வீட்டு வாசலில் வந்து நின்ற கப்பல்!

”சென்ற வாரக் கட்டுரையில் கண்ணகி சிலை என்பதற்குப் பதிலாக ஒளவையார் சிலை என்று வந்திருக்க வேண்டும். நீலத்தின் கோரப்பிடியில் சென்னை நகரம் சிக்கிக்கொண்டிருந்த நிலைமையிலும் வழக்கம்போல் எனக்கு நடுக்குப்பம் மீன் மார்க்கெட்டுக்குப் போகவேண்டி இருந்தது. அப்போதுதான் தவறைக் கவனித்தேன். ஆச்சர்யம் என்னவென்றால், மீனே கிடைக்காது என்று நினைத்துக்கொண்டு போனால் அங்கே சில கடைகள் இருந்தன. மீன்களும் புதிதாக இருந்தன. இந்தப் புயலிலும் மீன் பிடிக்கப் போவார்களா? இந்தக் கேள்வி எனக்கு இன்று, நேற்று அல்ல; நினைவு தெரிந்த நாளிலிருந்தே இருந்துவருகிறது.நாகூரில் நான் சிறுவனாக இருந்தபோது மழை என்றாலே அது புயலாகத்தான் இருக்கும். ஐப்பசி மாத அடைமழை தவிர ஒவ்வொரு மழைக் காலத்திலும் புயல் இல்லாமல் இருக்கவே இருக்காது. 1952-ம் ஆண்டு அடித்த புயலை ‘பெரிய பொசல்’ என்பார்கள். கி.மு., கி.பி. என்று சொல்வதுபோல் குடும்பத்து உறுப்பினர்களின் ஜனன மரணங்களையும், மற்ற சம்பவங்களையும் ‘பெரிய பொசலை’ வைத்தே கணக்கிடுவார்கள். நான் ‘பெரிய பொசல்’ அடித்து ஒரு வருஷம் கழித்துப் பிறந்தவன். பெரிய புயல் நாகூர் மக்களின் நினைவில் தங்கிவிட்டதன் இன்னொரு காரணம், தர்காவின் பெரிய மினர்வாவின் கலசம் புயல் காற்றில் கீழே விழுந்து விட்டது.மழை பற்றி ரசனையோடு கவிஞர்கள் எழுதுவதைப் பார்த்தால் எனக்கு எரிச்சலாக இருக்கும். ஏனென்றால், மழை எங்களுக்கு எப்போதுமே ஒரு போர்க்காலத்தையே ஞாபகப்படுத்துவதாக இருந்திருக்கிறது. போர் பற்றிப் பள்ளிப்பாடப் புத்தகங்களில் படித்ததுதான். அது தவிர வார் ரீல் என்று அம்மா சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்தக் காலத்தில் இரண்டாம் உலகப்போர் பற்றிய செய்திகளை பிரிட்டிஷ் அரசு, திரைப் படங்களுக்கு முன்னால் வெளியிட்டுக்கொண்டிருந்தன.  டாங்கிகள், போர் விமானங்கள், குண்டு வெடிப்பு போன்றவைகளைக்கொண்ட அந்தப் போர்க்காட்சிகளின் ஆவணத் தொகுப்புதான் அந்த நாள் வார் ரீல். மக்கள் வெள்ளம் எம்.கே.டி. படங்களைப் பார்க்கும் அதே ஆர்வத்தோடு அந்த வார் ரீல்களையும் பார்த்தன; இப்போது ஹாலிவுட்டின் போர்ப் படங்களைப் பார்ப்பது மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு, பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை விட்டுக் கிளம்பிய பிறகு, சுதந்திர மதறாஸ் கவர்மென்ட்டின் செய்திகள் நியூஸ் ரீலாக சினிமாவுக்கு முன்னே வெளியிடப்பட்டபோது, அதுவும் எங்கள் ஊரில் வார் ரீல் என்றே சொல்லப் பட்டது. எல்லாவற்றையும்விட அக்கிரமம் என்னவென்றால், முதல்முதலாகத் தமிழ்நாடு அரசு குடும்பக் கட்டுப்பாட்டை அமுலுக்குக் கொண்டுவந்தபோது சிவப்பு முக்கோணத்தைப் பிரபலப்படுத்தி ஒரு விளம்பரப் படத்தை வெளியிட்டது. அதையும் என் அம்மா வார் ரீல் என்றே குறிப்பிட்டார்கள். (‘ஒலகம் அழியப் போவது… அசிங்க அசிங்கமா வார் ரீல் போட்றானுவோ இப்போ…’)

