ஒரு தாய் .ஒரு மகன் .((சிறுகதை))

மகுடம் இதழ் ஆறில் வெளிவந்த என்னுடைய சிறுகதை.

அந்த வீதி நீளமாக இருந்தது .அது மாசி மாத ஆரம்பம் என்பதால் பனி நான்கு இன்ச் அல்லது ஐந்து இன்ச் அளவிற்கு கொட்டி இருக்கவேண்டும் .குதிரையின் காலடித்தடங்களும் ,அவை இழுத்துவந்திருந்த கூட்சு வண்டிகளின் சக்கரதடங்களும் வெள்ளைத்தாளில் வரையப்பட்டிருந்த புரியாத ஓவியங்களைப் போல் குறுக்கும் நெடுக்குமாக நீண்டு இருந்தன .அந்த வீதியில் நடந்துபோகும் ஒருவர், கொஞ்சம் நிதானித்து தன்னுடைய காதுகளை கூர்மையாக்கி கேட்பாராக இருந்தால் …அந்த காட்டுப்பகுதியில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்துகொண்டு தங்களின் இரைகளுக்காக பெரும்குரலேடுத்து திரியும் ஒளியுடன் கூடிய கண்களினைக் கொண்ட ஓநாய்களின் குரூரமான ஊளை சத்தத்தினை கேட்க முடியும்.அந்தவீதியால் தான் ஒரு கூட்சு வண்டி அவசரமில்லாமல் வந்துகொண்டிருந்தது .குதிரை கிழட்டுக் குதிரை என்பது அதன் நடையினிலே தெரிந்துபோனது .தனக்கும் வலிக்காமல் …நிலத்திற்கும் வலிக்காமல் என்று சொல்லுவார்களே !அதைப்போல் நிதானமாக… வெகு நிதானமாக நடந்து வந்துகொண்டிருந்தது. .இன்னும் ஓரிரு வருடங்களில் செத்துவிடலாம். அல்லது இனி இதை வைத்து தொழில் நடத்த முடியாது என்று எப்பொழுது அதன் சொந்தக்காரருக்கு தெரியவருகின்றதோ அப்பொழுது அது ஏதாவது ஒரு கசாப்பு கடைக்காரனுக்கு அடிமட்ட மலிவுவிலையில் போய் சேர்ந்துவிடலாம் . நிச்சியமாக சொல்வதற்கில்லை .கூட்சு வண்டியினை ஓட்டி வந்தவருக்கும் வயது அதிகம் இருக்கும். குத்துமதிப்பாக சொல்லப்போனால் எழுபது அல்லது எழுபத்தியோன்று .குளிரினை தாங்க கூடிய பழைய மொத்தமான அங்கி ஒன்றினை அவர் அணிந்திருந்தார் .அதை அவர் வாங்கும் பொழுது நீலமாக இருந்திருக்க வேண்டும் .இப்பொழுது நிறம் மாறி ஒருவித பழுப்பு நிறத்தில் இருந்தது .தொக்கையான மனிதர் .கைகள் குள்ளமாக ,உருண்டையாக இருந்தன .கிட்டே போய் முகர்ந்து பார்த்தால் அவரிடமிருந்து “மலையாடு “வாசணை வரும்போல் தோன்றியது .தன்னுடைய வேலையையும் சேர்த்து தன் குதிரை கவனித்துக்கொள்ள இவர் நிம்மதியாக அடிக்கொரு தடவை தூங்கியவண்ணம் இருந்தார் .அனேகமாக இந்த வண்டி கிழக்குபகுதியில் இருகின்ற ஒரு கிராமத்திலிருந்து தன் பயணத்தை தொடங்கி, மேற்குபகுதியில் இருகின்ற இன்னொரு கிராமத்திற்கோ அல்லது நகரத்திற்க்கோ சென்று கொண்டிருக்கலாம் .அந்த வண்டிக்குள் தான் போர்வை ஒன்றினால் தன்னுடைய உடம்பினை முழுக்க போர்த்திக்கொண்டு  விளாமிடிர் யோகொவிச்உட்கார்ந்திருந்தான்.

2

அது ஒரு மழைக்காலம் . காலையில் இருந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது .இன்னும் தீரவில்லை .எப்போது தீரும் என்று அடித்துச் சொல்லமுடியாதபடி சிலநேரங்களில் குறைந்தும் ,சிலநேரங்களில் கூடியும் கொட்டிக்கொண்டு இருந்தது .சின்னவயதில் மழை வந்தால் நானும் தங்கை அன்னாவும் மழையில் நனைந்துகொண்டே பாட்டுப்பாடுவோம் .தெருவில் நாங்கள் மட்டுமே இருப்போம் .வேறு ஒருவரும் இருக்கமாட்டார்கள் .ஒருவிதத்தில் அது எங்களிற்கு சுகந்திரமாகவும் கூடுதல் உற்சாகமாகவும் இருக்கும் .என்தங்கைக்கு மழை என்றால் அலாதி பிரியம் .மழை எங்கே இருந்து அண்ணா வருகின்றது ? .வானத்திலிருந்து. வானத்தில் கடல் இருக்கா அண்ணா ?அப்பொழுது எனக்கும் சிறிய வயது என்பதால் வானத்தில் கடல் இருக்கின்றதா ?இல்லையா என்பது பற்றிய சமாச்சாரம் எல்லாம் தெரியாது .ம்ம்ம் இருக்கலாம் என்று பதிலுரைத்துவிட்டு அவள் அடுத்த கேள்வினை கேட்க ஆரம்பிக்கும் முன் சிட்டாக பறந்துவிடுவேன் .அதுஒரு காலம் .இப்பொழுது நான் வளர்ந்து பெரியவன் ஆகி விட்டேன் .என்னுடைய நிலை தெரியாமல் கன்னாபின்னா என்று கொட்டிக்கொண்டிருக்கும் பொழுது முட்டாள் மழை… நேரம் காலம் தெரியாமல் இப்படி கொட்டித்தொலைகின்றதே என்று கடிந்து கொள்வேன் .அப்படிப்பட்ட ஒரு சலிப்பு மழை தினத்தில் தான் என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் சண்டை வந்தது .

