குட்டிரேவதி,  கவிஞர், திரைப்பட பாடலாசிரியர்

முள்ளிவாய்க்கால் என்பது இன்றைய நாளில், அதாவது 2014 மே மாதத்தில் நம் நினைவெங்கும் பிம்பத் தொகுப்பாகப் பதிந்த ஒரு நிகழ்வு என்பதாகத் தான் கொள்ளமுடியும்.

புகைப்படங்களாகவும், வீடியோ படங்களாகவும் நம்மில் பதிந்துபோய் ‘பிம்பக்கூட்டத்தில்’ காணாமல் போகும் ஒன்றாகிவிடும் அபாயத்தையும் கடந்து கொண்டிருக்கிறோம்.

இன்று நமது அன்றாடச் சிந்தனைகள் எல்லாமும் சமூக இணையங்கள் வழியாக மாயவெளியில் கரைந்து கொண்டிருப்பதைப் போலவே, ‘முள்ளிவாய்க்காலின்’ தாக்கத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இதை விளக்கும் மொழியின் போதாமையையும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம் செய்யவேண்டியது என்ன என்ற கேள்விக்குக் கூட்டாக நாம் விடை காண வேண்டியிருக்கிறது. செயல்பாட்டுக்களம் வரைந்தெழுப்ப வேண்டியிருக்கிறது.

தேசிய இனப்போராட்டம், அடிப்படையில் சாதிய நோக்கில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். இதுவே, உயர்சாதி மக்கள் மீது இப்படியான ‘இனப்படுகொலை’ ஏவப்பட்டிருக்கமுடியாது என்பதையும் நாம் உணரவேண்டும். நம் இனத்தைப் பிரித்தாளும் சூழ்ச்சியில், வெற்றி கொண்டதன் ஒரு காய் நகர்வாக, ‘முள்ளிவாய்க்கால்’ அவர்கள் பார்வையில் அடையாளம் பெறுகிறது. ஆனால், நல் நம்பிக்கை தேடும் முகமாக, இன்று நம் இனத்தோரை இணைக்கும் ஒரே கண்ணீர் வெளியாக, ‘முள்ளிவாய்க்கால்’ நினைவுகளும் அவை குறித்து நம் நினைவுச்செல்களில் பதிந்து கிடக்கும் பிம்பங்களுமே நிறைந்துள்ளன.

நம் அறிவுச்சிந்தனை மரபைத் துண்டித்து வெறும் உணர்ச்சிகளுக்கான நீரோடையாய் மாற்றும் அரசியல் வெறுப்பு மற்றும் படுகொலை அரசியல்களை நாம் புரிந்துகொண்டு, வெல்லவேண்டியிருக்கிறது. இந்நிலையில் சூழ்ச்சி எங்கெங்கு எவ்விதம் செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்கும், மூர்க்கமாக அதை வெல்வதற்குமான படைப்பாற்றலை நாம் கொள்ள வேண்டியிருக்கிறது.

எல்லா ஊடக வெளிகளுக்குள்ளும், குறிப்பாக, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்குள் நமது கற்பனைகள் வழியாக வரலாற்றிற்கும் அரசியலுக்கும் கலைவடிவம் கொடுப்பது அவசியம். இதற்கு ஒரு தெளிவான தொலை நோக்குப்பார்வையும், ஒருங்கிணைவும், நம்மவரில் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத புரிதலும் தேவைப்படுகிறது. இன வெறுப்பின் பெயரால் படு கொலைசெய்யப்பட்ட ஒவ்வோர் உயிரின் கூக்குரலுக்கும் நேர்மையான பணிவிடையாகும்.

