர்மு பிரசாத் என்னிடம் ஒரு படைப்புக் கேட்டிருந்தார்.ஏற்கனவே நான் எழுதிக்கொண்டிருக்கும் யூதாசின் முத்தம் என்கின்ற சிறுகதையை நான் இன்னும் முடிக்கவில்லை.தினமும் நான்கு மணிநேரங்கள் யூதாஸ் பற்றிய குறிப்புகளை இணையத்திலும்,புத்தகத்திலும் படித்துக்கொண்டிருக்கின்றேன்.இதை நான் அவரிடம் கூறியபொது அப்படியெனில் நேர்காணல் செய்கின்றீர்களா, இலகுவாக இருக்கும் என்றார்.ஒருவரை நேர்காணல் செய்வதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல.இன்னும் சொல்லப்போனால் இலக்கியத்திலே மிகவும் கடினமானது நேர்காணல் தான்.எவரை நாம் நேர்காணல் செய்கின்றோமோ அவரின் படைப்புகள் அனைத்தையும் நாம் படித்திருக்கவேண்டும்.குறைந்த பட்சம் மேலோட்டமாக அலசியாவது  இருக்கவேண்டும்.நான் எந்த எழுத்தாளரையும் முழுமையாகப் படித்தது கிடையாது.சுஜாதாவின் புத்தகங்களிலேயே அரைவாசிதான் படித்திருக்கின்றேன்.எஸ்.ராவின் புத்தகங்கள் நான்கு.
என் இலக்கிய அறிவு இப்படியிருக்கும்பொது நான் எப்படி நேர்காணல் செய்வது.அதற்கான தகுதி எனக்கு இருக்கின்றதா இதனால் தான் ஜே.கே யின் இந்த கேள்வி பதிலை ஒரு நேர்காணல் போலல்லாமல் ஒரு சுவாரஸ்யமான உரையாடலாக நிகழ்த்துவோமென்று முடிவெடுத்தேன்.இதை நான் ஜே.கேயிடம் கூறியபோது அவரும் மறுப்பேதும் சொல்லாமல் பெஷ்ஷாக செய்யலாமே என்றார்.அவரிடம் கேட்பதற்கு என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தன.அவருடனான என்னுடைய இந்த உரையாடல் ஒரு இளம் ஜென் குருவிடம் ஒரு சீடன் பேசியது போன்ற அனுபவத்தை எனக்குத் தந்தது.

1402023_10151949160090791_1083477981_o

ஜெயக்குமரன் சந்திரசேகரம்.

இளம்பராயம் முழுதும் போர்ச்சூழல்தான். ஆனாலும் எமக்கு அதுதானே தெரிந்த ஒரே வாழ்க்கை. அதனால் எல்லாச்சிறுவர்களையும்போல ஒவ்வொரு கணத்தையும் சந்தோசமாகவே கழித்தோம். குறைந்தபட்ச வாழ்க்கைமுறை வாசிப்பதற்கான சூழலை தோற்றுவித்தது. கண்டபாட்டுக்கு வெளியே சுற்றித்திரியமுடியாது. ஊரடங்குகள். சண்டைகள் எங்களை வீட்டுக்குள்ளும், பங்கருக்குள்ளும் முடக்கின. புத்தகங்கள் நண்பர்களாகின. அக்காலத்தில் ஊரில் இருந்த அத்தனைபேரும் புத்தகங்களை கைமாற்றி கைமாற்றி வாசித்துக்கொண்டிருந்தார்கள். தனியார்வீடுகளில்கூட நூலகங்கள் இருந்தன. எங்கள் சந்தியிலிருந்த பலசரக்குகடையில்கூட ஒரு அலுமாரி வைத்து புத்தகங்களை இரவல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் மூன்று ரூபா. அரிசி, பருப்புபோல புத்தகவாசிப்பும் ஒரு அத்தியாவசிய பண்டமாக இருந்தகாலம் அது. என்னையும் அது பிடித்துக்கொண்டது ஆச்சரியமான விடயம் அல்ல. அடுத்தது எங்கள் பாடசாலை ஹண்டி நூலகம். பள்ளிப்பருவத்தின் பல மணி நேரங்கள் அங்கேயே கழிந்தன. எனக்கு பரியோவான் கல்லூரியில் அமைந்த மிகச்சிறந்த ஆசான் அந்த நூலகமே.
எழுத்தின் ஆரம்பம் உல்டாவில் ஆரம்பித்தது. ரெண்டாம் வகுப்பா, மூன்றாம் வகுப்பா தெரியாது. சம்பந்தர் ஞானப்பால் உண்டுவிட்டு தோடுடையசெவியன் பாடிய பாடம் படித்த அன்றைக்கு நானும் நாலு வரியில் ஒரு மொக்கைத்தேவாரம் எழுதி அம்மாவிடம் கொடுத்தேன். இதுகளை தூக்கி எறிஞ்சிட்டு போய் கொப்பி புத்தகத்தை எடுத்து படி என்றார். பதினொரு வயதில் ஒரு சிறுகதை. மேனகா என்ற பதின்மசிறுமியின் கதை. முடிவில் அவள் வாகனவிபத்து ஒன்றில் இறப்பாம். மரண மொக்கை கதை.  இரண்டாயிரமாம் ஆண்டு உலகம் எனறு ஒரு கற்பனை. இந்தியா சோவியத்  யூனியன் மாதிரி உடையும் எனறு எழுதியது ஞாபகம் வருகிறது.
பதின்மூன்று வயது. அப்போது யாழ்ப்பாணத்தில் அறிவுக்களஞ்சியம் எனறு ஒரு சஞ்சிகை வெளிவந்தது. குறவன் சுஜாதவின் ஏன். எதற்கு எப்படி கொடுத்த தாக்கம். நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு புத்தகம் போட முயனறோம். ‘பொது அறிவுப் பூங்கா’. காசு எல்லாம் சேர்த்தும் பெரிதாக பெரியர்கள் ஆதரவு கிட்டாமையால் அது சரிவரவில்லை. அதன் கையெழுத்துப்பிரதி இன்னமும் வீட்டில் இருக்கிறது. அந்த முயற்சி வெற்றியடைந்திருந்தால் இன்னமும் சீரியசாக அப்போதே எழுதியிருக்கலா. அழிந்தும் போயிருக்கலாம்!
ஒரளவுக்கு குறிப்பிடத்தக்க சிறுகதைகள் பல்கலைக்கழகம் சென்றபின்னர் எழுதினேன் என்று நம்புகிறேன். ஜி. பிரதீபன் என்ற சீனியர் அண்ணா அப்போது நிறைய ஆதரவு தந்தார்.  “வானம் மெல்ல கீழிறங்கி” எனறு இப்போது படலையில் இருக்கும் சிறுகதை அப்படியானது. இன்னொரு சிறுகதை ஒரு பல்கலைக்கழக தமிழ் மாணவன் சிங்களப்பெண்ணை காதலிக்கிறான். யாழ்ப்பாணம் கூட்டிச்செல்கிறான். போகும்வழியில் நாவற்குழிப்பாலத்தில் தரித்து நிற்கிறார்கள். நடந்ததை சொல்லுகிறான். அரதப்பழசான ஈழத்துக்கதைக்கரு.
பின்னர் இணையம் வந்தபிறகு என்னிஷ்டம். முதல் ஆங்கிலப்பதிவு 2002 என்று நினைக்கிறான். அனேகமானவை தொழில்நுட்பபதிவுகள். பின்னர் சிறுகதைகள் எனறு வண்டியோட்டி 2011 இல் படலையை ஆரம்பித்தேன்.
அவ்வளவுதான் என் சுவாரசியமில்லாத முன்கதைச்சுருக்கம்!

ஆரம்பத்தில், ஆங்கிலத்தில் மாத்திரமே எழுதி வந்த நீங்கள் பின்னர் தமிழிலும் எழுதத் தொடங்கினீர்கள். இப்பொழுது உங்களுடைய பெரும்பாலான படைப்புகளை நீங்கள் தமிழ் மொழியிலேயே எழுதி வருகின்றீர்கள். ஒரு படைப்பை ஒரு படைப்பாளி தன்னுடைய பிறப்பு மொழியில் எழுதுவதற்கும், அன்னிய மொழியில் எழுதுவதற்கும் இடையிலான வேறுபாடு என்னென்ன? எது அவனை அதிகம் பரவசமூட்டுகின்றது?