என்னுடைய அப்பாவினை எனக்கும் மிகவும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது .இருந்தாலும் பிடிக்கும் .என்னை பெற்றவர் அல்லவா ?அடிக்கடி என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் சண்டை வரும் என்றாலும் இது கொஞ்சம் பெரிய சண்டையாகத் தெரிந்தது .முடிவதற்கு குறைந்தது இன்னும் மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் பிடிக்கும் என்று தோன்றியது .அப்பா ஒரு விவசாயி .சொந்தமாக ஒரு வயல் நிலம் வைத்திருகின்றார் . அதில் அவர் கிழங்கு பயிரிடுவார் .அவரின் கிழங்கு அனேகமாக உள்ளூர் சந்தைகளில் தான் எடுபடும் என்றாலும் அதிசியமாக எப்பொழுதாவது அசலூர் வியாபாரிகள் வந்து நல்லவிலையில் வாங்கிப் போவார்கள் .அந்த மாதிரி நாட்களில் அப்பாவிற்கு சந்தோசமாக இருக்கும் .எனக்கும் நல்ல ஷு எடுத்துதருவார் .நான் அதை அணிந்துகொண்டு ஊரில் இருக்கும் எல்லா நண்பர்களிடமும் என்னுடைய அப்பா வாங்கித்தந்தது என்று பெருமையாக சொல்லிதிரிவேன் .நான்கு மாதங்களிற்கு தங்காது .கிழிந்து விடும் .((அல்லது கிழித்து விடுவேன் ))அந்தமாதிரி நேரங்களில் என் அப்பா எனக்கு அடிக்க மாட்டார் .கிழிந்தால் என்ன …அடுத்த தடவை வாங்கினால் போய்விடுகின்றது என்று கூறி என்னை கட்டிப்பிடித்து நெற்றியின் நடுப்பகுதியில் ஆறுதலாக முத்தமிடுவார் .அப்படியான அப்பாவின் சின்ன சின்ன செய்கைகள் கூட எனக்கு அம்மாவை விட அப்பாவின் மீது கூடுதல் பிரியம் வருவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் .என் அம்மா கஸகஸ்தானை சேர்ந்தவள்  .அவள்  சிறுமியாக இருக்கும்பொழுதே தன்னுடைய அம்மாவுடன் ரஷ்யாவிற்கு வந்துவிட்டாள்  .சொந்தமாக மலையாடு வைத்திருப்பவர்கள் தங்கள் மலையாடுகளை என் அம்மாவிடம் கொடுப்பார்கள் .அவள் அவற்றை காலையிலிருந்து மாலை வரை மேய்த்துவிட்டு வருவாள் .ஐந்நூறு அல்லது அறுநூறு ரூபிள் தேறும் .அதை யாருக்கும் கொடுக்க மாட்டாள்  .எங்கள் வீட்டு நிலவறையின் கிழே பழைய பொருட்களை வைப்பதற்க்கான ஒரு அறை இருக்கிறது .நிறைய பிரம்பு கூடைகள் இருக்கும் .எல்லாம் பழைய தூசி படிந்த பிரம்பு கூடைகள் .ஒவ்வொரு பிரம்புகூடைகளினையும் எடுத்து கீழே வைத்துவிட்டு கடைசியாக இருக்கும் பிரம்புக் கூடையுள் அதனை ஒளித்து வைப்பாள்  .யாராலும் அதை எடுக்கமுடியாது . .நிலவறை கதவின் சாவி அம்மாவிடம்தான் எப்பொழுதும் இருக்கும் .இதுவரைக்கும் எனக்கென்று எதுவும் அவள்  செய்ததில்லை .ஏதாவது  கேட்டால் எதற்கு என்னிடம் கேட்கின்றாய் ?உன் அப்பாவிடம் போய் கேட்க வேண்டியது தானே என்பாள்  .அப்படியான அம்மாவின் சின்ன சின்ன செய்கைகள் கூட அவரின் மீது எனக்கு வெறுப்பு உண்டாவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.

