ஓரிரு வருடங்களுக்கு முன்னர் தீபச்செல்வன் முகப்புத்தகம் மூலமாக எனக்கு அறிமுகமானார் .அதற்கு முதலே அவருடைய “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை” கவிதை தொகுப்பு மூலமாக அவரை பற்றி சிறிய அளவில் தெரிந்திருந்தேன் .ஒவ்வொரு படைப்பாளியும் தான் அழிந்த பின்னும் தன்னுடைய படைப்புகள் வாழவேண்டும் என்றே நினைக்கின்றான் .”என்னை அழித்தாலும் என்னுடைய எழுத்துக்களை அழிக்கமுடியாது” என்றார் ஆத்மாநாம் .அவற்றை போன்றதுதான் தீபச்செல்வன் கவிதைகளும் .காலத்தாலும் அழியாத அங்கீகாரம் பெற்றவை அவை .புதுக்கவிஞர்களில் பிரக்ஞைபூர்வமான கவிஞர்கள் மிகக்குறைவு .தீபச்செல்வனும் அவ்வாறான ஒரு கவிஞரே .ஈழத்து யுத்தம் பற்றியும் ,அவற்றின் சொல்லணா துயரங்கள் பற்றியும் இவர் மிக ஆழமாக அறிந்துவைத்திருகின்றார் .காலவரிசையில் கடைசியாக தன்னிடம் வந்து சேர்ந்திருக்கும் புதுக்கவிதையினை தன்னுடைய ஆழ்மன துயரத்தின் தோற்றப்பாடாக பொதுவெளியில் முன்வைக்கின்றார்.அதற்கான அவரின் திறந்த தைரியம் ஒருவகையில் அவரின் இருப்பிற்கான அச்சத்தினை ஏற்படுத்தினாலும் ,பிறிதொரு வகையில் அது அவரை  ஈழத்து கவிஞர்கள் வரிசையில் மிகமுக்கியமானவர் ஆக்குகிறது . இவருடைய பெரும்பாலான கவிதைகள் மரவுவழி சார்ந்தவை என்பதால் அவை பாமர மக்களால் புரிந்துகொள்ளமுடியாத  வடிவ தோற்றத்தினை கொண்டுள்ளன .இவரது ஆளுமை குறிப்பிட்ட பல  கவிதை தொகுப்புகளில் மிகச்சிறப்பாகவும் , ஒருசில கவிதை தொகுப்புகளில் மங்கலாகவும் வெளிப்படுகின்றது .ஒன்றின் பிரதிபலிப்பு உண்மையான தரமான படைப்பு ஆகாது என்ற விழிப்பு இவரிடம் கூர்மையாக செயல்பட்டு இருக்கிறது .குறிப்பாக மற்றைய ஈழத்து கவிஞர்களில் இருந்து இவர் எப்பொழுதும் தன்னை தன்னுடைய படைப்புகளின் மூலமாக பிரிவுபடுத்தி வெளிப்படுத்தவே முனைகின்றார் .தன்னுடைய கவிதையின் மூலம் இவர் தன்னையே முழுமையாக வெளிப்படுத்த முனைகின்றார் என்பது இவருடைய கவிதைகளை வாசித்து பார்த்தவர்களிற்கு புரியும் .வாழ்வில் மிகப்பெரிய மனித முரணான யுத்தம் ,அவை ஏற்படுத்தும் வாழ்வியல் அபத்தங்கள் ,வேதனைகள் ,இவை சார்ந்த உணர்வுகள் இவருடைய கவிதைகளில் அழுத்தம் பெறுகின்றன .தன்னுடைய கவிதைகளின் மூலம் ஒரு உயர்நிலை பாதிப்பினை ஏற்படுத்தவேண்டும் என்பதில் விருப்பம் கொண்டுள்ளார் .உண்மையான கவிதை என்றால் என்ன என்பதிலும் ,அவற்றின் உடல்கூறுகளை எப்படி சிதைக்காமல் வெளிப்படுத்தவேண்டும் என்பதிலும் தெளிவான ஞானத்தினை கொண்டுள்ளார் .