ஒரு போரை எதிர்கொள்வதற்கான முஸ்தீபுகளுடன்தான் மழைக்காலத்துக்குத் தயாராவார்கள் அம்மா. மூன்று மாத ஆயுள்கொண்ட அந்த மழைக் காலத்தைச் சமாளிப்பதற்காகவே மற்ற ஒன்பது மாதங்களும் வேலை செய்வதுபோல் இருக்கும். முக்கியமாகச் சமைப்பதற்கான எரிபொருள். சாணத்தைச் சேகரித்து ராட்டி தட்டி அதை வீட்டில் அடுக்கி வைத்துக்கொள்வார்கள். ஒரு பெரிய தாம்பாளம் சைஸுக்கு இருக்கும் அந்த ராட்டி. (வறட்டி என்றால் எங்கள் ஊரில் புரியாது. அதேபோல் றால் என்றால்தான் தெரியும்; எறால் என்றால் தெரியாது). ஒவ்வொரு வீட்டிலும் இப்படி அடுக்கு அடுக்காக ராட்டியைப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். அடுப்பு நன்றாக எரிய வேண்டும் என்பதற்காக ராட்டிக்குச் சாணி மிதிக்கும்போதே அதில் சிறிது வைக்கோலையும் பிய்த்துப்போட்டு மிதிப்பார்கள். சிலர் இப்படி ராட்டி தட்டி விற்பதும் உண்டு. வெறும் ராட்டியால் அடுப்பு எரிக்க முடியாது. விறகும் வேண்டும். விறகும் ராட்டியும் சேர்ந்தால்தான் எட்டு, ஒன்பது உருப்படிகளுக்கு மூன்று வேளையும் வடித்துக் கொட்டமுடியும். விறகுக்குக் கருவேல மரங்கள். அது ஒன்றும் சாமான்யமான வேலை அல்ல. கருவேல மரம் முழுதும் முட்கள் இருக்கும். அதையெல்லாம் ஜாலக்காகச் சமாளித்துக்கொண்டு மரங்களை வெட்டி, அதை மீண்டும் சிறிது சிறிதாக அரிவாளால் வெட்டிப் பிளந்து வெயிலில் காயப்போட்டு அடுக்கிவைத்துக் கொள்ளவேண்டும்.மழை என்றால் காட்டு மழை அடிக்கும். நாகூர், நாகப்பட்டினத்தில் வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் அதன் கடுமை புரியும். நாகூர், கடலின் கரையிலேயே அமைந்து இருப்பதாலோ என்னவோ வானத்துக்கும் பூமிக்கும் நீர் விழுது அமைத்ததுபோல் பொழியும் மழை. நாள் கணக்கில் ஒரு நிமிடம்கூட இடைவெளியே இல்லாமல் பொழிந்து கொண்டிருக்கும். கொஞ்ச நேரம் கூட வானம் தெளியாது. கார்த்திகை முழுவதும் தொடரும் இந்த மழைக்குக் கார்த்திகை அடை மழை என்றே அடைமொழி உண்டு. நாங்கள் வசித்த கொசத்தெருவைச் சுற்றிலும் உள்ள எலுத்தியாரங்குளம் மற்றும் இன்ன பிற குளங்களெல்லாம் வெட்டாறோடு கூட்டணி அமைத்து ஊரையே வெள்ளக் காடாய் மாற்றும். வயதான கிழங்கள் சாகும் காலமும் அந்த மாதமாகத்தான் இருக்கும் என்பதால், எங்கள் வீட்டைத் தொட்டுக்கொண்டு இருந்த சுடுகாட்டில் பிணம் வேகும் நாற்றம் மூக்கைவாட்டும்.  நாங்கள் இருந்த வீடு ஓட்டு வீடு. ஆனால், நான் அங்கே வசித்த 18 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஓடு மாற்றியதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஓடு முழுக்கவும் சுரைக்கொடி பரவி இருந்தது. ஒவ்வொரு சுரைக்காயும் ரெண்டு அடி நீளம் இருக்கும். எக்கச்சக்கமாகக் காய்த்துத் தொங்கும் சுரைக்காயை சும்மாவே எல்லோருக்கும் கொடுப்பார்கள் அம்மா. கையில் காசு இல்லாத நேரங்களில் அந்த சுரைக்காயை விற்பதற்காகப் பெரிய கோணிப்பையில் போட்டுக்கொண்டு ‘கொத்தான் சாவடி’க்குப் போவேன். அநேகமாக விற்காமல்தான் திரும்பக்கொண்டு வருவேன்.