கதையை சிந்திக்கும் மொழியில் எழுதுவதே பரவசமூட்டும் என்று நினைக்கிறேன். “Coffee” என்றொரு சிறுகதை. மெல்பேர்ன் ரயில் பிரயாணத்தின்போது ஒரு ஈழத்து வாலிபனும் வெள்ளைக்காரியும் சந்திக்கின்ற மிக எளிமையான சிறுகதை. அது ஆங்கிலத்திலேயே சிந்தித்து ஆங்கிலத்திலேயே எழுதியது. அதனை பின்னாளில் “என்ர அம்மாளாச்சி” என்று தமிழ்ப்படுத்த முனைகையில் நிறைய சிரமப்பட்டேன். ஆங்கில புத்தகங்களின் வாசிப்பனுபவங்களை தமிழில் எழுதும்போதும் அச்சிக்கல் நிகழும். அதே சமயம் “அக்கா” என்ற சிறுகதை, யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து நாவற்குழி வீதியால் நடந்து செல்லுகின்ற அக்காவையும் தம்பியையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. முதலில் ஆங்கிலத்திலேயே ஆரம்பித்தேன். இரண்டாம் பந்திக்குப்பின்னர் கதை நகரவில்லை. காட்சிகள், விவரணங்கள் முதல் வசனங்கள் வரை எல்லாமே தமிழிலேயே வசனங்கள் அமைந்தன. ஆங்கிலத்துக்கு மாற்றும்போது உப்புச்சப்பில்லாமலிருந்தது. சில விவரணங்கள் தமிழுக்கே உரியவை. “ஈழத்தமிழன்போல அடங்காமல் பறக்கும் நரைமுடிகள்” என்று பி.கே வாத்தியைப்பற்றி விவரிப்பதை  ஆங்கிலத்தில் எழுதினால் அபத்தமாகவிருக்கும். “We all came out of Gogol’s overcoat” என்பதை எப்படி தமிழில் எழுதுவது? கதை சிந்திக்கப்படும் மொழியிலேயே எழுவது இயல்பாக அமையும். மொழியாளுமையும் முக்கியமே, ஆனால் அது இரண்டாம் பட்சம்தான்.

புதிதாக எழுத வரும் எழுத்தாளர்களுக்கு சுஜாதாவே முன்னோடி. பலரின் எழுத்தில் அவரின் சாயல் தெரிகின்றது. உங்களுடைய எழுத்தில் அது அதிகமாகவே தெரிகின்றது. என்னுடைய ஆதர்சன எழுத்தாளரும் அவரேயென்று நீங்கள் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றீர்கள். ஆனால் சுஜாதா ஒரு இலக்கியவாதியல்ல, அவரொரு வெகுஜன எழுத்தாளர் அவ்வளவே என்கின்ற ஒரு விமர்சனம் அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ளது, முன்வைக்கப்பட்டும் வருகின்றது. சுஜாதாவின் பரம விசிறியான நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ?

இலக்கியவாதி, இலக்கியவாதி அல்ல என்ற பகுப்பு மூலம் என்னத்தை அடைந்துவிடப்போகிறோம்? “ஏன், எனக்கு, எப்படி” முதன்முதலில் என் கைகளுக்கு வரும்போது வயது பத்து. அதனை ரசிப்பதற்கு எனக்கு சுஜாதா இலக்கியவாதியா என்ற தகவல் தேவைப்படவில்லை. சுஜாதா  விஞ்ஞானி என்ற தகவலும் தேவையாயிருக்கவில்லை. புத்தகம் என்னை கட்டிப்போட்டது. “பிரிவோம் சந்திப்போம்”  முதல் “கணையாழியின் கடைசிப்பக்கங்கள்” வரை சுஜாதாவின் எந்த புத்தகங்களை வாசிப்பதற்கும் அவர் வெகுஜன எழுத்தாளர், இலக்கியவாதி என்ற அடையாளங்கள் காரணமாகவிருக்கவில்லை. ஸ்ரீரங்கத்துக்குப் போகிறவர்கள் எல்லோரிடமும் சித்திரைத்தெருவில் இன்னமும் கிரிக்கட் ஆடுகிறார்களா? நோஞ்சானாக ஒரு பையன் பந்து பொறுக்குகிறானா என்று கேட்கத்தவறுவதில்லை.நேற்று “தேடாதே” என்ற அவருடைய குறுநாவலை மீண்டுமொருதடவை வாசித்தேன். அது இலக்கியமா? ஹூ கெயார்ஸ்?

இன்றைக்கு சுஜாதா. எஸ். ராவின் நெடுங்குருதியை சென்றவாரம் வாசித்தேன். நாளைக்கு எஸ். ராவையும் இலக்கியவாதி இல்லை என்பார்கள். இன்னொருவர் ஜெயமோகனை இலக்கியவாதி இல்லை என்பார். எழுத்து என்பதே வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமிடையான கலவி. அதிலே பூசாரிக்கு வேலையில்லை. சுஜாதா இலக்கியவாதியில்லை என்று யாரும் வாசகனுக்கு விளக்குப்பிடிக்கத்தேவையில்லை. சுஜாதா இலக்கியவாதி இல்லையா? சரி வச்சுக்கோ. நீதான் இலக்கியவாதியா? எடுத்துக்கோ. அவ்வளவுதான் விஷயம். ஊரிலே நிறைய சுண்ணாம்புச் சுவர்கள் உனக்காக காத்திருக்கின்றன!

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்,இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்.அதேபோல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பணிபுரிந்த முன்னாள் உறுப்பினர்கள் பலர் விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக அழிந்தபின்னர் அல்லது அவ்வியக்கத்தின்செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக மௌனமடைந்துள்ள இந்தச் சம காலத்தில் ஞானோதயம் அடைந்தவர்களைப் போல் புலிகளையும் அவர்களின் முன்னைநாள் செயற்பாடுகளையும் விமர்சித்துக் கொண்டு திரிகின்றனர்.இன்னொரு முறையில் கூறுவதாக இருந்தால் அறியப்பட்ட சமகால எழுத்தாளர்கள்,கவிஞர்கள் பலர் புலிகள் இயக்க விமசகர்களாகவே இருக்கின்றனர்.ஏன் இந்த மாற்றம்.இது ஒரு நியாயமான காரணங்களின் அடிப்படையில் நிகழ்ந்த ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை.மாறாக அவர்கள் அனைவரும் தங்களின் ஒரு நிலையான இருப்புக்கு,அல்லது இறந்த யானையை வைத்துக் கொண்டு அதன் மூலம் பொன் சம்பாதிக்கவேண்டும் என்கின்ற மொண்ணை அரசியலின் அடிப்படையில் தங்கள் காய்களை நகர்த்துவதாகவே எனக்குத் தோன்றுகின்றது.நான் இதை இவ்வாறுதான் புரிந்து கொள்கின்றேன்.என்னுடைய இந்த புரிதலை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கின்றீர்கள்? அல்லது இதைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

‘தனித்து ஒலிக்கும் குரலே  எழுத்தாளனது குரல்’ என்பார் ஜெயமோகன். அதிலே ஓரளவு உண்மையுமிருக்கிறது. ஒரு தீவிர எழுத்தாளன் ஒரு அமைப்பு சார்ந்து தொழிற்படமாட்டான். அது அவனுக்கு முடியாததொன்று. ஆக புலி எதிர்ப்பு என்ற அரசியலின் அடிப்படையில் இந்த எழுத்தாளர்கள் கூட்டாக காய்கள் நகர்த்துகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர்கள் தத்தமது எழுத்துக்களையே முன் வைக்கிறார்கள். கொலம்பசின் வரைபடத்தின் அடிப்படையில் போர்க்கால பயணியின் நாட்குறிப்புகள் அமையவில்லை. யோ. கர்ணனும், தமிழ்க்கவியும், கருணாகரனும் சமகாலத்தில் வன்னியில் வாழ்ந்திருந்தமையால் அவர்களின் எழுத்துகளில் ஒருவித பொதுமைத்தன்மை தெரிகிறது. அவ்வளவே.

புலிகளின் எழுச்சிக்காலத்தில் ஏராளமான புலிகளுக்கு சார்பான ஊடகங்களும் எழுத்துக்களும் வெளிவந்துகொண்டிருந்தன. அப்போதிருந்த புலி எதிர்ப்பு ஊடகங்களைவிட புலிகள் சார்பான ஊடகங்களும் எழுத்துக்களும் வலிமையாகவிருந்தன. புலிகளின் வீழ்ச்சிக்குப்பின்னர் புலிகளுக்கு ஆதரவான எழுத்துக்களில் ஒருவித தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் புலி எதிர்ப்பு எழுத்துக்களோ, எழுத்தாளர்களோ தேங்கவில்லை. புலிகள் இல்லாததும், “I told you so” என்ற எண்ணமும் அவர்களை மேலும் தொடர்ந்தும் எழுதத்தூண்டுகிறது. இந்த சமநிலை மாற்றமே நம்மை அவ்வாறு எண்ணதூண்டுகிறது என்று நினைக்கிறேன்.