சண்டை இன்னும் ஓய்ந்தபாடில்லை .நாழிகை ஆகஆக சண்டையில் உக்கிரம் கூடிக்கொண்டே போனதுதான் மிச்சம் .பொருட்கள் கூட பறக்கத் தொடங்கியிருந்தன .எனக்கு எங்கேயாவது ஓடிப்போய் விடலாமா என்று யோசிக்கும் அளவிற்கு எரிச்சலாக இருந்தது .எதற்கு சண்டை என்றே விளங்கவில்லை .வழமையாக அப்பா குடித்துவிட்டு வரும்பொழுதுதான் அம்மா கோபத்தில் கத்துவாள் .இன்றைக்கு அப்பா குடித்தது போல் தெரியவில்லை .பிறகு எதற்காக சண்டை .யோசித்தால் காரணம் சிக்கும் என்று தோன்றவில்லை .என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு ஓரமாய் போய் நான் நின்றுகொண்டிருந்த பொழுதுதான், பறந்துகொண்டிருந்த பொருட்களில் ஒன்று என் அம்மாவின் தலை ஓட்டினை பதம் பார்த்தது .அடி பலமாக பட்டிருக்க வேண்டும் .அடிவிழுந்த கொஞ்ச நேரத்திலேயே மண்டை ஓட்டிலிருந்து ரத்தம் வழியத்தொடங்கியது .அப்பாவிற்கு இது தெரிந்திருக்குமோ தெரியாது . ஆத்திரத்தில் கையில் கிடைத்த ஒரு பொருளினை எடுத்து வீசி இருக்க வேண்டும் .வீசிய கையுடனேயே விருட்டென்று வெளியே கிளம்பி விட்டார் .அப்பா வெளியே படலையை திறக்கும் சத்தம் கேட்க்கும் பொழுதுதான் அம்மா ரத்தம் வழிந்த பகுதியை கையினால் பிடித்துக்கொண்டு நிலத்தில் சரியத் தொடங்கினார் .அநேகமாய் இந்த விபரமெல்லாம் அப்பாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .நான் அம்மாவின் கிட்டே போய் பார்த்தேன் .நரையும் கருப்பும் கலந்திருந்த அம்மாவின் தலைமுடி கற்றையினை விலக்கி பார்த்த பொழுது பிளவுபட்டிருந்த ஓட்டையும் அதனூடே வழியும் ரத்தமும் அப்பட்டமாய் தெரிந்தது .

அன்று போன அப்பாதான் .அதன் பிறகு வீடு திரும்பவே இல்லை .ஒரு தந்தி கூட போடவில்லை .ஆரம்பத்தில் அம்மா எங்கள் கிராமம் முழுவதும் சுற்றி திரிந்தாள் . இகும் …அப்பாவினை பற்றிய எந்த விபரமும் தெரியவில்லை .ஒவ்வொருதடவை படலை சத்தம் திறபடும் சத்தம் கேட்கும் பொழுதும் அம்மா அப்பாதானா என்பதுபோல் எட்டிப் பார்ப்பாள் .இல்லை என்று தெரிந்ததும் அவளின் முகத்தில் ஏமாற்றமும் சோகமும் கலந்திருக்கும் .அப்படியான வேளைகளில் வீட்டை விட்டு விரட்டி விட்டு இப்பொழுது தேடுகின்றாயா ?நாயே உன்னால் தானே அவர் வீட்டை விட்டு போனார் என்று உள்ளுக்குள் நினைத்துக் கொள்வேன் .அப்பா இல்லாதது எனக்கும் கவலைதான் .வீட்டில் ஏதோ ஒன்று குறைவதை போல் உணர்ந்தேன் .நாளாக நாளாக எனக்கும் அம்மாவிற்கும் அப்பாவின் நினைவு வருவது கொஞ்சம் குறைந்திருந்தது .படலை சத்தம் கேட்கும் பொழுது ஓடிவருவதை அம்மா நிறுத்தி இருந்தார் .வழமைபோல் மலையாடுகளை மேய்க்க போனாள் .அப்பா விவகாரம் கிராமத்திற்கு தெரிந்திருந்ததால் அம்மாவின் வருமானம் கொஞ்சம் அதிகமானது .அதில் பன்றிக்கால் சூப்பும் ,வான்கோழி கறியும் ,ரொட்டிகளும் செய்து தந்தாள் .அப்பா இருக்கும் பொழுதும் பன்றிக்கால் சூப் செய்து தந்திருக்கின்றாள் என்றாலும் அன்றைய பன்றிக்கால் சூப் கொஞ்சம் அதிகப்படியான சுவையுடன் இருந்தது .அம்மா மாறி விட்டாள் .பன்றிக்கால் சூப்பினை மட்டும் வைத்து சொல்லவில்லை .அன்று என்னை நகரத்து சந்தைக்கு அழைத்து சென்று மூவாயிரம் ரூபிளில் ஒரு புதிய ஷு வாங்கித் தந்தாள் .வீடு திரும்பியதும் அவளை கட்டிபிடித்து நெற்றியின் மையத்தில் முத்தம் கொடுக்க வேண்டும் போல் தோன்றியது .

