”இட்லியைப் போல் இன்னொன்று உண்டா?”

” மயிலாப்பூரில் எனக்குப் பிடித்த ஒரு உணவகம் உள்ளது. பெரும் பரபரப்பும் கூச்சலும் இல்லாத அமைதி தவழும் உணவகம் அது. காபி கொடுத்தால் பக்கத்திலேயே நின்று ‘நன்றாக இருக்கிறது’ என்று தலையசைத்தால்தான் நம்மைவிட்டு அகல்வார் பணியாளர். ஏதேனும் சரியில்லை என்றால் அந்தக் காபியையேவைத்து சரிசெய்கிறேன் பேர்வழி என்று இன்னும் அதைக்கெடுக்காமல், புதிதாக வேறு காபி போட்டுக்கொண்டுவந்து கொடுப்பார்கள். எனக்குக் காபியைச் சூடாக சாப்பிட வேண்டும். சூடாக என்றால் டபராவைத் தொடவே முடியாதபடி சூடாக இருக்க வேண்டும். கர்சீஃபைக்கொண்டு எடுத்துத்தான் குடிப்பேன். பலரும் சீனி, காபியில் கரைவதற்காக ஆர்ப்பாட்டமாக டபராவையும் டம்ளரையும் பிடித்து ஆற்றிக்கொண்டு இருப்பார்கள். அதெல்லாம் நமக்கு ஆகாது. ஸ்பூனால்தான் கலக்கிக் கொள்வேன். ஆறி விட்டால் யார் குடிப்பது? இந்தப் பிரச்னைக்காகவே யார் வீட்டிலும் காபி குடிப்பதில்லை.  ஏதாவது பொய்சொல்லிச் சமாளித்துவிடுவேன். மீறிக் குடித்துவிட்டால் ஆபத்து.  காபி என்ற பெயரில் ஏதோ ஒரு மட்டமான திரவத்தைக் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். முன்பெல்லாம் நான் காபிக்கொட்டையை அப்போதே வறுத்து, மெஷினில் போட்டுப் பொடியாக்கி, ஃபில்டர் செய்து குடிப்பது வழக்கம். இதற்கென்றே காபி மேக்கர் என்ற சிறிய மெஷின் உள்ளது.  இன்றைய junk food கலாசாரத்தில் இப்படிப்பட்ட ஒரிஜினல் டிகிரி காபியெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது. 

இப்படிக் காணாமல் போய்விட்ட இன்னொரு வஸ்து, இட்லி. இப்படிச் சொல்வது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். இன்று உணவகங்களில் இட்லி என்று கொடுக்கப்படும் இட்லி, அரிசி ‘மாவினால்’ செய்யப்பட்டது அல்ல.  அரிசியை நொய்யாக்கி, அதை ஊறப் போட்டு உளுத்தம்மாவு கலந்து செய்யப்படுவதே இன்றைய இட்லி. அதனால், அந்த வஸ்துவை விரல்களால் பிட்டால் ரவா இட்லியைப் போல் உடைந்துவிடுகிறது. (எங்காவது இட்லி உடையுமா?) அதற்காகத்தான் இட்லி சாப்பிடுவதற்காக இப்போதெல்லாம் ஸ்பூன் தருகிறார்கள். உண்மையான இட்லியை ஸ்பூன்கொண்டு சாப்பிட முடியாது.  அரிசியையும் உளுந்தையும் ஊறப்போடும்போதே அதில் கொஞ்சம் வெந்தயத்தையும் சேர்ப்பார்கள். அப்போதுதான் இட்லி மென்மையாக இருக்கும்.  சில பேர் நாலு கொட்டைமுத்துவைச் சேர்ப்பார்கள். கொட்டைமுத்து என்றால் வேறொன்றும் இல்லை; ஆமணக்கு விதைதான் அது. சிலருக்கு ஆமணக்கு என்றால் புரியாது. விளக்கெண்ணெயின் இன்னொரு பெயர் ஆமணக்கு எண்ணெய். இட்லி மென்மையாக இருக்க அரிசி உளுந்தை ஊறப்போடும்போதே கைப்பிடி அவலையும் அதோடு சேர்க்கலாம்.

இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலுமே (விதிவிலக்கு வேலூர்) ரவா இட்லியைப்போல் உதிரும், நொய்யரிசி இட்லியைத்தான் இட்லி என்ற பெயரில் தருகிறார்கள்.  அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கும். கர்நாடகம் முழுவதுமே இந்த நொய்யரிசி இட்லிதான். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. முன்பெல்லாம் இட்லிக்கு அரிசியையும் உளுந்தையும் ஆட்டுக்கல்லில் இட்டு கையால் ஆட்டுவார்கள். ஆனால், பெண் சுதந்திரம் என்ற ‘ஃபோகஸ்’ சுதந்திரம் வந்தபிறகு ஆட்டுக்கல் காணாமல் போய், கிரைண்டர் என்ற மாவாட்டும் எந்திரம் புழக்கத்துக்கு வந்தது. ஆனால், சில ஆண்டுகளில் கிரைண்டர்கூட பெண் சுதந்திரத்துக்குத் தடையாக இருப்பதாகப் பெண்கள் கண்டுகொண்டதால் அதுவும் காணாமல்போய் இட்லி மாவே ரெடிமேடாகக் கடைகளில் கிடைக்க ஆரம்பித்தது. இட்லி மாவா அது? ஆண்டவா! அந்த மாவில் இட்லி சுட்டால் ஒன்று அரிசிக் களி கிடைக்கிறது; இல்லாவிட்டால் வெள்ளை நிறத்தில் ஒரு கருங்கல்!

ஏன் ‘ஃபோகஸ்’ சுதந்திரம் என்று சொன்னேன் என்றால், ஒரு தலைமுறைக்கு முன்பு இருந்ததைவிட இப்போதைய பெண்கள் ஒன்றும் சுதந்திரமாக இருப்பதாகத் தோன்றவில்லை. கல்லூரிகளில் படிக்கும்போது என்னதான் ‘க்ளிவேஜ்’ தெரிய டீ ஷர்ட் அணிந்தாலும், டீ ஷர்ட்டுகளில்‘Hand Made’ என்ற இலக்கியத் தரமான வாசகங்களை அணிந்து Adam teasing பண்ணினாலும், ஒரு சாண் அளவுக்கு பேன்டீஸ் தெரிய ‘லோ’ ஜீன்ஸ் அணிந்தாலும், திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு, அவர்கள் சென்ற தலைமுறைப் பெண்களை விட எந்த விதத்திலும் சுதந்திரமாக இருப்பதாகத் தெரியவில்லை. சமையல், குழந்தைப் பேறு தவிர ஆஃபீஸ் வேலைக்கும் போய் வருவதுதான் சுதந்திரமா?

ஆறு குழந்தைகள் பெற்றார் என் அம்மா. எந்தக் குழந்தைக்கும் மருத்துவமனைக்குச் செல்லவில்லை. என் அம்மாச்சியே (அம்மாவின் அம்மா) பிள்ளைப்பேறைப் பார்த்து விடுவார்கள். டாக்டர், நர்ஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. குழந்தை பெற்று மாதக்கணக்கில் ஓய்வெடுப்பதும் கிடையாது. அந்தக் காலத்தில் ஆறு குழந்தையே கம்மி. பன்னிரெண்டு குழந்தை பெற்றவர்களெல்லாம் உண்டு. பன்னிரெண்டு பெற்றுவிட்டுக் குத்துக் கல்லைப்போல் இருப்பார்கள் பெண்கள். அந்த உடல் வலுவுக்குக் காரணம், பதின்மூன்று வயதில் மாத விலக்கு ஆரம்பித்தக் காலத்தில் இருந்து அவர்கள் சாப்பிட்ட உளுத்தங்களியும் அதுபோன்ற சத்துள்ள மற்ற ஆகாரங்களும்தான்.  இப்போதைய ’சுதந்திரப்’ பெண்கள் வெறும் junk food சாப்பிட்டுக் குனியவும் முடியாமல் நிமிரவும் முடியாமல் உடல் வலுவற்றுப் போய்விட்டார்கள். குழந்தைப்பேறு என்றால் சிசேரியன்தான்.  30 வயதிலேயே தள்ளாட்டம். உடலுக்குப் பயிற்சியே இல்லாததால் அளவுக்கு மீறிய உடல் பருமன். 50 ஆண்டுகளுக்கு முந்தைய பெண்களையும் இப்போதைய சுதந்திரமடைந்த பெண்களையும் உடல் ரீதியாக ஒப்பிட்டுப் பாருங்கள்.

