மீன் வாங்குவது எப்படி?

”நான் வளர்க்கும் பப்பு, ஸோரோ என்ற இரண்டு நாய்களுக்கும் எந்தச் சிரமமும் இல்லாமல் ‘பெடிக்ரி’ போட்டுக்கொண்டு இருந்தேன். பெடிக்ரியில் நாய்களுக்கு வேண்டிய எல்லாச் சத்துகளும் சரிவிகித அளவில் உள்ளன. இதில் சைவ பெடிக்ரி, அசைவ பெடிக்ரி எல்லாம் உண்டு. நாய்க்கு என்று தனியாகச் சமைத்து மெனக்கெடாமல், கடையில் விற்கும் பெடிக்ரியை வாங்கிப் போட்டுவிடலாம்.  பார்ப்பதற்குப் பழுப்பு நிறத்தில் வில்லை வில்லையாக இருக்கும். திடீரென்று பப்பு, ஸோரோவுக்கு தோலில் பிரச்னை வந்ததால், பெடிக்ரியை நிறுத்திவிட்டு மீனும் சோறும் கூடவே உருளைக்கிழங்கும் கேரட்டும் அவித்துக் கொடுக்கச் சொல்லிவிட்டார் டாக்டர். கேட்க சாதாரணமாக இருக்கும். ஆனால், செய்து பார்த்தால் நாக்கில் நுரை தள்ளி விடும். காலையிலும் இரவிலும் விடாமல் இந்த நான்கையும் அவித்து, ஆற வைத்துக் கலந்து தரவேண்டும். முள்  இல்லாத மீனாக இருக்க வேண்டும். நடு முள் இருந்தால் பரவாயில்லை; சுலபமாக எடுத்துவிடலாம். சமைப்பதோடு மட்டும் அல்ல; உருளையும் கேரட்டும் மீனும் வீட்டில் எப்போதும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், கிளம்பு மார்க்கெட்டுக்கு. ‘வாயில்லா ஜீவன்; பசித்தால் கேட்கத் தெரியாது’ என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். பேசத்தான் தெரியாதே தவிர, காலை மணி பத்து பத்தரைக்குள் உணவு கொடுக்காவிட்டால் முன்னங்கால்களை நம் மேல்வைத்து, நம் சட்டையைப் பற்களால் கடித்து இழுத்து, இன்னும் இதுபோல் பல போராட்டங்களை நிகழ்த்தி நம்மை ஒரு வழி பண்ணிவிடும் பப்பு. ஸோரோ சாது. ஒன்றும் செய்யாது; ஆனால், பப்புவுக்கு ஒரு வேளை உணவு கொஞ்சம் தாமதமானால்கூட பத்து நாள் பட்டினி கிடந்ததுபோல் ரகளை பண்ணும். (உன் வளர்ப்பு உன்னைப்போல்தானே இருக்கும்? – அவந்திகா)

எனக்கு மீன் மார்க்கெட்டுக்குப் போவது என்றால் அலாதிப்பிரியம். அது ஒரு தனி உலகம். நீங்கள் சைவ உணவுக்காரராக இருந்தாலும் ஒரே ஒருமுறை மீன் மார்க்கெட்டுக்குச்சென்று கவனியுங்கள். மிகவித்தியாசமான அனுபவமாக இருக்கும். மீன் மார்க்கெட்டைப் பார்த்திருக்காவிட்டால், உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்றைத் தவற விட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம். நான் எப்போதும் போவது லாயிட்ஸ் ரோட்டில் உள்ள நடுக்குப்பம் மார்க்கெட்.  1,000 ரூபாய் லாப்ஸ்டரில் இருந்து 20 ரூபாய் மத்தி மீன்வரை கிடைக்கும், ஜனநாயக மீன் மார்க்கெட் அது. அங்கே 50 வயதை ஒத்த ஒரு பெண்மணி அமெரிக்கையாக அமர்ந்து இருக்கவே அவரிடம் இருந்தே சுறாவும் கொடுவாவும் வாங்கிக்கொண்டு வருவேன். ஐந்து நாட்களுக்கு ஒருமுறை போனால் போதும். உப்பு, மஞ்சள்பொடி தடவி ஃப்ரீஸரில் வைத்து விட்டால் மீன் கெடாமல் இருக்கும். (இப்போது தினமும் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே மின்வெட்டு இருப்பதால் சமாளிக்கமுடிகிறது. இது 6 மணி நேரம் 8 மணி நேரம் என்று போனால், தினமும் மீன் மார்க்கெட் போகவேண்டிவரும். அதற்குள் மன்மோகன் சிங் மனம் இரங்கி குஜராத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரம் வருவதற்குப் போட்டிருக்கும் invisible தடையை நீக்குவார் என்று நம்புவோம்.)