தீபச்செல்வன், 1983 இல் அக்டோபர் 24இல் ஈழத்தில் கிளிநொச்சியில் பிறந்தவர். கிளிநொச்சியில் இரத்தினபுரத்தில் வாழ்ந்து வந்தார். 1996இல் சத்ஜெய யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மணியங்குளத்தில் அகதியாக வாழ்ந்து வந்தார். ஆரம்பக்கல்வியை கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தொடங்கி, 1996 இல் சத்ஜெய யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கிளிநொச்சிக்கு மேற்காக உள்ள அக்கராயன் பிரதேசத்தில் மணியன்குளத்தில் இடம்பெயர்ந்திருந்து வந்திருந்த பாடசாலையான கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்து படித்தார்.2001 இல் இவரது சகோதரன் பிரசன்னா (வீரவேங்கை வெள்ளையன்) முகமாலையில் நடைபெற்ற போரில் மரணம் அடைந்தார். அக்காலத்தில் கிளிநொச்சி விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்டிருந்தது. தனது உயர்தரப் படிப்பினை மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பி தன் ஆரம்ப கால பாடசாலையான கிளிநொச்சி மத்திய கல்லூரியில் படித்தார். கலைப்பிரிவில் படித்து வந்தார். படிப்பில் வகுப்பிலே முதல் மாணவனாக திகழ்ந்து வந்ததார். பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த வேளை யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் தலமைப் பதவி வகித்தார். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் செயலாளராக பதவி வகித்து செயற்பட்டு, அப்பொழுது வன்னியில் நடைபெற்ற போரை நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார். ‘மௌனப்பிரார்த்தனை’ என்ற போராட்ட நிகழ்வை கடும் நெருக்கடிகளின் மத்தியில் ஒரு மாதகாலமாக நடத்தி வந்தார்.இவரது தாயார் மற்றும் தங்கை வன்னி இறுதி யுத்த களத்தில் வாழ்ந்தனர். அந்தக் காலத்தில் இவரை ஈழப்போராட்டத்திற்காக இயங்கியதன் காரணமாக இலங்கை இராணுவம் கடுமையாக எச்சரித்து வந்தது. ‘இறுதி எச்சரிக்கை’ என்ற சுவரொட்டி வாயிலாக யாழ் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த தீபச்செல்வனுடன் 14 பேருக்கு கொலை அச்சுறுத்தலை இலங்கை இராணுவம் விடுத்தது. பின்னர் சுற்றி வளைப்புகளில் விசாரணை செய்யப்பட்டும் இராணுவ முகாங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டார். தடுப்புமுகாமில் இருந்து திரும்பிய தனது தாய் தங்கையுடன் தற்பொழுது தனது சொந்த ஊரான இரத்தினபுரம் கிளிநொச்சியில் மீள்குடியேறி வசித்து வருகிறார்.தீபச்செல்வன், தமிழ்நாடிற்கு 2011இல் இடம்பெயர்ந்தார். தமிழ்நாட்டில் சென்னை மெரினாவில் வாசித்து வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலை படித்துவருகிறார்.

வாசிப்பு என்கின்ற வார்த்தையினை தீபசெல்வனின் கவிதைகள் நிராகரிகின்றன .மாறாக உக்கிபோயிருக்கும் மனித மூளையினை புதியதொரு பரிணாமத்தில்  சலவை செய்யும் யந்திரமாக அவை இருகின்றன .வாசிப்பு என்பதின் உண்மையான வித்தையோடு இவரை நாம் அணுகமுடியாது .இவரின் ஒவ்வொரு சொல்லுக்கும் ,ஏன் ஒவ்வொரு எழுத்துக்கும்  கூட நாம் கொஞ்சம் நின்று நிதானித்து அவை சொல்லவரும் கருத்துக்களை ஆழமாக அலசி அசை போட்டாலே அவற்றிற்கான  அர்த்தத்தினை  புரிந்துகொள்ளமுடியும் .இவரின் கவிதைகளை  வாசித்து புரிந்து கொள்ளல் என்பது இலேசுபட்ட காரியம் கிடையாது .மலை ஏறுவதற்கும் ,கடல் கடப்பதற்கும் எப்படி உண்மையான ,ஆழமான தேர்ந்த பயிற்சி தேவையோ அப்படியானதொரு வாசிப்பு பற்றிய உண்மையான ஆழ்ந்தஅறிவுகளையே  தீபசெல்வனின் கவிதை தொகுப்புகள் வேண்டி நிற்கின்றன .இவருடைய கவிதைகளை முதல்முதலாக வாசிக்கும் ஒருவன் தன்னுடைய மனதினுள்ளே இதுவரைகாறும் உணர்ந்திராத ஒருவித பரவசநிலையினை அடைந்துகொள்வது நிச்சியம் .மறுபடியும் ,மறுபடியும் வாசித்துப்பார்க்கும் எண்ணம் பரவசநிலையின் தொடர்ச்சி எனலாம் .அதைப்போன்ற ஒரு தொடர்ச்சிதான் தீபச்செல்வன்கவிதைகள் மீதான எங்களின் தீராக்காதல் .மிக சாதாரணமான விசயங்களை கூட தன்னுடைய கவிதையின் ஊடே அழகியலையும் ,கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட வர்ணிப்புக்களையும் கலந்து பிறப்புவிக்கின்றார்.உதாரணமாக “விளக்கெரியும் பொழுது”என்கின்ற தன்னுடைய கவிதையில்  மழை பெய்யும் ஒரு சாதாரண காட்சியினை கூட எப்படி வர்ணிக்கின்றார் பாருங்கள் .