மாலதி மைத்ரி, கவிஞர்:

ஈழத் தமிழர்கள் அனைத்துலக ஒத்துழைப்புடன் பாசிச இராணுவ கண்காணிப்பின் கீழ் அடிமைகளாக்கப்பட்ட பின் தமது இனப்பேரழிவைத் துயரைத் துக்கத்தை நினைவுக்கூற அனுமதி மறுக்கப்படுகிறது. பொதுவெளியில் ஒன்றுகூடத் தடை விதிக்கப்படுகிறது. தமிழர்கள் நடைபிணங்களாக வாழும் போதும் இன்றும் சிலர் ஒன்றுப்பட்ட தேசியத்தைக் கட்டியெழுப்ப சிங்கள பேரினவாத அரசுக்கு கரசேவையும் கருத்தியல் சேவையும் நாடுக்கடந்து நடத்துகிறார்கள். முள்ளிவாய்க்கால் தமிழின பேரழிப்புக்கு பின் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் அநீதிகளும் தமிழீழம் உருவாவதன் வரலாற்றுத் தேவை மேலும் உறுதிப்படுகிறது. சர்வதேச சமூகங்கள் ஈழத்தமிழர்களுக்கான நீதியை எந்த தலைமுறையில் வழங்கப்போகின்றன. விபூஷிகா தன் அண்ணனைக் கேட்பது போல் இலங்கைத் தமிழர்கள் அவ்வளவு எளிதாக தமிழீழத்தைக் கேட்க முடியாது. அதற்காக தமிழர்கள் தமிழீழக் கோரிக்கையைக் கைகழுவிவிட்டார்களென ஈரக்குலைகளை அறுத்தெறிந்துவிட்டு யாரும் பொய்ச்சாட்சியம் அளிக்க வேண்டாம்.

செ.சண்முகசுந்தரம், எழுத்தாளர், தஞ்சாவூர்.

2009-ல் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட பேரழிப்பில் தென்னாசியாவின் பூகோள அரசியல் எப்படிப்பட்ட பங்கு வகித்தது என்பதை அறிவோம்.பல நூற்றாண்டுகால இலங்கையின் வரலாற்று இயக்கமும் இப்படுகொலையை சாத்தியமாக்கிற்று. வரலாற்றுப் பேரியக்கம் அறம் தவறுமானால் அவ்வரலாறு தேங்கி அழியும்.அறம் தவறும் வரலாற்றை நேர் செய்யவேண்டும்.அறத்தினால் மட்டுமே ஈழத்தை மீளெழுப்பமுடியும்.ஈழத்தமிழர்களின் பின்-முள்ளிவாய்க்கால் வரலாற்று இயக்கம் சுதந்திர ஈழத்தை நோக்கியதாகத்தான் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் ஒவ்வொரு அங்குலப்பயணத்தின் போதும் ஈழ,தமிழக,புலம்பெயர்ந்த தமிழன் ஒவ்வொருவனும் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டியது இதுதான்:”நம் பாதை சரியானதா? நேர்மையானதா?”எது நேர்மை என்பதை நமது மனசாட்சி நம்மை வழிநடத்தும்.ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயமும் வலிமையான ராஜதந்திர அரசியலை முன்னெடுக்கும்போது நமக்கு ஈழம் வசப்படும்.நம்முடைய ஒற்றுமை ஈழவிடுதலைப் பாதைக்கு ஒளியைப் பாய்ச்சும்.கோபாவேசப் பேச்சுகளும்,அவதூறுகளும் தமிழனின் ஒற்றுமையைச் சிதைக்கும். ஈழத்தமிழரோடு புலம்பெயர்ந்த தமிழரும்,தமிழகத் தமிழரும் அவ்வறப்போரில் ஈடுபடவேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்திசை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஈழம் மற்றும் இலங்கையின் வரலாற்று வெளிச்சத்தில்  விரைவில் தனி ஈழம் சாத்தியமாகும் என்ற என் எண்ணம் இன்றைய நாளில் மென்மேலும் வலுப்பட்டுக்கொண்டே வருகிறது

கண்ணன், ஆசிரியர், காலச்சுவடு.