அப்போதெல்லாம் கூட்டுக் குடும்பமாக இருக்கும்; அல்லது, தனிக் குடும்பமாகவே இருந்தாலும் ஒரு குடும்பத்தில் பத்துப் பன்னிரெண்டு உருப்படிகள் இருக்கும். வீட்டில் இப்போது இருப்பதைப்போல் குழாய்த் தண்ணீர் கிடையாது. கிணற்றில்தான் இறைக்க வேண்டும். குடிக்கவும் குளிக்கவும் மற்ற உபயோகங்களுக்காகவும் நூறு குடம் தண்ணீர் இறைப்பாள் ஒரு பெண். இப்போது இரண்டு குடம் இறைத்தாலே ஆம்புலன்ஸுக்கு போன் செய்ய வேண்டியிருக்கும் இல்லையா?

சரி, பெண் சுதந்திரத்தை விட்டுவிட்டு இட்லிக்கு வருவோம். என்னைப் பொறுத்தவரை இட்லியைப் போன்ற அற்புதமான உணவுப் பண்டம் உலகிலேயே இல்லை என்று சொல்வேன். ஆனால், தமிழர்கள் அப்படி நினைக்கவில்லைபோல் தெரிகிறது. இட்லியை விட்டுவிட்டு பீட்ஸாவுக்குப் போய்விட்டார்கள்.  இன்றைய தினம் நகரத்துக் குழந்தைகளின் பிடித்தமான உணவு பீட்ஸா. இதில் மிகப் பெரிய அரசியலே அடங்கி இருக்கிறது. இல்லாவிட்டால் இட்லியை விட்டுவிட்டு இத்தாலிய பீட்ஸாவை ஏற்றுக்கொள்வார்களா? இத்தாலியில் இட்லி இருக்கிறதா? நம்மூர்க்காரர்கள் அங்கே போய் திறக்கும் பிராஞ்ச்சைச் சொல்லவில்லை. இத்தாலிக்காரன் இட்லி சாப்பிடுகிறானா? இங்கே சென்னையில் தெருவுக்குத் தெரு பீட்ஸா கடைகள் மலிந்து கிடக்கின்றன. இதையெல்லாம் நடத்துவது இத்தாலியர்கள் அல்ல; தமிழர்கள். இத்தாலிக்காரன் இட்லிக் கடை வைத்திருக்கிறானா? இப்படி, இட்லி மறைந்து பீட்ஸா பரவியதற்குக் காரணம், இந்தியர்களின் தாழ்வு மனப்பான்மையும், அடிமை மனோபாவமும்தான். (பீட்ஸா என்ற இடத்தில் நீங்கள் இந்திராவின் இத்தாலிய மருமகள் பெயரையும் போட்டுக் கொள்ளலாம்; தப்பில்லை).

இட்லி அதன் ஒரிஜினல் தன்மையை இழந்து இன்று ஒருவித fake வடிவத்தை எடுத்திருக்கிறது. இன்னும் பத்தாண்டுகள்போனால் ஒரிஜினல் இட்லி எப்படி இருக்கும் என்பதே எல்லோருக்கும் மறந்து போயிருக்கும். ஏன் இந்த இட்லி விஷயத்தில் இவ்வளவு பதற்றம் கொள்கிறேன் என்றால், யாருக்கும் இதுபற்றி ஒரு புகார்கூட எழவில்லை என்பதுதான். அவர்கள் பாட்டுக்கு ஸ்பூனால் விண்டு விழுங்கி விட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். கிரைண்டரில் அரைக்கும் இட்லி, ஆட்டுக்கல் இட்லியைப்போல் இல்லாமல் களியாகவோ கருங்கல்லாகவோ இருக்கக் காரணம், மாவு அரைக்கும்போது எந்திரத்தில் உண்டாகும் சூடுதான்.  இந்தச் சூடுதான் இட்லியின் தரத்தையும் சுவையையும் கெடுத்துவிடுகிறது.  இதனால்தான் அம்மியில் அரைத்துச் செய்யும் ஆட்டுக்கறிக் குழம்பு தனி ருசியாக இருக்கிறது. ஒருபோதும் மிக்ஸியில் அப்படி வராது.