மற்றயது நம்முடைய பார்வைக்கோணம்.
‘ஈழம் எனறாலே அது போரிலக்கியம் என்ற எண்ணமும் ஈழம் சார்ந்த எழுத்தாளர்களிடம் போரியல் சார்ந்த எழுத்துக்களை மாத்திரமே எதிர்பார்க்கும் மனப்பாங்கினாலும் நாம் போர் சாராத எழுத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தவறிவிடுகிறோம். செங்கை ஆழியான் கடைசியாக எழுதிய நாவலை நாம் அறியோம். ‘அசோகனின் வைத்தியசாலை’யை நம்மில் பலர் வாசிக்கவில்லை. உமாஜீ எழுதுவதை வெறும் வலைத்தளம் என்ற மட்டுக்குள் அடக்கிவிடுகிறோம். அன்றைக்கு ஒரு தம்பி சிறுகதை ஒன்றை எழுதியனுப்பியிருந்தார். வெள்ளைவத்தை ஓட்டோ ஒன்றிலே நடக்கும் கதை. பேய்க்கதை. அதனை எத்தனைபேர் வாசிப்பார்கள் என்று தெரியவில்லை.
எழுத்தாளர்களை எழுத்தாளர்களாவே பார்ப்போம். குழு மனநிலை வேண்டாம்.  எழுத்தையும் வாசிப்பையும் எந்த எல்லைக்குள்ளும் அடக்கவேண்டாமே.

வாழ்ந்தவர்களின் வரலாற்றை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு கூறுதலே இலக்கியம் எனப்படுமென்று இணையத்தில் எழுதியிருந்தார்கள். இது இலக்கியம் என்பதற்கான சரியான வரைவிலணக்கனம் தானா?வெகுஜன எழுத்து எவ்வாறு இலக்கிய எழுத்திலிருந்து வேறுபடுகின்றது?

வாழ்ந்தவர்களின் வரலாற்றை வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு கூறுதல் இலக்கியமே. மிக அவசியமானதும்கூட. ஆனால் இலக்கியத்தின் வரையறை கட்டுக்கடங்காதது. கடவுள் போல. வரையறைகளை நமக்கேற்றபடி செய்துகொள்ளலாம். இலக்கியமே வெத்து என்று பகுத்தறிவும் பேசலாம். வெகுஜன எழுத்தும் அப்படியே. நூறு பேர் வாசிப்பது வெகுஜன எழுத்தா? ஆயிரம் பேர் வாசிப்பதா? அல்லது ஆயிரம் பேருக்கு தெரிந்த பிரபலம் எழுதுவது வெகுஜன எழுத்தா? இது எல்லாமே வெத்து வாதங்கள். ஒரு புத்தகம் என்னை வாசித்து இரண்டு நாட்களுக்குப்பின்னரும் போட்டுத்தாக்கிக்கொண்டிருந்தால் அது என்னளவில் இலக்கியமே. அவ்வளவுதான்.

சமீபத்தில் எழுத்தாளர் ஷர்மிளா செய்யித் தான் பங்கு பற்றிய ஒரு கூட்டத்தில் இலங்கையில் பாலியல் தொழிலினைச் சட்டபூர்வமாக்க வேண்டும், அப்பொழுதுதான் பெண்கள் மீதான வன்புணர்வுகள் குறைவடையும் என்று குறிப்பிட்டிருப்பார். பின்னர் அது பெரியளவிலான சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. பாலியல் தொழிலினை சட்டபூர்வமாக்குவதன் மூலம் வன்புணர்வுகள் குறைவடையுமென்பது எவ்வளவு தூரம் உண்மை? உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் எந்தப் பெண்களுமே பாலியல் தொழிலினை அவர்களாகவே தங்கள் சுயவிருப்பின் அடிப்படையில் விரும்பித் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக ஏதோவொரு தூண்டுதலே அவர்களை அவ்வாறு செய்ய வைக்கின்றது?ஷர்மிளா செய்யித்தின் இந்தக் கூற்று சரியானது தானா? இதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

ஷர்மிளா செய்யத் சொன்னதில் வெறும் மேலோட்டமான வார்த்தைகளை மாத்திரமே எடுத்துக்கொள்ளாமல் அதன் சாரத்தையும், அவர் ஏன் அவ்வாறு சொல்ல நேர்ந்தது என்பதையும் உணர்ச்சிவசப்படாமல் ஆராயவேண்டும். இது சம்பந்தமான திறந்தமனதுடனான கலந்துரையாடல் சமூகத்தின் அத்தனை கட்டங்களிலும் இடம்பெறவேண்டும். வெறுமனே பாலியல் தொழிலை சட்டபூரவமாக்குவது என்பது வெள்ளைக்காரன் நமக்குத் தந்த ஜனநாயகம் போன்று கேலிக்கூத்து ஆகிவிடும்.

இதில் நான் என்ன நினைக்கிறேன் என்பதை சொல்ல விளைகிறேன்.

பாலியல் தொழில் சட்டவிரோதமாக இலங்கையில் தாராளமாக இடம்பெறுகிறது. புறக்கோட்டை பஸ் நிலையத்தில் இரவு யாழ்ப்பாண பஸ்ஸுக்கு காத்திருக்கும் இளைஞனிடம் தரகர்கள் எவ்வித பயமுமின்றி நெருங்குவார்கள். பக்கத்திலேயே பொலிஸ் நிற்கும். பிரச்சனையே கிடையாது. ஒரு நிமிட சபலம் போதும். சட்டம் எல்லாம் இயற்றத்தேவையில்லை. பாலியல்தேவையை பூர்த்தி செய்யலாம். அப்படிப்போகிறவனுக்கு அது சட்டரீதியானதா இல்லையா என்பதும் ஒரு பிரச்சனையே கிடையாது. சட்டரீதியாக்கினாலும், செலவு குறைவு என்று அவன் களவாகத்தான் இவ்வேலைகளை செய்வான்.

இங்கே பிரச்சனை சட்டம் இல்லை. நம் சமூக கட்டமைப்பே.

நம் சமூகத்தில் முறையாக நெறிப்படுத்தப்பட்ட பாலியல் கல்விமுறை  இல்லை. அறிவு இல்லை. பாலியல் சம்பந்தப்பட்ட மனநிலை மிக மோசமாக விகாரப்பட்டு நிற்கிறது. இது சமூகத்தின் படித்த மேல்தட்டு வர்க்கத்திலேயே இருக்கிறது. சிறுவயது முதலே பெண்ணை சக மனுஷியாக அணுகமுடியாமல் பாலியல் சார்ந்தே அணுக எம் சமூகம் கற்பித்திருக்கிறது. நம்மில் எத்தனை பேர் பெண்ணோடு நேரே கண்பார்த்து பேசுவோம்? பெண்ணை ஒரு புரியாத புதிராக்கி, ஆண் பெண் என்ற குழு மன நிலையை உருவாக்கி வாழுகின்ற சமூகம். ஆணும் பெண்ணும் பழகுதல் என்பது இங்கே இயல்பு கிடையாது. பெண்ணை இன்னமும் சமூகத்தின் சம மதிப்பு கொண்ட மனுஷியாக பார்க்கும் பக்குவம் நமக்கில்லை. நாங்கள் ஆரம்பக்கல்வியிலிருந்து இதனை ஆரம்பிக்கவேண்டும். நம் கலாச்சார புரிதல்கள் காலத்துக்கமைய மாறவில்லை/மாற்றப்படவில்லை. அதனை நாம் முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும். சமூகத்தின் அத்தனை நிலைகளிலும் இது இடம்பெறவேண்டும். அதற்கான பொறிமுறைகளை அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடல்மூலம் உருவாக்கவேண்டும்.

இது நீண்டகால திட்டம் என்பதால் உடனடித்தேவையாக ஊரக விழிப்புக்குழுக்கள் உருவாக்கப்படவேண்டும். விழிப்புக்குழுக்களில் பாடசாலை மாணவர்களும் அங்கம் வகிக்கலாம். அதன்மூலம் மாணவர் மட்டத்தில் இடம்பெறும் மது, போதை, பாலியல் சம்பந்தமான நடவடிக்கைகள் பெரியவர்களை சென்றடையும். முக்கியமாக இதில் ஈடுபடும் பகுதியனரை சீர்திருத்துகின்ற கட்டமைப்பையும் சிந்திக்கவேண்டும். வெறுமனே வெட்டு, கொல்லு என்கின்ற கோசங்கள் எந்த பயனையும் தரா.