வருடங்கள் ஓடிவிட்டன .என் அம்மாவின் முகத்தில் இப்பொழுது நிறையே சுருக்கங்களை விழுந்துவிட்டது .பற்கள் இன்னும் முழுவதுமாய் விழுந்துவிடவில்லைஎன்றாலும் ஒருவித பழுப்பு நிறத்தில் காணப்பட்டது .முடிகளின் அடர்த்தி குறைத்து குதிரையின் வாலினைப் போல் காட்சி அளித்தது .அளவுக்கு அதிகமாக குண்டாகி விட்டாள் .அப்படி ஆனதால் தான் என்னவோ அவள் உயரமும் கொஞ்சம் குறைந்தது போல் தோன்றியது .ரொம்பவும் மெதுவாக நடந்தாள் .கூன் கூட விழுந்து விட்டிருந்தது .முன்பு போல் அவளால் தனியே நடக்க முடியவில்லை .ஒரு கைப்பிடி தேவைப்பட்டது .எப்பொழுதும் ஒரு சாம்பல் நிற மேலாடை அணிந்திருப்பாள் .அதை அவள் அப்பாவின் நினைவாக அணிந்திருக்கக் கூடும் . என் அம்மாவிற்கு அடிக்கடி உடம்பிற்கு முடியாமல் போனது .அந்த மாதிரி நேரங்களில் வீட்டின் பின் புறத்தில் வளந்திருந்த பட்டையினை அவித்து குடிப்பாள் .அப்படியும் இருமல் நின்றபாடில்லை .கொக் …கொக் என்று நிமிடத்திற்கு ஒருதடவை இருமிக் கொண்டே இருந்தாள் .இழுத்து இழுத்து போட்டது .அப்படியிருந்தும் நேரம் கிடைக்கும் பொழுது மலையாடுகளை மேய்க்க போனாள் .இன்று நீங்கள் போகவேண்டாம் .நான் போகின்றேன் என்று சொன்னாலும் கேட்க மாட்டாள் . வரிந்து கட்டிக்கொண்டு போவாள் .சிலநேரங்களில் ஒளிந்திருந்து அவளை கண்காணிப்பேன் .மலையாடுகளை ஒரு இடத்தில் மொத்தமாக மேய செய்துவிட்டு ஒரு மரத்தின் கிழ போய் உட்காருவாள் .இருமல் வருகின்றபொழுது பட்டையினை எடுத்து எச்சிலால் அதை ஈரமாக்குவாள் .பின் பட்டை உலர்ந்து போகும் .உலர்ந்து போன பட்டையினை கைகளினால் உருட்டி உருட்டி பந்துபோல் செய்து அப்படியே வாயை திறந்து நாக்கை வெளியே நீட்டி தொண்டை குழியில் போடுவாள் .கொக் …கொக் சத்தம் சுத்தமாக நின்றுபோய் விடாது என்றாலும் கொஞ்ச நேரத்துக்கு இருமல் இம்சை அவளுக்கு இருக்காது .பெரும்பாலும் ஏதோ யோசனையில் தான் இருப்பாள் .சிலசமயம் தானாக ஏதோ கதைப்பாள் .என்ன கதைக்கின்றாள் என்று கிட்டே போய் காதை கொடுத்து கேட்டாலும் விளங்காது .சிலநேரம் அன்றைக்கு ஏன் அப்பாவுடன் சண்டை பிடித்தேன் என்று யோசிகின்றாளோ ,அல்லது தன்னுடைய வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி அர்த்தமில்லாமல் ஒரு இலக்கு இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது என்று யோசிகின்றாளோ ,அல்லது தனக்கு இப்படியான அவலம் நிரம்பின துணை இல்லாத வாழ்க்கையினை தந்து விட்டிருந்த கடவுள் இப்பொழுது என்ன செய்து கொடிருப்பான் என்று யோசிகின்றாளோ?எதுவுமே தெரியவில்லை .நான் கூட கேட்டதில்லை .தனியாக இருக்கும்பொழுது கேட்க வேண்டும் கேட்க வேண்டும் என்றுதான் நினைகின்றேன் .ஆனால் அவளின் முகத்தினை நேருக்கு நேர் சந்திக்கும்பொழுது என்ன காரணமோ கேட்கவேண்டும் என்று நினைத்திருந்த நிறைய கேள்விகள் கேட்கப்படாமலே போய்விட்டன .