மழைக் காலங்களில் வீடு முழுக்கவும் ஒழுகும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பாத்திரம் இருக்கும். தரையெல்லாம் ஓதம் காக்கும். தண்ணீரை ஊற்றிவிட்டது போல் தரையிலிருந்து ஈரம் பொங்கிப் பொங்கி வரும். வீடு பூராவும் சாக்கைப் போட்டு வைப்பார்கள் அம்மா.  விறகு இருக்கிறது; ராட்டியும் இருக்கிறது. கொட்டுகிற மழையில் எதைச் சாப்பிடுவது? அந்த விஷயமும் மழையில்லாத ஒன்பது மாதங்களில் திட்டமிட்டப்படும். ஒரு ஆட்டை வாங்கி வெட்டி அதை உப்புக்கண்டம் போட்டு வைப்பார்கள் அம்மா. இரண்டு பக்கமும் கம்பு நட்டு, அதற்கிடையே கயிறுகட்டி அதில் மாமிசத் துண்டங்களை மாட்டி வெயிலில் காயவைப்பார்கள். எத்தனை நாள் என்பது எனக்கு ஞாபகம் இல்லை. மாமிசத் துண்டு நன்றாக உலர்ந்ததும் பானையில் போட்டு மூடி வைத்துவிடுவார்கள், மழைக்கால உணவுக்கு. மீனைக் கருவாடு என்பதுபோல் ஆட்டுக்கறியை உப்புக்கண்டம் என்பார்கள். இப்போது உப்புக்கண்டம் எல்லாம் காலாவதியான உணவுப் பொருளாகிவிட்டது.

வாழ்க்கையையே போராட்டமாக்கிவிடும் மழைக் காலத்தில் இரண்டு விஷயங்கள் சிறுவர்களாகிய எங்களுக்குப் பிடித்திருந்தன. தெருவில் ஓடும் வெள்ளத்தில் துணி போட்டு மீன் பிடிப்பது, மற்றும், கப்பல் விடுவது.  நாகப்பட்டினம் துறைமுகம் ஆழமில்லாதது என்பதால் கப்பலை நாங்கள் கிட்டத்தில் பார்த்ததில்லை. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கட்டுமரம் மட்டுமே.  அந்தக் காலத்தில் மின்சாரப்படகுகூட அதிகம் இருந்ததில்லை. என்ன காரணமோ தெரியவில்லை; எனக்கு சிறிய வயதிலிருந்தே விமானத்தைவிட கப்பல் மிகவும் வசீகரமானதாக இருந்திருக்கிறது. ஒருவேளை அது என்னுடைய இனரீதியான ஞாபகமாகவும் (racial memory) இருக்கலாம்.  தமிழர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே பாய்மரக் கப்பல்களில் கடலோடி இருக்கிறார்கள். கிழக்கும் மேற்குமாகச் சென்றிருக்கிறார்கள். கிழக்கே ஜாவா, சுமத்ரா, காம்போஜம் என்று பல நாடுகள். மேற்கே ஆப்பிரிக்காவரை போய்ப் பார்த்துவிட்டு இருண்ட கண்டம் என்று திரும்பிவிட்டார்கள்.  ‘கப்பலோட்டிய தமிழன்’ படம் பார்த்தபிறகு, என்னுடைய கப்பல் ஆசை அதிகரித்துவிட்டது. ஆனாலும் இன்று வரை அந்த ஆசை நிறைவேறவில்லை.  உலகம் சுற்றிய தமிழரான ஏ.கே. செட்டியார் உலகம் பூராவையும் கப்பலிலேயேதான் சுற்றியிருக்கிறார். விமானப் போக்குவரத்து அதிகரித்துவிட்ட இன்றைய நிலையில் என் கப்பல் ஆசை எப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை. ஒருமுறை அந்தமானுக்குக் கப்பலில் சென்று வரலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், 10 ஆண்டுகளாக அது யோசனை அளவிலேயே நின்றுகொண்டிருக்கிறது. இதில் இன்னொரு பெரிய வேடிக்கை என்னவென்றால், என் மகன் கார்த்திக் மரைன் இன்ஜினீயர். கடலிலேயேதான் வேலை. அவனுக்கோ கடலே பிடிக்கவில்லை. நிலத்தில் வேலை கிடைக்குமா என்று கேட்கிறான். நான் கடலுக்குப் போய்விடலாமா என்று யோசிக்கிறேன்.  