உங்கள் பதிலிருந்து நீங்கள் விபச்சாரத்தை ஆதரிக்கின்றீர்கள் என்கின்ற முடிவுக்கு நான் வருகின்றேன். என்னுடைய புரிதல் சரியானதென்றால் உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால் (விபச்சாரம் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மாத்திரம்)விபச்சாரம் செய்திருப்பீர்களா? அப்படியெனில் நாற்பது வயதுக்குப் பிறகு உங்களுடைய தேவைகளை நீங்கள் எவ்வாறு பூர்த்தி செய்வீர்கள்?

விபச்சாரத்தை நான் ஆதரிக்கிறேன் என்று எங்கே சொன்னேன்? பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது பிரச்னைக்கு தீர்வாகாது என்பதையே விளக்க முயன்றேன். பாலியல் கல்வியை ஆதரிப்பதாகத்தான் சொன்னேன். சர்மிளா செய்யத் என்ன சொல்கிறார் என்பதை உணர்ச்சிவசபடாமல் புரிய முயல்வோம் என்கிறேன். ஆதரிக்கவேண்டும் என்று சொல்லவில்லை. நீங்கள் உடனே நான்  விபச்சாரத்தை ஆதாரிக்கிறேன் என்ற ஒற்றைவரி முடிவுக்கு வருகிறீர்கள்.  முதலில் கருத்துக்களை முன்முடிபுகள் இல்லாமல் கேட்கப்பழகுவோம். பாலியல் கல்வி வேறு பாலியல் தொழில் வேறு.  இரண்டையும் போட்டு குழப்பும் சமூகமாக நாங்கள்இருக்கிறோமென்றால் எங்கள் உடனடித்தேவை பாலியல் கல்வியாகும் .

உங்கள் கேள்வியின் premise எனக்கு தவறாகப்படுகிறது. நான் பெண்ணாகப் பிறந்து அப்படி ஒரு சூழல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்பதுவும் பெரும் hypothetical கேள்வியாகும்.ஆம் விபச்சாரம் செய்துதான் இருப்பேன் என்று சொன்னாலும் அபத்தமே. இல்லை ஒருபோதும் செய்திருக்கமாட்டேன் என்று சொன்னாலும் அபத்தமே.  நாற்பது வயதுக்குமேல் நான் என்ன செய்திருப்பேன் என்று கேட்பது கற்பனையின் உச்சம்!
பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களின் கதைகளில் தங்களையே ஒரு பாத்திரமாக இணைத்துக் கொள்வார்கள். உங்களுடைய சில கதைகளை வாசித்த பொழுது நானும் அவ்வாறே உணர்ந்தேன்.நிஜ ஜெயக்குமரனுக்கும், கதையில் வருகின்ற குமரனுக்குமிடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா?நிஜ ஜெயக்குமரன் கதையில் வருகின்ற குமரனுக்கு எவற்றைக் கற்றுக் கொடுத்தான்? அல்லது கதையில் வருகின்ற குமரனிடமிருந்து நிஜ  ஜெயக்குமரனான நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?
 
பாத்திரங்களில், அதுவும் பாத்திரமே கதை சொல்லியாகவும் இருக்கும் சமயங்களில் நிஜ எழுத்தாளர் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதை தவிர்க்கமுடியாது. அதுவும் கொல்லைப்புறத்துக் காதலிகள் போன்ற புனைவுக்கட்டுரைகளில் நிஜ எழுத்தாளரையும் பாத்திரத்தையும் வேறு பிரிப்பதுவும் கடினம். ஆனால் உண்மையை அப்படியே எழுத முடியாது. எழுதினால் நாளைக்கு தாரணியின் கணவன் பொலீசில் புகார் கொடுப்பான். நண்பர்கள் அன்பிரண்ட் பண்ணுவார்கள். சொந்தவீட்டிலேயே புகையத்தொடங்கும். தவிர நிஜ வாழ்க்கையை அப்படியே. சொன்னால் அவ்வளவு சுவாரசியமானதாகவும் இருக்காது. இரண்டு மூன்று பேர்களின் சுவாரசியமான அனுபவங்களை சேர்க்கும்போது கதையில் ஒரு ஓட்டம்வரும். உண்மை சொல்லப்படும்போதே பொய்யாகத்தொடங்கிவிடுகிறது என்பார் சுஜாதா.
குமரன் என்பது என் கதைகளில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் பாத்திரம். மேகலா பெண்பாத்திரம். குமரனைவிட மேகலாவிடம் என்னுடைய தனி இயல்புகள் அதிகம் இருக்கும். இது சுஜாதாவிடமிருந்து சுட்ட ஐடியா. ஆரம்பகாலத்தில் அவர் கணேஷ்-பிரியா என்று இரண்டு பிக்ஸ்டான பாத்திரங்களை வைத்து நிறைய கதைகள் எழுதினார். பிரியா அடிக்கடி கெட்ட ஜோக் எல்லாம் அடிப்பாள். பின்னாளில் பிரியா வசந்த் ஆகிவிட்டாள். குமரன், மேகலாவை வைத்து (ஆங்கிலக்கதைகளில் ஜேக், ஜெஸ்ஸி என்று வருவார்கள்) அப்படிக்கொஞ்சநாள் எழுதிக்கொண்டிருந்தேன். பலன், நான் சொந்த அனுபவத்தையே எழுதுகிறேன் என்று நினைத்துவிட்டார்கள்.மேகலா யார் எனறு தேடவும் தொடங்கிவிட்டார்கள். குமரன் இவ்வளவு கருமத்தையெலாம் செய்தானா என்று சந்தேகிக்கிறார்கள்.தொந்தரவு.
வாசகர்கள் ஒரு பாத்திரத்தின்மீது நிஜ எழுத்தாளனின் முகத்தை ஒட்டிவிட்டால் வாசிப்பனுபவம் ஒரு தளத்துக்கு மேலே நகராது. ஜே.ஜே  சில குறிப்புகளில் சுந்தரராமசாமியின் முகத்தை ஜே.ஜே மீது பொருத்தினால் அபத்தமாக இருக்காது?  அமுதவாயனை வாசிக்கும்போது என்னை நினைத்தால் மறுநாள் தெருவில் கண்டால் ஒதுங்கிப்போவார்கள்.
வாசிக்கும்போது எழுத்தாளனை மறந்துவிடுங்கள். டேட்டாபேசில் நோர்மலைசேஷன் என்று ஒரு வஸ்து இருக்கிறது. தகவல்களை வினைத்திறனுக்காக வேறுபிரிப்பது. எழுத்தாளன்-எழுத்து-வாசிப்பு-வாசகன் என்ற அமைப்பில் வாசிப்பும் வாசகனும் தனியே இயங்கவேண்டும். எழுத்தாளனும் எழுத்தும் தனியே இயங்கவேண்டும். எழுத்தும் வாசிப்பும் முடிந்தபின்னர் வேண்டுமானால் அதுபற்றி கலந்துரையாடலாம். ஆனால் எழுதும்போது எழுத்தாளன் இதை பலர் வாசிப்பார்களா, போய்ச்சேருமா என்று கவலைப்படக்கூடாது. அதேபோல வாசிக்கும்போது எழுத்தாளன் முகம் நினைவில் வரவும்கூடாது. நெடுங்குருதியில் திருமால் தவளையோடு பேசிக்கொண்டிருக்கையில் எஸ். ரா பின்னியிருக்கார்டா என்று வாசிக்கும்போதே நினைத்தால் அது தோல்வி. இரண்டு நடந்தாலும் அனுபவத்தில் ஒரு மாற்றுக்குறைவு ஏற்பட்டுவிடும்… பட்டிருக்கிறது.
ஆங்கில இலக்கியங்களை நான் பெரிதாக வாசித்தது கிடையாது. ஆனால் அதன் தமிழ் மொழி பெயர்ப்புக்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அந்த தமிழ் மொழி பெயர்ப்புகளை எழுத்தாளர்கள் அல்லாத ஆங்கிலம் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்களே எழுதியிருப்பார்கள். அவர்களின் எழுத்து லாவகம் சாதாரணமாகத்தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ராஜேஸ்குமாரின் எழுத்துக்களை விடவும், ரமணிசந்திரனின் எழுத்துக்களை விடவும் அயர்ச்சி தரக்கூடிய எழுத்துக்கள் தான் அவை. ஆனால் படைப்பை வாசித்து முடித்த பின்பு நல்லதொரு அனுபவத்தை பெறக்கூடியவாறாக உள்ளது. ஒரு திரைப்படத்தினை பார்த்து முடித்தவொரு உணர்வு நமக்குள் ஏற்படுகின்றது. ஆனால் தமிழில் நானறிந்து எந்தவொரு இலக்கியமும் அவ்வாறானதொரு உணர்வினை ஏற்படுத்தியதில்லை. நீங்கள் தமிழ் இலக்கியங்களை மாத்திரமல்லாது, ஆங்கில இலக்கியங்களையும் பெருமளவு வாசித்து வருகின்றீர்கள். மாறுபட்ட உணர்வுகளை இலக்கியங்கள் ஏற்படுத்துகின்றனவா?அல்லது அவ்விலக்கியங்களை எழுதிய எழுத்தாளன் ஏற்படுத்துகின்றானா?
 