முள்ளிவாய்க்கால் புதுயுகத்தின் முதல் இனப்படுகொலை. வரலாற்றுக் காலத்தில் தமிழருக்கு நடந்த ஒரே இனப்படுகொலை அல்லது காலனிய காலத்தில் தொடங்கிய ஒரு இனப்படுகொலைத் திட்டத்தின் உச்சம். தேர்தல் ஜனநாயகம் செயல்முறையில் இருக்கும் ஒரு நாட்டில், இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக, ஆளுங்கூட்டணியின் ஆதரவாளர்களாக இருக்கையிலேயே இனப்படுகொலை நடைபெற்றது ஒரு கொடுமையான முரண்நகை. இந்தப் பேரழிவு, கடந்துவந்த பாதை, நிகழ்காலச் செயல்முறைகள், வருங்காலத் தந்திரோபாயங்கள் பற்றிய ஆழ்ந்த பரிசீலனையைக் கோருகிறது. கடந்த காலத்தை நியாயப்படுத்துவதைவிட வருங்காலத்தில் செம்மையாக வாழ முனைவதே விவேகமானது. வீராப்புகளுக்கு விடைகொடுத்து விழிப்புணர்வைத் தமிழினம் கைகொள்ள வேண்டும்.

தீபச்செல்வன், கவிஞர், ஊடகவியலாளர்

தமிழ் இனத்தின் வரலாற்றில் முள்ளிவாய்க்கால் படுகொலை மறக்க முடியாதது. முள்ளிவாய்க்கால் படுகொலை நடத் காலத்தைவிடவும் இன்றே அது அதிகமும் தாக்கத்தை செலுத்துகிறது. இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்கால் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஒரு தீபத்தை ஏற்றவோ, அஞ்சலி செலுத்தவோ அனுமதியளிக்க முடியாதுஎன்று தடைவிதிப்பதுதான் அந்த மனித இனப்படு கொலையின் கொடூரத்தினை நமக்கு உணர்த்துகிறது. உண்மையில் எங்கள் மக்களுக்கு செய்யும் மெய்யான அஞ்சலி என்பது போர்க்குற்றத்திற்கும் இனப்படுகொலைக்குமான தீர்வை பெறுதலாகும். இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாதத்தால் ஒடுக்கி இன அழிப்பு செய்யப்பட்ட இலட்சக்கண்ககான மக்களுக்கா நீதி என்பது எஞ்சி வாழும் மக்களின் விடுதலை வாழ்வே ஆகும்.

செந்தில்நாதன், ஆசிரியர், தமிழ்ஆழி

ஈழத்தமிழ் மக்களுக்கு ஈழத்தைத் தவிர வேறு எந்த வரலாற்றுத் தீர்வு இல்லை என்பதை முள்ளிவாய்க்கால் நிரூபத்துவிட்டது. அதே சமயம் பல்முனை அரசியல் வியூகத்துடன் சர்வதேச செயல்திறனுடன்தான் அதை அடையமுடியும் என்பதையும் அது காட்டுகிறது. புலகளின் தாகத்தை உலகத் தமிழரின் தாகமாக அது மாற்றியிருக்கிறது.

வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன், கவிஞர், பாடலாசிரியர்.

ஒட்டுமொத்த உலகமும், தொழிலதிபர்களின் குடைக்குக் கீழ் வந்துள்ளது என்பதை பறைசாற்றும் நிகழ்வாகவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை பார்க்க முடிகிறது. உரிமைக் குரலெழுப்பும் தமிழினத்தை வேரறுக்க வேண்டும் என்ற தனது இனவெறிக்கு, மண்ணாசை பிடித்த தொழிலதிபர்களை, தொழிலதிபர்களுக்குத் தலையாட்டும் இந்தியா, சீனா போன்ற அரசாங்கங்களின் ராணுவ உதவியைக் கொண்டு லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துள்ளார் ராஜபக்ஷே!

ராஜீவ்காந்தியின் பெயரால் நடத்தப்பட்ட அந்த இனப்படுகொலைக்கு எதிராக உலகெங்குமுள்ள மனித உரிமை ஆர்வலர்களையும் ஒன்றுதிரட்டும் நிகழ்வாக இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் அமையட்டும். தொடரும் ஆள் கடத்தல், ராணுவ ஆக்கிரமிப்பு, கற்பழிப்பு, படுகொலை போன்ற துயரங்களுக்கு விடிவு காண வழி பிறக்கட்டும். தமிழீழ மக்களின் வாழ்வின் துயரம் முற்றுப் பெறட்டும்.