அன்றொருநாள் வெளியே மழை இன்னும் கொட்டவில்லை .சிறிது நேரத்தில் கொட்டினாலும் கொட்டலாம் .அம்மா அப்பொழுதுதான் மலையாடுகளை மேய்த்து விட்டு வந்திருந்தாள் .வந்தவள் அவசரம் அவசரமாய் என்னை தேடினாள் .என்னைகண்டு பிடித்ததும் அவளின் முகத்தில் சிறிது பிரகாசம் தெரிந்தது .நிலவறைக்கு சென்றாள் .பழைய பிரம்பு கூடைகள் இறக்கப்படும் ஓசைகள் மெதுவாக கேட்டன .அதனை தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் மறுபடியும் அவை இருந்த மாதிரியே வைக்கப்படும் ஓசை கேட்டது . .படிகளில் ஏறி வரும்பொழுது அவள் அணிந்திருந்த பாவாடையில் கால்கள் சிக்குப்பட்டு தடுமாறி விழப்பார்த்தாள் .ஆனால் விழவில்லை .எப்படியோ சுதாகரித்துக் கொண்டாள் .இரண்டு கைகளையும் பக்கசுவர்களில் அழுத்தி தேய்த்து தான் விழாதவாறு பாதுகாப்பாக வர முயற்சி செய்யும் பிரயத்தனம் அவளில் தெரிந்தது ..அவள் கையில் ஒரு பழம் துணி இருந்தது .நேராக என்னிடம் வந்தாள் .வந்து எனக்கு அருகில் அமர்ந்து கொண்டாள் .அவளால் அதை இலவாக செய்யமுடியவில்லை .தன்னுடைய குள்ளமான கைகளை நிலத்தில் ஊன்றிக் கொண்டே உட்கார்ந்தாள் .மூக்கினால் பலமாக மூச்சு விடுவது பெரும் ஓசை போல் கேட்டது .இன்னும் சிலவருடங்களில் செத்துவிடுவாள் என்று நிச்சியமாக சொல்லலாம் .என் பக்கத்தில் உட்கார்ந்தவள் கையில் இருந்த பழம் துணியினை என்னிடம் கொடுத்து பிரித்து பார்க்க சொன்னாள் .பிரித்து பார்த்தேன் .உள்ளே ஐம்பது ,இருபது, பத்து ,நூறு என்கின்ற கணக்கில் சில கசங்கிய ரூபிள் தாள்கள் இருந்தன .எடுத்துக் கொள் .இவற்றைஎல்லாம் நான் உனக்காகவே சேர்த்து வைத்திருந்தேன் .எப்பொழுது இவை உனக்கு தேவைப்படலாம் என்று தோன்றுகின்றதோ அப்பொழுது இதை உன்னிடம் ஒப்படைக்கலாம் என்று வைத்திருந்தேன் .இப்பொழுது அதற்கான நேரம் வந்துவிட்டது என்றே நினைகின்றேன் .வைத்துக் கொள் .இதை நீ எப்படியென்றாலும் செலவழித்துக் கொள்ளலாம் .அவளிடம் சொல்வதற்கு எனக்கு எவ்வளவோ வார்த்தைகள் இருந்தாலும் ,ஒன்றுமே சொல்லாமல் எழும்பி போகும் அவளையே மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தேன் .

சிறிது நாட்கள் கழிந்திருந்தன .அம்மாவின் மீது எனக்கு அதிகப்படியான பாசம் வந்திருந்தது .அவளை கவனிக்க தொடங்கினேன் .அவள் பெருத்துக் கொண்டே போவது தெரிந்து கொஞ்சம் பயமாக இருந்தது .வயது எத்தனை என்று தெரியவில்லை .எண்பதிற்கு மேல் இருக்கும் என்று நினைகின்றேன் .அது சரிதானா ?அவளிடம் கேட்க வேண்டாம் என்று தோன்றியது .கேட்டால் துக்கம் அதிகமாகும் .உண்மை இப்படித்தான் இருக்கும்  என்று முன் கூட்டியே நாம் அறிந்துவைத்திருந்தாலும் நிச்சியமாக அப்படித்தானா என்று ஆராயாமல் இருப்பது மேல் .களைப்பில் அம்மா நிம்மதியாக தூங்குவது தெரிந்தது .அதே ஆடையுடன் தான் தூங்கிக் கொண்டிருந்தாள் .நாளைக்கு மறுபடியும் அதே ஆடையுடன் தான் ஆடு மேய்க்க போவாள் .அவள் எப்பொழுது கடைசியாக குளித்தாள் என்று தெரியவில்லை .மலையாடுகளுடன் பழகி பழகி அவளிடமும் மலையாடு வாசணை வந்தது .அவள் எனக்காகத்தான் உழைக்கும் பணத்தையெல்லாம் சேமித்து வைத்திருகின்றாள் என்பதினை நினைத்து பார்த்தபோது தொண்டைக் குழியில் ஏதோ இறங்குவதை போல் உணர்ந்தேன் ..யோசிக்க ஆரம்பித்தேன் .இவள் இன்னும் நிறைய நாள் இருக்கப்போவதில்லை .குறைந்தது .இரண்டு வருடம் ,அல்லது மூன்று வருடம் .மகன் என்று நான் மட்டும் தான் இருகின்றேன் .அன்னா இனி வருவாள் என்று தோன்றவில்லை .அப்பா போனபிறகு எனக்காக வாழ்ந்தவள் இவள் மட்டும்தான் .இனியும் இவள்தான் என் வாழ்கையில் .மகனென்று பிறந்து இதுவரைக்கும் எதுவும் செய்ததில்லை .இந்த வயதில் கூட எனக்காக வேலை செய்கின்றாள் .இவளுக்காக நான் என்ன செய்தேன் .ஒரு மேலாடை வாங்கிகொடுத்திருப்பேனா ?இவள் தான் என் தாய் .இவள் தான் என்னை பெற்றவள் .இவள் தான் என்னை வளர்த்தவள் .இவள் தான் .இவளே தான் .நான் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கினேன் .