ஒவ்வொரு வாசிப்பும் ஒவ்வொருதளம். ஒவ்வொரு உலகம். ஆங்கில இலக்கியம் வாசிக்கையில் நாம் உருவாக்குகின்ற உலகமும் தமிழ் இலக்கியம் உருவாக்கும் உலகமும் வேறுபட்டேயிருக்கும். கதைமாந்தர்களும் வேறுபட்டேயிருப்பர். மற்றும்படி அனுபவங்களை எல்லா இலக்கியங்களுமே கொடுத்திருக்கின்றன். ஜூஹும்பா லாகிரியின் இரண்டு நாவல்களும் சிறுகதைத்தொகுப்புகளும் அடித்துப்போட்டது. ஆகிமிஸ்ட் அப்படி. நோட்ஸ் புரம் அண்டர்கிரவுண்ட் அப்படி. காலித் ஹொசய்னியின் நாவல்கள் வாசித்தால் இப்படியெல்லாம் தமிழில் எழுதமாட்டோமா என்று ஏங்கவைக்கும். ஜோர்ஜ் ஒர்வல் மாதிரி சட்டயர் எல்லாம் எங்கே எழுதுவது. தமிழிலும் அப்படித்தான். எழுதித்தீர்த்திருக்கிறார்கள். கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் எழுதப்பட்டது இங்கேதான். கோபல்லகிராமம் இங்கேதான். கடல்கோட்டை இங்கேதான். கண்மணியாள்காதை இங்கேதான். பொன்னியின்செல்வன் கொடுத்த உணர்வை எப்படி விவரிப்பது? நிறையவேண்டாம். கம்பராமாயணமோ, சங்க இலக்கியமோ, பொழிப்புரையோடு வாசிக்கத்தொடங்குங்கள். நம்மாட்கள் பின்னிப்பெடலெடுத்திருக்கிறார்கள். முன்முடிபுகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு களத்தில் இறங்கினால் அவற்றின் முழுப்பரிமாணமும் விரியத்தொடங்கும்.
ஆக ஆங்கிலம், தமிழ் எனற பிரிவினைகளில் அவ்வளவு ஆர்வமில்லை. சொல்லப்போனால் எல்லா மொழிகளிலும் படைப்புகள் குவிந்துகிடக்கின்றன. நமக்குத்தெரிந்தது இந்த இரண்டுமொழிகளும் என்பது துரதிர்ஷடம். ஆனால் ஆங்கிலத்தில் நிறைய மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன என்பது இலாபம். தோஸ்தாவஸ்கி, போலா கோயேலா என்று அத்தனை பெரும் இலக்கியங்களும் அங்கே கிடைக்கின்றன. அவ்வளவு ஏன், நான் வாசித்த ஷோபாசக்தியின் முதல் புத்தகம் Traitor ஆங்கிலத்திலேயே(டெல்லி விமானநிலைய புத்தகக்கடையில் இருந்தது) வாசித்தேன். பின்னர்தான் தமிழில் அவர் நூலகள் என் கைக்கு எட்டியது.
ஆனால் தமிழில் அதிகம் எழுதப்படாத பல நூல் வடிவங்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. முக்கியமாக ஜனரஞ்சக விஞ்ஞான, கணித பொருளாதார நூல்கள். எனக்கு குறிப்பாக popular science மற்றும் பெரியவர்களுக்கான fantasy நூல்கள்.
சைமன்சிங் என்று popular science புத்தகம் எழுதுவதில் ஒரு கிங் இருக்கிறார். அவரின் அத்தனை புத்தகங்களையும் ஒரே மூச்சில் படித்து முடிக்கலாம். Fermat’s Last Theorem என்ற ஒரு புத்தகம். கணித நிறுவல் ஒன்றின் வரலாற்றை ஒரு திரில்லர்மாதிரி விறுவிறுப்பாக எழுதிர்யிருப்பார். லோங்கிடியூட் என்று ஒரு புத்தகம், நெட்டாங்குகளை எப்படி கணித்தார்கள் என்கின்ற வரலாறு சொல்லும் புத்தகம்.  அப்படியொரு ஓட்டம். வோல்டர் ஐசக்ஸன் ஐன்ஸ்டீனின் வாழ்க்கை வரலாறு எழுதியிருக்கிறார். அதனை ஒரு எட்டாம் வகுப்பு கெட்டிக்கார மாணவன் படித்தால் அவன் வாழ்க்கையே  மாற்றிவிடும். இப்படியெல்லாம் தமிழில் வருவதே இல்லையெனலாம். எழுதினாலும் இது இலக்கியம் இல்லை என்று எழுதியவனின் கன்னத்தில் அறைவோம். நாங்கள் இலக்கியத்துக்கு என்று பத்தடிக்கு பத்தடி பள்ளம் தோண்டி உள்ளேயே உட்கார்ந்துவிட்டோம். பள்ளிக்கூட மாணவன்கூட, வாசிக்கிறானோ இல்லையோ, இலக்கியத்தை அளவிட அடிமட்டத்தோடு திரிகிறான்.
டக்ளஸ் அடம்ஸ் எழுதியவை ஒரு விஞ்ஞான தலைமுறையையே உருவாக்கியது. இன்றைக்கும் அவர் ஒரு கல்ட் பிகர். சில வாரங்களுக்கு முன்னர் இறந்தாரே டெரி பிரச்சட்.  ஒரு பிரபஞ்சத்தையே சிருஷ்டித்து புகுந்து விளையாடியிருப்பார். தமிழில் அது இல்லை என்பது பெரும்குறை குறையே. சுஜாதா கொஞ்சம் முயன்றார். எண்டமூரி முயன்றார். இப்போது எம். ஜீ. சுரேஷ் எழுதுகிறார். ஆனால் படிக்க ஆள் இல்லை. கொண்டாடவும் ஆள் இல்லை. அடிப்படையில் தமிழ் கலாச்சாரமும் அவ்வகை எழுத்துகளுக்கு இடம் கொடுக்காது. எங்களுக்கு கடும்தமிழில் புரியாமல் புனைந்தால்தான் இலக்கியம். ஹார்ப்பர் லீ எழுதிய ‘To kill a mockingbird’, மிக இலகுவான மொழிநடையில் எழுதப்பட்ட நாவல். நாங்கள் அதனை சிறுவர் இலக்கியம் என்று சொன்னாலும் சொல்லுவோம். ஆக தமிழில் அபரிமிதமான இலக்கியங்கள் இருந்தாலும் அவை ஒருவித ஸ்டீரியோடைப்புக்குள் சிக்கிவிட்டனவோ என்று யோசிக்கத்தோன்றுகிறது.
என்னைக்கேட்டால், நிறைய வித்தியாசமாக வாசிக்க ஆர்வமென்றால் பல்லைக்கடித்துக்கொண்டு ஆங்கிலம் படிக்கவேண்டும்.  கொஞ்சம் கொஞ்சமாக அதற்குள் இறங்க அடர்ந்த காடே விரியும். எங்கள் மனமும்தான். அதன்பிறகு தமிழுக்குள் எழுத உட்கார்ந்தால் புதுத்தளங்களை தொடங்கலாம். ஏ.ஆர். ரகுமான் இசையில் செய்ததுபோல.
 
ஒரு புத்தகத்திற்கான விமர்சனமென்பது அந்தப் புத்தகத்திற்கான கட்டணமில்லா விளம்பரமென்று எங்கேயோ படித்தேன் ,அது உண்மையும் கூட.ஒரு புத்தகத்திற்கு விளம்பரம் அவசியம் தானா?இதனால் ஒரு மோசமான புத்தகம் கூட அந்தப் புத்தகத்தைப் பற்றிய எதிர்மறையான புரிதலை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறதல்லவா?
 