மகா.தமிழ்ப் பிரபாகரன், ஊடகவியலாளர்: 

பயங்கரவாத ஒப்பனைக் கொண்டு நடத்தப்பட்ட இனவாத போர் லட்சக்கணக்கான மக்களை கொன்று முடித்தும் அதன் வெறி தீராமல், ஒட்டு மொத்த தமிழ் நிலப்பரப்பையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என ராணுவமயமாக்கலையும் அதன் வழியே சிங்கள மயமாக்கலையும் வேகமாக நடத்தி வருகிறது. முள்ளிவாய்க்காலோடு போர் முற்று பெறவில்லை, சிங்கள காலனி மயமாக்கலை நிறைசெய்வதை நோக்கி இனவாத அரசின் போர் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்துப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

தி.திருக்குமரன், கவிஞர், ஊடகவியலாளர்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த நாட்களில் இருந்து ஈழத்தமிழர்கள் மீது சிங்களப்பேரினவாதத்தால் கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறைகளுக்கெதிரான சாத்வீகப்போராட்டம் பயனளிக்காத நிலையில் வேறுதெரிவற்று ஈழமக்கள் விடுதலைக்காகக் கடந்த 30 ஆண்டுகாலமாக நடைபெற்ற ஆயுதப்போராட்டம் வல்லரசுகளின் நேரடியான பங்களிப்புடன் சிங்கள அரசபயங்கரவாதத்தால் இலெட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புடன் கோரமான இனப்படுகொலையாக முள்ளிவாய்க்காலில் முடிந்து, தொடர்கிறது. புலிகளால் தான் நாட்டில் சமாதானம் இல்லையென்று சொன்னவர்கள் அவர்கள் தமது ஆயுதங்களை மெளனித்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் பல்வேறு வடிவங்களில் தமிழர்கள்மீதான இனப்படுகொலையை சிங்கள அரசு இன்னமும் தொடர்கிறது. இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட தம் உறவுகளை நினைவுகூரக்கூட அனுமதிமறுக்கப்பட்ட நிலையில் மிகுந்த அடக்குமுறையை எதிர்நோக்கியிருக்கும் அம்மக்களின் சுதந்திர வாழ்வுக்காக எம்மாலான வழிகளில் ஒற்றுமையுடன் இணைந்து செயலாற்றுவதுடன் இப்போரில் உயிர்நீத்த மக்களையும் எம்மினத்தின் விடுதலைக்காக தம் வாழ்வையே அற்பணித்த போராளிகளையும் என்றென்றும் நினைவிருத்துவோமாக.

கலாப் பிரியா, கவிஞர்.

ஆதியிலிருந்தே ஈழத்தமிழர்கள் தாயகத்தின் அரசியல் கட்சிகளை விட பொதுவான தங்கள் தமிழகச் சகோதரர்களையே அதிகமும் நம்பி வந்தார்கள்…ஆனால் முள்ளி வாய்க்கால் படு கொலையில் அந்த நம்பிக்கை பொய்த்துப்போனது…அந்த முள் ஒரு நாளும் நினைவிலிருந்து நீங்காது…இனிமேலாவது அவர்களின் ஆதி நம்பிக்கையைக் காப்பாற்ற இந்த நாளில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

திருநங்கை ரோஸ்,  நடிகை, இயக்குனர், செயற்பாட்டாளர்:

ஒரு இனத்தை சிதைத்தும், வறுத்திய்ம், படுகொலை செய்தும் தன் இனத்தை உயர்ந்ததாக காட்டிக்கொள்ளும் மனோபாவம் மனிதருள் வந்ததை எண்ணி என் மனித வாழ்க்கையை சாடுகிறேன். இது போன்றொரு அவலம் தான் அரசியல் என்றால் ஒன்று அரசியல் இருக்கும் இல்லை மனித இனம் இருக்கும். அரசியல் பேயாட்டங்கள் ஒழிந்தாக வேண்டும். அன்பு மலர வேண்டும். தமிழ் குடி போன்றொரு மூத்த குடியின் சிறப்புகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக வேண்டும். அன்பால் இனைவோம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s