அடுத்தநாள் நகரத்து சந்தைக்கு சென்று ஒரு அழகான கட்டம் போட்ட கையுறை வாங்கினேன் .அதை அம்மா விரும்புவாள் என்று எனக்கு தெரியும் .அவளுக்கு கையுறை என்றால் மிகவும் பிடிக்கும் .இளமையாக இருக்கும் பொழுது அவள் நிறைய கையுறை வைத்திருந்தாள் .சிகப்பு ,நீலம் ,ஊதா ,மஞ்சள் என்று விதம் விதமாக வைத்திருந்தாள் .குளிர் காலம் தொடங்கினால் அவற்றை எல்லாம் அவள் பிரியமாக அணிந்து பார்ப்பாள் .இன்றைக்கு நீலம் என்றால் ,நாளைக்கு ஊதா ,நாளைக்கு ஊதா என்றால் நாளை மறுதினம் சிகப்பு .நான் வீடு வந்தேன் .அம்மா இன்னும் வரவில்லை .அவள் வருவதற்கு இன்னும் நேரமிருகின்றது .கதவினை திறந்தேன் .கதவின் கிழே கடிதம் ஒன்று கிடந்தது .கையிலெடுத்து பார்த்தேன் .முகவரி பிட்டர் ஸ்பெர்க் என்று இருந்தது .அவசரமில்லாமல் பிரித்து பார்த்தேன் .அப்பாதான் அனுப்பியிருந்தார் .

அன்புள்ள மகனுக்குஎன்னை மன்னித்துவிடு .நான் செய்தது தூரோகம் என்று எனக்கு தெரியும் .அதிலும் முக்கியமாக உனக்கு செய்தது .என்ன செய்வது காலம் ஒரேமாதிரி இருப்பதில்லையே .ஒருவரை ஒருவர் பிரிவது நிதர்சனம் என்றாலும் எங்கள் வாழ்கையில் அது சிக்கிரமே நடந்து விட்டது என்று நினைகின்றேன் .இது எல்லாவற்றக்கும் கர்த்தரிடம் பதில் இருக்கிறது மகனே .அவர் சொல்லுகின்றார் பிரிவு என்பது துக்கம் என்பதும் நிரந்தரமல்ல .ஆனால் அவை வந்தே சேரும் .நீ வேணுமென்றால் என்னுடைய அறையில் ஒரு கருப்பு விவிலிய புத்தகம் இருக்கிறது .அது அப்பொழுதே பழுதாகிப் போய்த்தான் இருந்தது .இப்பொழுது இருக்குமா என்பது எனக்கு தெரியவில்லை .உன் அம்மா எடுத்து வீசி இருக்கலாம் .அவளுக்குத்தான் என்னை பிடிக்காதே ..சிலநேரம் இருந்தால் அந்த புத்தகத்தை எடுத்து படி .நான் மேற்சொன்ன விபரம் அதில் இருக்கிறது .இப்பொழுது நான் பிட்டர் ஸ்பெர்க்  இருகின்றேன் .ஒரு பணக்கார சீமாட்டியுடன் .அவள் கணவனை இழந்தவள் .பெரும் பணக்காரி .நான் உன்னை பற்றி அவளிடம் நிறைய சொல்லி இருகின்றேன் .அவளும் ஆசையுடன் கேட்பாள் .உன்னையும் இங்கே அழைத்து வந்து தன்னுடனே வாழ வைக்க முடியுமா என்று கேட்டாள் .இங்கே வந்தாய் என்றால் உனக்கு சொர்க்கம் காத்திருகின்றது .உன் தாய் வேண்டாம் .அவள் ஒரு மிருகம் .அவளுக்கு மலையாடுகளும் ருபிள்களும் தான் முக்கியம் .நானோ அல்லது நீயோ அல்ல .என்ன சொல்லுகின்றாய் ?ஆ …சொல்ல மறந்து விட்டேன் .உன் தங்கை அன்னாவும் இங்கே என்னுடன் தான் இருகின்றாள் .போன வருடம் தான் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்று எடுத்தாள் .இப்படிக்கு .அப்பா