                                                                                               நள்ளிரவுகளின் காலத்திலஇருண்ட தேசத்தில்   சூரியனுக்காய் காத்திருக்க
                                                                                              சிதை மண்ணிலிருந்து கற்கள் முளைக்க கைகளால் மூட முடியாத மழை இடியோடு பெய்கிறது.
வார்த்தைகளில் ஜாலம் கட்டி விளையாடுகின்றார் .மேற்கண்ட கவிதைகளிலிருந்து நாம் இரண்டு விடயங்களை எடுத்துக்கொள்ளமுடியும் .ஒன்று நிலம் ,இன்னொன்று மழை.கனவுகள் சிதைக்கப்பட்ட யுத்தம் தின்று துப்பிய நகரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது என்பதினை தன்னுடைய வித்தியாசமான கவிதை சொல்லாடல் மூலமாக வாசகர்களிற்கு படைக்கின்றார்.தீபசெல்வனை சமகாலத்தில் வாழும் மிக நேர்மையான கவிஞர்களில் ஒருவராக கொள்ளலாம் .அவ்வளவு எளிதில் அவர் வாழ்வையும் ,அவரது கவிதைகளையும் வெவ்வேறாக பிரித்துவிடமுடியாது .இவருடைய கனவுகள் எல்லாம் கவிதை என்கின்ற ஒன்றின் மேலேயே மிக பரந்துபட்ட அளவில் காணப்படுகின்றது .இவருடைய பெரும்பாலான கவிதைகள் அனுபவம் சார்ந்து எழுதப்பட்ட நாட்குறிப்பு புத்தகம் போல் இருக்கின்றது .தான் வாழும் சமூகத்திற்கு தன்னுடைய வேதனைகளை மிகமெல்லிய வடிவமான புத்தகத்தின் மூலம் …ஆனால் ஒரு அணுகுண்டினை விட மேலான தாக்கத்தினை பிரதிபலிக்க கூடிய விதத்தில் முன்வைக்கின்றார் .இவரது தொடர் படிப்பும் ,அதற்காக அவர் மேற்கொள்ளும் பிரயத்தனங்களும் இவருடைய கவிதைகளிற்கு உயிரூட்ட  காரணியாக அமைகின்றன .இன்னொரு வகையில் சொல்லபோனால் வாழ்க்கையின் சாரத்தை  தன் கவிதைகளில் மீது பிழித்து ஊற்றுகின்றார் .கவிதை என்ற சாளரத்தின் ஊடே அவை மெய்படுத்தப்பட்டவையாக இருகின்றன .
இவரது நூல்கள் :
  • பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, வெளியீடு 2008 : காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
  • ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம், வெளியீடு 2009 : உயிர்மை பதிப்பகம், சென்னை
  • பாழ் நகரத்தின் பொழுது, வெளியீடு 2010 : காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்
  • ஈழம் மக்களின் கனவு, வெளியீடு 2010 : தோழமை பதிப்பகம், தமிழ்நாடு
  • பெருநிலம், வெளியீடு 2011 : காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு
  • ஈழம் போர்நிலம், வெளியீடு 2011 : தோழமை பதிப்பகம், தமிழ்நாடு
  • மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு, வெளியீடு 2011 : ஆழி பதிப்பகம், தமிழ்நாடு
  • கூடார நிழல், வெளியீடு 2012 : உயிர்மை பதிப்பகம், சென்னை, தமிழ்நாடு
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s