நான் வழக்கமாகச் செல்லும் அந்த உணவகத்தில் நமது பாரம்பரிய உணவில் இருந்து மேற்கத்திய உணவுவரை அத்தனையும் கிடைக்கும். அந்த உணவகத்தின் மற்றொரு விசேஷம், அங்கே இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமாப் பாடல்களின் ஆபாசக் கூச்சலும் காட்சியும் இருக்காது. நம் பாரம்பரிய இசையும் பாடலும்தான் மிக மெலிதாக வந்துகொண்டிருக்கும். ‘அதைக்கூட பார்க்க வேண்டாம்; செவிகளால் கேட்டால் போதும்’ என அந்தப் பெட்டி என் கண்களில் படாத இடமாகப் பார்த்து அமர்ந்துகொள்வேன்.

மேலே கூரை இல்லாத திறந்த வெளி உணவகம் அது. வெயிலோ மழையோ இருந்தால் சுற்றி வர அமைக்கப்பட்டிருக்கும் தாழ்வாரங்களில் அமர்ந்து கொள்ளலாம். சுற்றிலும் ஏகப்பட்ட மரவகைகள். நுணாமரம்கூட உண்டு. நுணாமரத்தை நாகூரில் பார்த்தது. இப்போது அதன் காயில் இருந்து நோநி என்ற ஜூஸ் தயாரித்து விற்கிறார்கள். ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது; ஆனால் ஐந்து ஆண்டுகளாவது தொடர்ந்து சாப்பிட வேண்டும். இரண்டு நாள் சாப்பிட்டுவிட்டு கையை மடக்கிப் பார்க்கக்கூடாது. எதற்கு இத்தனையும் சொன்னேன் என்றால், இப்படிப்பட்ட உணவகத்தில்கூட நொய்யரிசி இட்லிதான் தருகிறார்கள்!

அந்த உணவகத்தில் சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள். வெளிப்பார்வைக்கு அவை மிகச் சாதாரணமாகவே தோன்றினாலும் இந்தியர்களின் ‘ஜீன்’லேயே ஏதோ பிரச்னை இருக்கிறது என்று நினைக்கும் அளவுக்கு என்னை வெகுவாக பாதித்துவிட்டன.

1. நொய்யரிசி இட்லி என்பதால் அதை விட்டுவிட்டு ஸாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என் அருகே வந்த உணவகச் சிப்பந்தி, அவர் அந்த உணவகத்துக்குப் புதிது என்று நினைக்கிறேன்; அப்போதுதான் அவரை முதல் முறையாகப் பார்க்கிறேன். ”உங்களிடம் ஒன்று கேட்கலாமா?” என்று பணிவாகக் கேட்டார். நானும் சரி என்று தலையசைத்தேன். பத்து நிமிடங்கள் விடாமல் பேசினார். நான் என்ன சாப்பிட்டேன், எப்படிச் சாப்பிட்டேன் என்றுகூட மறந்து போனேன். அவர் பேசப் பேச என் தலையில் ஆயிரம் கரப்பான் பூச்சிகள் மேய்வதைப்போல் இருந்தன. பத்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டு அவர் சொன்ன விஷயம் இதுதான்: அவருடைய வீடு தொலைவில் (கிண்டி) இருக்கிறது. அதனால், மயிலாப்பூருக்கே வந்து விட்டால் வேலைக்கு வருவதில் சிரமம் இருக்காது. அதனால், அவருடைய மனைவிக்கு நான் ஒரு வேலை வாங்கித்தர வேண்டும். தந்தால் அவர் மயிலாப்பூரிலேயே குடியேறிவிடலாம்.