கடிதத்தினை பார்க்க பார்க்க எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது .குரல் வளையிணை நசித்தே அவரினை கொல்லவேண்டும் போல் தோன்றியது .என் அம்மாவை பார்த்தா மிருகம் என்றாய் .என் அம்மாவினை பார்த்தா பணத்தாசை பிடித்தவள் என்றாய் .உனக்கு என்னடா தெரியும் என் அம்மாவினை பற்றி .என் அம்மா மேரி மாதாவிற்கு ஒப்பானவள் .அவளின் அன்பும் பாசமும் நிகரில்லாதவை .எவ்வளவு பணம் கொடுத்தும் அவற்றை உன்னால் வாங்க முடியாது .வானத்தில் இருந்து குதித்த சம்மனசுவை போன்றவள் அவள் .எப்படி உனக்கு மனது வந்தது என் தாயை பார்த்து அப்படி சொல்ல .நீ அவளை விட்டு பிரிந்து போனதும் அவள் அதற்காக எவ்வளவு வருந்தினாள் என்பது உனக்கு தெரியுமா ?நீ எப்படி அவளுக்கு துரோகம் செய்யலாம் .அம்மா வந்தாள் .கொஞ்சம் நனைந்திருந்தாள் .இனியும் இவளை தவிக்க விட முடியாது .வயது கூடிக்கொண்டே போகின்றது .இப்படியே தொடர்ந்து தனிமையிலே இருந்தால் சிலநேரம் அவளிற்கு பைத்தியம் பிடித்துவிடும் .சிலநேரங்களில் சுவருடன் எல்லாம் பேசுகின்றாள் .என்ன பேசுகின்றாள் என்றே சிலநேரங்களில் புரிவதில்லை .தனிமை அவளை மிகவும் பாதித்து விட்டது .நடுச் சாமங்களில் குந்தியிருந்து எதையோ யோசித்து அழுகின்றாள் .சிலநேரங்களில் மௌனமாக அழுகின்றாள் .சிலநேரங்களில் வாய்விட்டு பெரும்குரலேடுத்து அழுகின்றாள் . நானே அதை கேட்டு இருகின்றேன் .ஒரு ஏழைக்கு தன்னுடைய சோகங்களை எல்லாம் கண்ணீராக மட்டுமே வெளிப்படுத்த முடியும் என்பதினை நான் அவளின் கண்ணீரில் கண்டு கொண்டேன் .எதற்காக அழுகின்றாள் என்பதை இவள் கடைசி வரைக்கும் வாய் திறந்து சொல்லவே மாட்டாள் .முடிவெடுத்து விட்டேன் .என் அம்மாவிற்கு நான் செய்யும் ஒரே ஒரு நல்ல காரியம் இதுதான் .இனியும் இவளை தவிக்க விடக் கூடாது .இப்பொழுதே இவளை அப்பா இருக்கும் இடத்திற்கு அழைத்து போகின்றேன் .அழைத்துப்போய் அம்மா என்கின்ற வார்த்தைக்கு இருக்கும் புனிதத்தினை பற்றி விளக்குகின்றேன் .இவளை போல் ஒரு அம்மா உண்டா என்று கேட்கின்றேன் .பணத்திற்காக கட்டியவளையும் பெற்றவனையும் தவிக்க விட்டுவிட்டு போனாயே ?அப்படிப்பட்ட நீ மனிதனா ?அல்லது எந்தவித பலனையும் எதிர்பாராமல் தினம்தோறும் உன்னையே நினைத்து துன்பப்படும் இவள் மனிதனா என்று கேட்கின்றேன் .என் தாயின் காலடியில் உன்னை மண்டியிட வைக்கின்றேன் .பதகா இரு வருகின்றேன் .

திடீரென்று வண்டி சற்று குலுங்கியது .விளாமிடிர் யோகொவிச் முழித்துக் கொண்டான் .அவனின் பக்கத்தில் அவனுடைய அம்மா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் .வாய் பிளந்திருந்தது .அவள் மூச்சு விடுவது பெரும் சத்தமாய் கேட்டது .சிறிது நேர நிமிடத்திற்கு பின் அவன் வண்டியினை நிற்கச் சொல்லி கிழவருக்கு கட்டளை இட்டான் .வண்டி நின்றது .முதலில் தான் கீழே இறங்கினான் .பின் தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய தாயினை அள்ளிஎடுத்தான் .தான் தூக்கப்படுவது உணர்ந்து தாயும் முழித்துக் கொண்டாள் .எதற்காக என்னை கீழே இறக்குகின்றாய் யோகோ ?கொஞ்சம் இருங்கள் தாயே .சிறிது நேர மௌனத்திற்கு பிறகு யோகொவிச் இப்படி சொன்னான் .தாயே கோபித்துக் கொள்ளாதீர்கள் .சிறிது நேரம் இங்கேயே இருங்கள் .நான் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் வந்து உங்களை அழைத்துப் போகின்றேன் .சரி போ .ஆனால் நிச்சியமாக திரும்பி வந்துவிடுவாய் தானே .நிச்சியமாக வந்துவிடுவேன் .நீ நல்லவன் என்பது எனக்கு தெரியும் யோகோ .என்னை தனியே விட்டுவிட்டு எங்கேயும் போய்விடமாட்டாய் என்பதும் எனக்கு தெரியும் .நான் அவ்வாறு கேட்டது உன் மனதினை புண்படுத்தி இருந்தாள் என்னை மன்னித்துவிடு .ம்ம்ம் .வண்டியில் ஏறினான் .வண்டியினை புறப்பட சொன்னான் .அவனின் தாய் இவனைப்பார்த்து சிநேகமாய் கையசைத்தாள் .வண்டி குலுங்கி குலுங்கி சென்றது .அந்த கொண்டும் பனியிலும் அவனின் தாய் இவனையே பார்த்துக் கொண்டிருப்பது இவனுக்கு தெரிந்தது .தூரம் அதிகமாக அதிகமாக அவளின் உருவம் மங்கத்தொடங்கியது .இன்னும் கொஞ்ச நேரத்தின் இவன் போய்க்கொண்டிருக்கும் குதிரைவண்டி அவளுடைய பார்வையிலிருந்து மறையத்தொடங்கும் .அவள் தான் உறங்குவதற்கு ஏற்ற இடம் ஒன்றினை தெரிவு செய்து தன்னுடைய அழுக்கு பையினை தலைக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு உறங்கிப்போவாள் .ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கு ஒருமுறையும் குதிரைவண்டியின் சத்தம் கேட்கும் பொழுதோ அல்லது ஏதாவது ஒரு வண்டியின் உருள் சத்தம் கேட்கும்போழுதோ வருவது தன்னுடைய மகன் யோகோ தானா என் எழும்பி எழும்பி பார்ப்பாள் .ஒரு இரண்டு நாள் வரை எப்படியும் தன்னுடைய மகன் தன்னை அழைத்துப்போக வந்துவிடுவான் என்றே நம்பிக் கொண்டிருப்பாள் .இரண்டாவது நாளின் முடிவிலோ அல்லது மூன்றாவது நாளின் தொடக்கத்திலோ மகன் இனி வரவே மாட்டான் என்கின்ற உண்மை அவளுக்கு தெரியவரும் .