விமர்சனங்கள் இல்லாமல் எப்படி புத்தகங்களை வாசகனிடம் கோண்டுபோய்ச்சேர்ப்பது? எழுதியவனே, நான் ஒரு உலகப்படைப்பு செய்திருக்கிறேன், வாங்கிவிட்டீர்களா? என்று கூவமுடியாது. ஒரு படைப்பு எப்படிப்பட்டது, அது எப்படியான அனுபவங்களை கொடுக்கும் என்பதை விமர்சனங்களே கோடிகாட்டும். அதுவும் புது எழுத்தாளர்களுக்கு இப்படியான விமர்சனங்கள் முக்கியமானவை. ஆறாவடுவை நான் ஒரு இணையத்தள விமர்சனத்தை வாசித்தபின்னரே வாங்கிவாசித்தேன். கொலம்பசின் வரைபடத்தை சயந்தன் எழுதியதைப்பார்த்தே நானும் வாங்கினேன். நன்மையான விமர்சனங்களும் வரும். சொம்புதூக்கும் விமர்சனங்களும் வரும். நல்ல வாசகன் இரண்டையும் பிரித்துப்பார்க்கக்கூடியவன். புத்தகங்களுக்கான புரமோஷன் இங்கே பெரிதாக இல்லை என்றே சொல்வேன். எழுத்தாளரே கூவவேண்டிய இழி நிலையில்தான் இங்கே சூழல் இருக்கின்றன. ஒரு பத்திரிகை, உங்களைப்பற்றியும் உங்கள் புத்தகம் பற்றியும் சிறு குறிப்பு எழுதித்தாருங்கள், வெளியிடுகிறோம் என்கிறார்கள். எப்படி ஆரம்பிப்பது. ஜே. கே ஈழத்து வாழ்க்கையின் முக்கியமனான தருணங்… எழுதச்சொல்லுகிறீர்களா? கேவலமாக இல்லையா?
Harper Lee யின் ‘Go Set a Watchman’ என்ற நாவல் வெளியாகிறது. சும்மா இதனை இணையத்தில் தேடிப்பாருங்கள். ஆளாலுக்கு எழுதித்தள்ளுகிறார்கள். நியூயோர்க் டைம்சிலிருந்து ஹெரால்ட்சன்வரை இதைப்பற்றி எழுதாத பத்திரிகைகள் இல்லை. இந்த நிலை தமிழில் இல்லை. எஸ்.ராவின் புத்தகம் வெளியானபின்னர் எங்கேயாவது ஒரு மூலையில் குறிப்பிடுவார்கள். ஷோபாசக்தியின் நாவல் வெளியாகிறது எனறு அவரே அறிவிக்கிறார். லைக் பண்ணிவிட்டு எஸ்கேப் ஆகிறார்கள். இந்த நிலையில் கிடைக்கும் ஒன்றிரண்டு விமர்சனங்களையும் வேண்டாம் என்றால்?
 
இணையத்தில் எழுதுவதை விட புத்தகம் வெளியிடுவதென்பது செலவு கூடிய விசயம். இருந்தாலும் பல இணைய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் அச்சு வடிவில் வெளிவருவதையே விரும்புகின்றார்கள், அதை ஒரு கெளரவமாகவும் நினைக்கின்றார்கள். இந்தச் சிந்தனையென்பது எதனால் ஏற்படுகின்றது?
 
இரண்டு காரணங்கள். ஒன்று வலுவானது. மற்றையது வலுவற்றது.
புத்தகவாசிப்பு என்பது ஒரு தனி அனுபவம். எனக்கு அது இணையவாசிப்பு மூலம் கிட்டுவதில்லை. நான் இணையத்தில் சீரியசாக வாசிப்பது குறைவு. அதுவும் வெண்முரசு போன்ற நாவல்களை இணையத்தில் வாசிப்பதற்கு சான்ஸே இல்லை. ஆனால் வெண்முரசுவை புத்தகமாக வாசிக்க முடிகிறது. ஒரளவுக்கு ஜெயமோகனின் எழுத்துநடை மண்டைக்குள் ஏறுகிறது. ஒரு புத்தகத்தோடு பனிக்காலத்தில் ரயிலின் யன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும் அனுபவத்தை ஐபாட் எனக்கு கொடுப்பதில்லை. அதனாலேயே புத்தகங்களை வாங்கி வாசிக்கிறேன். அதனாலேயே எழுத்தாளர்கள் புத்தகங்களை பதிப்பிடுவதை ஆதரிக்கிறேன். அதற்காகத்தான் அவர்களும் புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள் என்றால் அது வலுவான காரணமே.
சிலர் புத்தகங்களை கெத்துக்கு வெளியிடுகிறார்கள். நானும் ரவுடிதான், நாலு புத்தகம் வெளியிட்டிருக்கிறேன் என்பதற்காக வெளியிடுகிறார்கள். ஆனால் அவரைத்தனிப்பட்ட ரீதியில் அறியாதவர் எவரும் புத்தகத்தை வாங்கமாட்டார்கள். இங்கே புத்தகம் வெளியிட்டால்தான் எழுத்தாளர் என்றும் ஏற்றுக்கோள்கிறார்கள். இணையத்தில் எழுதினால் அவர் வெறும் வலைப்பதிவாளர் என்கிறார்கள். இது தலைமுறை இடைவெளியாகவும் இருக்கலாம்.  பத்துவருடங்களில் இதெல்லாமே அடங்கிவிடும்.
இணையத்தில் தொடர்ந்து எழுதுங்கள். புத்தகங்களை அமேசன் போன்ற தளங்களினூடாக ஒன்.டிமாண்ட் மூலம் விற்றுக்கொள்ளலாம்.  புத்தகவாசிப்பை வேண்டுபவர்கள் அவரிஷ்டப்படி வாங்கிக்கொள்வார்கள். செலவும் குறைவு. சச்சினின் சுயசரிதம் இணையத்தில் வாங்கினேன். இரண்டு நாட்களில் சிட்டிக்கு வந்தது. பிரிண்டிங் எல்லாம் ஆஸியிலேயே செய்கிறார்கள். தபால்செலவு இல்லை. கடைகளுக்கு புத்தகத்தை விநியோகிக்க இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். நூலகங்களும் டிமாண்ட் இருந்தால் தாமகவே வாங்கிப்போடுகின்றன. ஆங்கிலத்தில் இதுதான் நடக்கிறது. தமிழிலும் நடக்கும். நம்மாளு மெதுவாய்த்தான் வருவாய்ங்க.
 
இலங்கையை பொறுத்தவரை இன்று பல குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்கள் உருவாகி வருகின்றார்கள். உங்களோடு ஒப்பிடுகையில் சிலரின் எழுத்துக்கள் சுவாரஸ்யமற்று இருப்பினும் அவர்களைப் பற்றி பலர் தெரிந்து வைத்திருக்கின்றார்கள், கொண்டாடவும் செய்கின்றனர். அவர்களைப் போன்று நீங்களும் உங்களை முன்னிலைப்படுத்தினால் எழுத்துலக ஜாம்பவானாக வருவதற்குரிய சாத்தியம் இருக்கின்றது. ஆனால் நான் கவனித்தவரையில் உங்களை நீங்கள் முன்னிலைப்படுத்தியது குறைவு. ஒரு குறுகிய பரப்புக்குள்ளேயே நிற்பதாக உணர்கின்றேன்.
 