ஆயிரம் கரப்பான் பூச்சிகள் தலையில் மேயும் உதாரணம்கூட தவறு. இதோ சரியான உதாரணம்: சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று நாலைந்து பேர் வந்து நம்மை உருட்டுக் கட்டையால் தாக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவர் பேச்சு. அதைத் தடுக்கும் தந்திரமும் எனக்குத் தெரியவில்லை. ஸாண்ட்விச்சை வாயில் அடக்கிக்கொண்டே ‘ம்’ போட்டுக்கொண்டும், தலையாட்டிக்கொண்டும் இருந்தேன். அடப்பாவிகளா, ஒருத்தனைப் பார்த்த உடனேயே எப்படி இதுபோல் அத்துமீறி நடந்துகொள்ள முடிகிறது? இளிச்சவாயன் என்று என் நெற்றியிலேயே எழுதி ஒட்டி இருக்கிறதா?  ஒருவரிடம் உதவி கேட்க வேண்டும் என்றால், அவர் பசியோடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதா கேட்க வேண்டும்? அவருக்கு நான் உதவுவதாகவே வைத்துக்கொண்டாலும்கூட இப்படி டார்ச்சர் செய்தால் அவருக்கு உதவ யாருக்கும் மனம் வருமா? என் வாழ்நாளில் 55 வயது வரை நான் ஊர்களின் ஒதுக்குப்புறத்தில்தான் வாழ்ந்திருக்கிறேன். பிறந்ததில் இருந்து 20 வயது வரை ஊருக்கு வெளியே உள்ள சேரி. அதற்குப் பிறகு சேரி இல்லை என்றாலும் ஊருக்கு வெளியேதான் வாசம். பசிக்குச் சாப்பிட வேண்டும் என்றால்கூட பக்கத்தில் ஒரு உணவகம் இல்லாத மயானபூமியில்தான் 55 வயதுவரை வாழ்ந்திருக்கிறேன்.  அதற்குப் பிறகுதான் ஊருக்கு வெளியே இருந்த சொந்த வீட்டை விற்றுவிட்டு இந்த மயிலாப்பூருக்கு வாடகை வீட்டுக்கு வந்தேன்.

அந்தப் பணியாளர் பத்து நிமிடம் பேசியபோது 30 ரூபாய் தூரத்துக்கு மனம் கூசாமல் 100 ரூபாய் கேட்கும் சென்னை ஆட்டோக்காரர்களின் நினைவு வந்தது எனக்கு. எல்லா மனிதர்களும் உழைப்பே இல்லாமல் அம்பானி ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்போதும் தினசரி அந்த உணவகத்துக்குப் போகிறேன். அந்தச் சிப்பந்தி என்னிடம் வருவதில்லை. அவரைப் பார்த்தவுடனேயே என் முகம் இறுகுவதைக் கண்டு அவர் யூகித்திருக்கலாம்.

2. அதே உணவகத்தின் மாடியில் ஒரு ஆர்கானிக் விற்பனை நிலையம் உள்ளது.  ஒருநாள் தேன் வாங்குவதற்காக அங்கே போனேன். யானை போல் தொடை பெருத்த ஒரு 40 வயதுப் பெண்மணி அவரது உருவத்துக்குச் சற்றும் பொருந்தாத இறுக்கமான leggingsஐப் போட்டுக்கொண்டு, மாபெரும் தனங்களை இன்னும் மாபெருமாகக் காட்டும் மெல்லிய ஸ்லீவ்லெஸ் பனியனை அணிந்துகொண்டு இன்னும் இரண்டு பெண்களோடு தமிழில் பேசிக்கொண்டிருந்தார். ‘தமிழில்’ என்பது முக்கியம். அப்போது அங்கே இருந்த சேல்ஸ்கேர்ளை ”எக்ஸ்க்யூஸ் மீ” என்று அழைத்து அங்கிருக்கும் பொருள்களின் விலைகளையும் மற்ற விபரங்களையும் ஆங்கிலத்தில் விசாரித்தார் அந்தப் பெண்.  தன்னோடு வந்தவர்களுடன் ஸ்பஷ்டமாகத் தமிழ் பேச முடிந்த அந்தப் பெண், ‘ஙே’ என்ற தோற்றத்துடன் இருந்த ஒரு பணிப்பெண்ணை ஆங்கிலத்தால் மிரட்டுவதன் காரணம் என்ன? திரும்பத் திரும்ப ‘ஸ்லீவ்லெஸ்’ ஆங்கிலத்தில் பேச, திரும்பத் திரும்ப அந்தப் பணிப்பெண் தமிழிலேயே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.    இந்த இரண்டு சம்பவங்களுக்கும் ஜூ.வி-யில் படித்த பின்வரும் செய்திக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று கண்டுபிடியுங்கள். கண்டுபிடித்தால் இந்திய வாழ்க்கையில் மாற்றம் நேர்வதற்கு லேசான ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஒரு அரசாங்க மருத்துவமனையின் பிரேதக் கிடங்கில் இருந்து ரத்தம் வழிந்து ஓடி, அறைக்கு வெளியே குட்டையாகத் தேங்கி நிற்கிறது; பிரேதத்தை வாங்க வருபவர்கள் அந்த ரத்தத்தின் மேலேயே நடந்து செல்ல வேண்டியிருக்கிறது!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s