3

அந்த வீதி நீளமாக இருந்தது .அது மாசி மாத ஆரம்பம் என்பதால் பனி நான்கு இன்ச் அல்லது ஐந்து இன்ச் அளவிற்கு கொட்டி இருக்கவேண்டும் .குதிரையின் காலடித்தடங்களும் ,அவை இழுத்துவந்திருந்த கூட்சு வண்டிகளின் சக்கரதடங்களும் வெள்ளைத்தாளில் வரையப்பட்டிருந்த புரியாத ஓவியங்களைப் போல் குறுக்கும் நெடுக்குமாக நீண்டு இருந்தன .அந்த வீதியில் நடந்துபோகும் ஒருவர், கொஞ்சம் நிதானித்து தன்னுடைய காதுகளை கூர்மையாக்கி கேட்பாராக இருந்தால் …அந்த காட்டுப்பகுதியில் எங்கேயோ ஒரு மூலையில் இருந்துகொண்டு தங்களின் இரைகளுக்காக பெரும்குரலேடுத்து திரியும் ஒளியுடன் கூடிய கண்களினைக் கொண்ட ஓநாய்களின் குரூரமான ஊளை சத்தத்தினை கேட்க முடியும்.அந்தவீதியால் தான் ஒரு கூட்சு வண்டி அவசரமில்லாமல் வந்துகொண்டிருந்தது .குதிரை கிழட்டுக் குதிரை என்பது அதன் நடையினிலே தெரிந்துபோனது .தனக்கும் வலிக்காமல் …நிலத்திற்கும் வலிக்காமல் என்று சொல்லுவார்களே !அதைப்போல் நிதானமாக… வெகு நிதானமாக நடந்து வந்துகொண்டிருந்தது. .இன்னும் ஓரிரு வருடங்களில் செத்துவிடலாம். அல்லது இனி இதை வைத்து தொழில் நடத்த முடியாது என்று எப்பொழுது அதன் சொந்தக்காரருக்கு தெரியவருகின்றதோ அப்பொழுது அது ஏதாவது ஒரு கசாப்பு கடைக்காரனுக்கு அடிமட்ட மலிவுவிலையில் போய் சேர்ந்துவிடலாம் . நிச்சியமாக சொல்வதற்கில்லை .கூட்சு வண்டியினை ஓட்டி வந்தவருக்கும் வயது அதிகம் இருக்கும். குத்துமதிப்பாக சொல்லப்போனால் எழுபது அல்லது எழுபத்தியோன்று .குளிரினை தாங்க கூடிய பழைய மொத்தமான அங்கி ஒன்றினை அவர் அணிந்திருந்தார் .அதை அவர் வாங்கும் பொழுது நீலமாக இருந்திருக்க வேண்டும் .இப்பொழுது நிறம் மாறி ஒருவித பழுப்பு நிறத்தில் இருந்தது .தொக்கையான மனிதர் .கைகள் குள்ளமாக ,உருண்டையாக இருந்தன .கிட்டே போய் முகர்ந்து பார்த்தால் அவரிடமிருந்து “மலையாடு “வாசணை வரும்போல் தோன்றியது .தன்னுடைய வேலையையும் சேர்த்து தன் குதிரை கவனித்துக்கொள்ள இவர் நிம்மதியாக அடிக்கொரு தடவை தூங்கியவண்ணம் இருந்தார் .அனேகமாக இந்த வண்டி கிழக்குபகுதியில் இருகின்ற ஒரு கிராமத்திலிருந்து தன் பயணத்தை தொடங்கி, மேற்குபகுதியில் இருகின்ற இன்னொரு கிராமத்திற்கோ அல்லது நகரத்திற்க்கோ சென்று கொண்டிருக்கலாம் .அந்த வண்டிக்குள் தான் போர்வை ஒன்றினால் தன்னுடைய உடம்பினை முழுக்க போர்த்திக்கொண்டு  விளாமிடிர் யோகொவிச்உட்கார்ந்திருந்தான்.

Advertisements

One thought on “ஒரு தாய் .ஒரு மகன் .((சிறுகதை))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s