முதலில் என் எழுத்துக்கள் சுவாரசியம் என்றமைக்கு நன்றி. என்னை நான் முன்னிலைப்படுத்துவதில்லை என்பதையும் ஓரளவுக்கு பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறேன். குறுகிய பரப்புக்குள் நிற்கிறேன் என்பதும் உண்மைதான். ஆனால் அதைவிட்டு வெளியே எப்படி வருவதென்று தெரியவில்லை. வரக்கூடாதென்றில்லை. வர எடுத்த முயற்சிகள் என்னை மீண்டும் குறுக்கியதாகவே முடிந்திருக்கின்றன.
நான் பத்திரிகைகளுக்கு எழுதுவதில்லை என்று நண்பர்கள் குறைப்படுவார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. ஆனந்தவிகடன் எடிட்டருக்கு என்னுடைய ‘குட்டி’ என்ற சிறுகதையை அனுப்பினேன். ‘கிடைத்தது’ என்ற பதில்கூட வரவில்லை. மனுஷ்யபுத்திரனுக்கு என் சிறுகதைகளில் பத்தை அனுப்பு பதிப்பிட தகுதியானவையா என்று கேட்டேன். பதிலில்லை. நண்பர் ஒருவர் சொன்னதற்கமைய சுஜாதா விருதுகளுக்கு கூட விண்ணப்பம் செய்தேன். விருதை விடுங்கள், ஒரு ரிப்ளைகூட கிடைக்கவில்லை. ஒரு சிறுகதைப்போட்டியிலும் இப்படித்தான் அவமானப்படுத்தினார்கள். எழுத்தாளர்களிடம், இந்தா பாருங்கள் நான் ஒரு கதை எழுதியிருக்கிறேன், வாசித்துச்சொல்லுங்கள் என்று கேட்க அந்தரமாக இருக்கிறது.  எதுக்கு கேட்கவேண்டும் என்று புத்தி தலையில் குட்டுகிறது. நீ ஏன் எழுதவந்தாய் என்பதை மறந்துவிடாதே என்கிறது.
புத்தகம் பதிப்பிடுதல் என்பதும் இன்னொரு தலையிடி. தாவு தீர்ந்துவிட்டது. ஒரு பதிப்பாளர் இரண்டாயிரம் டொலர்கள் வேண்டுமென்றார். இன்னொருவர் காசே தேவைப்படாது என்று சொல்லி என்னிடம் வந்தார். கடைசியில் கொல்லைப்புறத்துக் காதலிகளுக்கு என் கையால் நான்காயிரம் டொலர்கள் செலவாகிவிட்டன. பதிப்பாளர் ஒற்றைப்புத்தகம் விற்றுத்தரவில்லை. இந்தியாவிலாவது விற்றுத்தரக்கேட்டேன். ரிப்ளை இல்லை. நானே எல்லா புத்தகங்களையும் படலை மூலமே விற்கிறேன். அவரை குறை சொல்லவில்லை. எனக்கு இந்த விடயங்களில் அனுபவமில்லை. எழுதுவதில் இருக்கும் ஆர்வம், பதிப்பாளரை அணுகுவதில் இல்லை. அணுகும்விதமும் தெரியவில்லை. என் இயல்பும் இதற்கு பொருந்துவதில்லை. இதெல்லாவற்றையும் யோசித்தால் விசர் பிடிக்கும்! எழுதுவது இலகுவாகவும் இயல்பாகவும் அமைகிறது. படலைக்குள்ளேயே குறுக்கிக்கொள்கிறேன்.
இந்த இடத்தில் ஆக்காட்டியிடமும் பதாகையிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும். படைப்பு வேண்டுமென்று பல தடவை கேட்பார்கள். எழுதுவேன். முடித்தபின் பொறுமையில்லாமல் படலையிலேயே பதிவுசெய்துவிடுவேன். இனிவரும் காலங்களில் இவ்விரண்டு சஞ்சிகைகளுக்கும் அதிகம் எழுத முயலுகிறேன். அமுதவாயன் தொடர் ஆட்காட்டிக்காக சிறுகதையாக ஆரம்பித்தது. இறுதியில் குறுநாவலாகிவிட்டது.
ஒரு விடயம்.
என் எழுத்துகளை எனக்கு முந்தைய தலைமுறை வாசித்தால் நிறைய அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் பின்னைய தலைமுறை வாசித்தால்தான் அது நிலைக்கும். எனக்கு அங்கீகாரம் அவ்வளவு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் உண்டுதான். கொண்டையை மறைத்து பிரயோசனம் இல்லை. நான் யோகி கிடையாது. அதேசமயம் என்னைவிட ஒரு பத்து வயது குறைந்த தலைமுறை நிறைய வாசிக்கிறது என்பதில் அதீத பெருமையும் சந்தோசமும். ஒரு சிறு கதை எழுதினால் ஆயிரம்பேர் வாசிக்கிறார்கள். அது போதும். தமிழிலே எழுத முயலாதவர்கள்கூட பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதி அனுப்பியிருக்கிறார்கள். அது சந்தோசம். அவர்கள்தான் அடுத்த கதை எழுத என்னை இருக்கையில் அமர வைப்பவர்கள்.
சாரு நிவேதிதாவைவிட ஓவராக புலம்பிவிட்டேன்போல. லூஸ்ல விடுவோம்!
தற்போதைய அப்பிள் நிறுவன அதிபர் சில வருடங்களுக்கு முன்னர் இப்பதவிக்கு வரமுன்னர் லிங்கன் சொன்ன வாசகத்தை சொல்லியிருப்பார், அதை எப்போதும் நான் ஞாபகப்படுத்திக்கொள்வேன்.
I will prepare, and some day my chance will come.
அவ்வளவுதான்!

ஆமாம், நானும் சில இந்தியப் பத்திரிக்கைகளை கவனித்திருக்கின்றேன். இலங்கை எழுத்தாளர்களுக்கு அவர்கள் வாய்ப்புக் கொடுப்பது குறைவு. அப்படியே கொடுத்தாலும் அறியப்பட்ட எழுத்தாளர்களுக்கே அந்த வாய்ப்பினை அவர்கள் வழங்கி விடுகின்றார்கள். இளம் எழுத்தாளர்களை அவர்கள் கண்டு கொள்வதில்லையென்றே நான் எண்ணுகின்றேன். நிற்க.

இன்னுமோர் முக்கியமான கேள்வி . இலக்கியத்திற்கு சில மரபுகள் இருக்கின்றன. கவிதையென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், நாவலென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்ற சில மரபுகள் இருக்கின்றன. ஆனால் சம கால எழுத்தாளர்களோ அந்த மரபினை கட்டுடைக்கின்றார்கள். இது  இலக்கியத்திற்கு ஆரோக்கியமானதா?

இப்போது மரபு என்றிருப்பதும் முன்னரிருந்த மரபை கட்டுடைத்து வந்ததுதானே. உரைநடை என்பதே பின்னாளில் உருவானதுதான். இங்கே எதுவுமே சாஸ்வதம் கிடையாது. சங்க இலக்கிய மரபை மீறி வள்ளுவன் குறள் வெண்பா செய்தான்.  தன் கற்பனை சிருஷ்டிக்கு வெண்பா விதிகள் தடையென்று நினைத்தோ என்னவோ கம்பன் சற்று இலகுவான விருத்தத்துக்கு தாவினான். கடுமையான நீண்ட தமிழ் உரை நடைகள் கோலோச்சிய காலத்தில்தான் புதுமைப்பித்தன் ஒரு புரட்சியையே செய்தார். சுஜாதா அதை இன்னமும் கொஞ்சம் நவீனப்படுத்தினார். கோபல்லகிராமம் எந்த மரபுக்குள் வருகிறது? சிறுகதையா?  நாவலா? அனுபவ கட்டுரையா? ஜே. ஜே சில குறிப்புகளை எதற்குள் அடக்க? சீரோ டிக்ரீ வாசிக்கையில் திடீரென்று கேள்விபதில் அத்தியாயம் எல்லாம் வருகிறது. அதை எதற்குள் அடக்க? படைப்பாளிகளை நீ இதைச்செய், அதைச்செய் என்று யாரும் டிக்டேட் பண்ணக்கூடாது. பண்ணவும் முடியாது. உடைப்பதோ, இல்லை மரபுக்குள் நின்று எழுதுவதோ அவனிஷ்டம். அவன் வசதி. காலத்தின் போக்கில் அவற்றுள் எவை தகுமோ அவை நிலைக்கும். மற்றையவை காணாமல் போய்விடும்.
மொழி தன்னைத்தானே புதுப்பிப்பதில்தான் அதன் நீட்சி தங்கியிருக்கிறது. அதற்கு மரபைக்கட்டுடைத்தல் அவசியமாகிறது. ஆனால், இதோபார் நான் ஒரு புரட்சி செய்கிறேன் என்று மரபை உடைப்பது, கோழி நின்றுகொண்டே சீமெந்துத்தளத்தில் முட்டையிடுவதுபோல. உடைந்துவிடும்.  ‘புதியன புகுதல்’ என்று சொன்னார்களே ஒழிய ‘புகுவித்தல்’ என்று சொல்லவில்லை. இயல்பாக அமையவேண்டும். படைப்புக்கு தேவையானபோது, இருக்கும் மரபு படைப்பாற்றலுக்கு தடையாக இருக்கும்போது, உடைப்பதுதான் நிஜமான கட்டுடைத்தல். அது ஆரோக்கியமானது. தேவையானது.
 