கடலிலேயே மீனைப்பிடித்துச் சாப்பிட்டுக்கொண்டு மாதக் கணக்கில் கப்பலிலேயே இருந்துவிட அவாவுறுகிறது மனம்.  இப்படிப்பட்ட நிலையில் என் வீட்டு வாசலில் ஒரு கப்பல் வந்து நின்றால் எப்படி இருக்கும்? நீலம் புயலில் மாட்டிக்கொண்டு தரை தட்டிய பிரதிபா காவேரி, அப்படித்தான் எங்கள் வீட்டின்முன் வந்து நின்றது. (என் வீட்டுக்கும் கடலுக்கும் ஐந்து நிமிட நடை). நான் வழக்கமாக நடைப் பயிற்சிக்குச் செல்லும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் மரங்கள் விழுந்து நடக்க முடியாமல் இருக்கும் விஷயத்தைக் கேள்விப்பட்டு கடற்கரையில் நடக்கலாம் என்று போனால் ஒரு பிரமாண்டமான கப்பல் தரையைத் தொட்டுக்கொண்டு நின்றுகொண்டிருக்க, ஏராளமான ஜனம் அதை மொபைல் போனில் படம் பிடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. நான் செய்தித்தாள் படிப்பது இல்லையாதலால் (என்னிடம் டி.வி-யும் கிடையாது) ஒருகணம் அந்தக் கப்பலை அந்த இடத்தில் கண்டு மிரண்டே போய்விட்டேன். கார்த்திக் வந்து பார்த்துவிட்டு இதெல்லாம் சின்னக் கப்பல் என்றான்.  கப்பல் ஆட ஆரம்பித்ததுமே கேப்டன் லைஃப் போட்டில் எல்லோரையும் கடலில் இறங்கச் சொல்லியிருக்கிறார். அதில் ஒரு இன்ஜினீயர் உடனடி மரணம். ஐந்து பேர் காணவில்லை. ஒவ்வொரு பிரேதமாகக் கிடைத்துக்கொண்டிருக்கிறது.  இறங்கிய மற்றவர்களை மீனவர்களும் கரையோரப் பாதுகாப்புப் படையினரும் காப்பாற்றி இருக்கிறார்கள்.  ஆறு பேர் மரணம் என்றால் அது நமக்கு ஒரு செய்தி. ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அந்த மரணம் எவ்வளவு கொடூரமானதாக இருக்கும்? அதிலும் இறந்துபோன ஒருவர் இப்போதுதான் ஜூனியர் இன்ஜினீயராக சேர்ந்திருக்கிறார். இந்தக் கொடூர மரணத்துக்குத் துறைமுக அதிகாரிகளின் அலட்சியப்போக்கும் கப்பல் கம்பெனியின் பொறுப்பின்மையும்தான் காரணம் என்று தெரிகிறது. கேப்டனின் பொறுப்பின்மையும் இன்னொரு காரணம். இந்தக் கப்பல் கம்பெனி, ஒரு மந்திரிக்குச் சொந்தமானது (பினாமி). இரண்டு மாதமாக ஊழியர்களுக்குச் சம்பளம் தரவில்லை. இரண்டு தினங்களாகக் கப்பலில் இருந்தவர்களுக்கு உண்ண உணவில்லை. இந்த நிலையில் அந்தக் கப்பலில் இருந்தவர்கள் அத்தனை பேருமே மனோதிடத்தை இழந்து இருந்திருக்கிறார்கள். இதெல்லாம் புயலுக்கு முன்பு.  புயல் அடிக்கும்போது கப்பலிலேயே இருந்துவிடுவதுதான் ஆகப் பாதுகாப்பான ஒன்று. கடலில் லைஃப் போட்டில் இறங்குவது அல்ல. கேப்டனும் நம் ஊர் அரசியல்வாதிகளைப்போல் நடந்து கொண்டுவிட்டார். ஆனால் பாருங்கள்; கேப்டனோ சீஃப் இன்ஜினீயரோ கப்பலைவிட்டு இறங்கவில்லை. அவர்கள் மட்டும் பாதுகாப்பாக கப்பலிலேயே இருந்துவிட்டார்கள்.

மிக நிச்சயமாகத் தவிர்த்திருக்க வேண்டிய மரணங்கள் இவை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s