ஜாக் ஓடியா. ஒரு பிரான்ஸ் தேசத்து மனிதர்.பிரஞ்சு மொழியை தாய்மொழியாக் கொண்டவர். வேறு இனம், வேறு மதம். இத்தனை தூரமான ஒரு மனிதர் இலங்கைத் தமிழ் அகதியொருவரின் அகச் சிக்கலைப் பற்றி படமெடுத்து கான் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான தங்கப் பனை விருதினையும் வென்றிருக்கின்றார். ஆனால் இலங்கையைச் சேர்ந்த எங்களின் படைப்புகள் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றது. சினிமாத்துறைக்கு மாத்திரமல்லாது, இலக்கியத்துறைக்கும் இது பொருந்தும். ஏன் இவ்வாறானதொரு நிலைமை? எங்களால் சர்வதேச விருதினை வென்றிடும் அளவிற்கு இலக்கியமோ அல்லது சினிமாவோ எடுக்க முடியாதா?
 

முதலில் ஜாக் ஓடியா வென்றது எங்களைப் பொறுத்தவரையிலே ஒரு சர்வதேச விருதே ஒழிய பிரான்சு படைப்பாளியைப் பொறுத்தவரையில் அது ஒரு உள்நாட்டு விருதே. அதே படத்தை ஒரு இலங்கையர் எடுத்திருந்தால் கான்ஸ் விருது கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறியே. அவருடைய திறமையையோ தகுதியையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் விருதுக்குரிய பின்னணிகளையும் நாம் ஆராயவேண்டியே இருக்கிறது. இதற்குமேல் படத்தைப்பற்றி கருத்துச்சொல்ல ஏதுமில்லை. படம் திரையரங்குகளுக்கு வரட்டும்.

நம்மாட்களில் சர்வதேச தரத்தில் படமெடுக்க ஆட்கள் இல்லையா என்றால், பதில் நாம் இன்னும் தயாரில்லை. நீண்ட வரலாற்றைக்கொண்ட பிரஞ்சு திரைத்துறையோடு நம்மை ஒப்பிடக்கூடாது. நம் திரைப்படத்துறை இப்போதுதான் நடை பயில்கிறது. அது ஒரளவுக்கு நிமிர்ந்து ஓடப்பழகும்வரை கூட்டு முயற்சிகளே அங்கீகாரங்களை கொண்டுவரும். அவ்வகை கூட்டு முயற்சிகள் தமிழ்நாட்டில் சாத்தியமில்லை. அங்கே எதைச்செய்தாலும் ஒருவன் அருவாள் தூக்குவதால் ஒரு நேர்மையான ஈழத்துப்படம் அங்கிருந்து உருவாவதை எதிர்பார்க்கமுடியாது. அப்படியே தப்பித்தவறி வந்தாலும் சென்சர்க்காரன் சீவிவிடுவான். நாங்கள் சமரசமில்லாத கூட்டு முயற்சிகளை ஒரளவுக்கு முன்னேறியிருக்கும் சிங்கள திரைப்படத்துறையோடு செய்யலாம். புலம்பெயர்ந்தவர்கள், மேலைத்தேயரோடு சேர்ந்து செய்யலாம். அதற்கு நல்ல ஸ்கிரிப்ட், லொபியிங், தொடர்புகள் வேண்டும்.  டானி போயல் Q and A வாசித்து ஸ்லம்டோக் எடுத்ததுபோல, யார் கண்டார் நாளை “Still counting the dead” வாசித்து ஸ்கிரிப்ட் எழுதினாலும் எழுதலாம். தீபன் இதற்கான முதல்படியாக அமையட்டும்.
தற்போதுள்ள ஈழத்தோடு தொடர்புபட்ட படைப்பாளிகளுள் கண்ணன் அருணாசலம் எமக்கு சர்வதேச விருதுகளை வென்றுதருவார் என்று நம்புகிறேன். எதைப்பற்றியும் யோசிக்காமல் தரம், செய்நேர்த்தியை மாத்திரமே நம்பி எடுக்கப்படும் ஆவணப்படங்கள் அவருடையது. அவர் அல்ஜசீரா, ஐஆம் மூலம் வெளியிட்ட படைப்புக்கள் உலகத்தரமுடையவை. ஆனால் அவரை நம் மீடியாக்கள் எவையும் சீண்டுவதில்லை. வழமைபோல அவருக்கு ஒரு சர்வதேச விருது கிடைத்தபின்னரே தூக்கிவைத்து கொண்டாடுவார்கள். தலைவிதி.
இலக்கியத்தைப்பொறுத்தவரையில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் திறமை மட்டும் விருது வாங்க போதாது. தொடர்புகள் இல்லை. முதலில் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் வேண்டும். சோ.ப மட்டும் போதாது. அடுத்தது விருதுக்குழுவுக்கு கொண்டுபோகுமளவுக்கு லொபி பண்ணக்கூடிய பதிப்பாளர் கிடைக்கவேண்டும். நியூயோர்க்டைம்ஸ், ஏஜ் போன்ற பத்திரிகைகளில் பத்தி வரவேண்டும். போலா கோயல்லாவின் ஆகிமிஸ்ட் நாவல் முதலில் வேலைக்காகாது என்று ஸ்பானிய மொழியிலேயே பதிப்பிக்க தயங்கினார்கள். பின்னர் அது ஸ்பானிய மொழியில் சக்கைபோடு போட்டது. பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க ஒரு பெரிய பதிப்பு நிறுவனம் அவரை தொடர்புகொண்டது. பின்னர் என்ன நிகழ்ந்தது என்பது வரலாறு. இங்கே எந்த ஆசிரியரின் புத்தகம் சக்கை போடுகிறது? ஆயிரம் பிரதிகள் விற்பதற்குள் நாக்கு தள்ளிவிடும். நாங்களே ஆங்கிலத்தில் எழுதி பதிப்பாளரை அணுகினால்தான் உண்டு. நம் மத்தியிலிருந்து ஒரு ஆகிமிஸ்ட் உருவாக சாத்தியமே இல்லை.  சிலவேளை ஒரு எழுத்தாளர் ஆங்கிலத்திலேயே மூல நூலை எழுதினால் ஒரு காலித் ஹொசெய்னியாக சாத்தியம் உண்டு. குறைந்தபட்சம் சேட்டன் பகத், அரவிந் ஆடிகோவாக கூட வரலாம். சமயத்தில் புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையிடமிருந்து ஜூகும்பா லாகிரிமாதிரி ஒரு எழுத்தாளர் உருவாகலாம்.
அதற்கு நாங்கள் தொடர்ந்து இயங்கவேண்டும். அடுத்த தலைமுறை பேஸ்புக்கிம் குட்டி சைஸ் ஸ்டேடஸ் கவர்ச்சிகளுக்குள்ளும் லைக்குகளுக்குள்ளும் சிக்காமல் சீரியசாக நாவல், சிறுகதை என்று எழுதவேண்டும். அப்படி எழுதுபவர்களுக்கு நாங்களும் நிறுவனரீதியான சப்போர்டுகளை கொடுக்கவேண்டும். உதாரணத்துக்கு கிரவுட்சோர்சிங் போன்ற கட்டமைப்புகளை நம் படைப்புக்களுக்காக உருவாக்கலாம். எழுநா ஒரளவுக்கு அதனை செய்தது. நின்று பிடிக்கமுடியவில்லை. அடிப்படை பிரச்சனை வாசிப்பு எண்ணிக்கைதான். End of the day, வாசகன் இல்லாட்டி படைப்புகள் எல்லாம் எழுத்தாளனின் டயரியாகிவிடும்.
முதலில் வாசிப்போம்!
 
நீங்கள் எழுத வந்ததிற்கான நோக்கம் நிறைவேறியதாக எண்ணுகின்றீர்களா?புது வரவு எழுத்தாளர்களுக்கு நீங்கள் ஏதாவது கூற விரும்புகின்றீர்களா?
அப்படியொரு மகா நோக்கத்தோடெல்லாம் எழுத வரவில்லை. எழுதுவது சுய திருப்தியை கொடுக்கிறது. போதை. அதற்காகவே எழுதுகிறேன். அதிலும் நான் ஒரு தவ்வல். தத்தித் தத்தி பேசும் குழந்தையிடம் உன் நோக்கம் நிறைவேறியதா என்று கேட்டால், “முதலில சொக்கிலேட் வாங்கித்தா”.
புதுவரவு எழுத்தாளர்களிடம் நான் கேட்க விரும்புவதுவும் அதே. “புதுவரவு எழுத்தாளர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? .
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.