நான் அதிக விலை கொடுத்து வாங்குகிறேன் என்பது அவந்திகாவின் பிராது. அது திருமணமான ஆண்களுக்குப் பரிச்சயமான விஷயம்தான் என்று நினைக்கிறேன். பெண்களின் மரபு அணுக்களிலேயே இந்த மேட்டர் கலந்து இருக்க வேண்டும். உலகம் பூராவுமே பெண்கள் தங்கள் கணவனை அசடு என்றே நினைக்கிறார்கள். நான் தாய்லாந்து கிளம்பியபோது ‘நடுக்குப்பம் போய் வாங்கிக்கொள்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன்.  ஊருக்குத் திரும்பியதும் ‘ஒரு அம்மா நல்ல மலிவாகக் கொடுக்கிறார்’ என்றாள் அவந்திகா. ‘நீ 800 ரூபாய்க்கு வாங்கும் மீனை அந்த அம்மா 600 ரூபாய்க்குக் கொடுக்கிறார்’ என்று மேலும் சொல்லவே, அந்த அம்மாவைப் பார்க்க ஒருநாள் நானும் அவளோடு கிளம்பினேன். பார்த்தால், நான் வாங்கிக்கொண்டிருந்த அதே அமெரிக்கையான அம்மாள். அது என்ன அமெரிக்கை? அந்த மார்க்கெட்டிலேயே அந்த அம்மாள்தான் வித்யாசமாக இருந்தார். அவரிடம் ஏதோ ஒரு வசீகரம் இருந்தது.  அன்றைய தினம் மீன் விலை 800 ஆகிவிட்டது. ‘இனிமேல் என்னோடு நீ வராதே; நானே வாங்குகிறேன்’ என்று சொல்லிவிட்டாள் அவந்திகா.

இதற்கிடையில் ‘பக்கத்து வீட்டு வாட்ச்மேன் அம்ஜத் எப்போதுமே நூறு ரூபாய்க்குக் கை நிறைய… இல்லை, பை நிறைய மீன் வாங்கிவருகிறார்’ என்றுசொல்லி என்னைத் துன்புறுத்திக்கொண்டிருந்தாள். ஒருநாள் அவரோடு சேர்ந்துபோய் ‘100 ரூபாய்க்கு எப்படி பை நிறைய மீன் வாங்குவது?’ என்று பயிற்சி எடுத்து வரச்சொல்லி அவரோடு அனுப்பிவைத்தாள்.

பெரிய கதை. சுருக்கமாகச் சொல்கிறேன். இரண்டு பேருக்கும் ஆட்டோ எடுத்தோம். அம்ஜத் மட்டும் என்றால் நடந்துபோவார். கலங்கரை விளக்கம் வந்ததுமே ஆட்டோவை வலது பக்கம் திருப்பச்சொன்னார் அம்ஜத்.  திரும்பினால் நொச்சிக் குப்பம். திரும்பாமல் சிறிது தூரம் நேராகச் சென்று, ராணி மேரிக் கல்லூரியைத் தாண்டி இடது பக்கம் திரும்பினால் (கண்ணகி சிலைக்கு எதிரே) நடுக்குப்பம். ‘அங்கே ரொம்ப விலை’ என்றார் அம்ஜத்.

ஆட்டோவை ஒரு ஓரத்தில் நிற்கச் சொல்லிவிட்டுத் திரும்பினேன். அம்ஜத் அதற்குள் தொலைவில் போய்விட்டார். ‘முதலில் எல்லாக் கடைகளையும் பார்த்துவிடுவோம்’ என்று சொல்லி ஒவ்வொரு கடையாக விசாரித்துக்கொண்டு போனார். அது இருக்கும் 100 கடைகளுக்கும் மேலே. எல்லாப் பெண்களும் கழுத்திலும் காதிலும் அடை அடையாகத் தங்க நகைகள் அணிந்திருந்தார்கள். இதில் இருக்கும் மிகப் பெரிய கலாசார வித்யாசத்தைக் கவனியுங்கள். மயிலாப்பூர் மாடவீதியில் மிக ஏழ்மையில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் பையன் பி.எஸ். ஹையர் செகண்டரியில் படித்து அமெரிக்கா போய்விடுவான். இங்கே நொச்சிக் குப்பத்துப் பையன்கள் அப்படிப்போக வாய்ப்பு உண்டா? இந்த நொச்சிக் குப்பத்து மக்களிடம் உள்ள தங்க நகைகள் ஏன் இவர்களின் வாழ்க்கையை இன்னும் மேம்படுத்துவதற்கு உதவுவதில்லை? இப்படியான சமூகவியல் பிரச்னைகளை யோசித்துக்கொண்டே, வேடிக்கை பார்த்துக்கொண்டு அம்ஜத்தைப் பின் தொடர்ந்தேன். அவரோ என் சமூகவியல் பற்றிக் கவலையே இல்லாமல் மீன் வாங்கும் கலையின் நுணுக்கங்களைப்பற்றி விளக்கிக்கொண்டே வந்தார்.

‘நல்லாக் கேட்டுக்குங்க…  600 ரூவானு சொல்லிச்சின்னா 200 ரூவாதான் கேக்கணும்’

‘என்னது, 200-ஆ?’

‘இதோ பாருங்கள்’ என்று சொல்லி இரண்டு பெரிய சைஸ் கொடுவாக்களை விலை கேட்டார். சொல்லி வைத்ததுபோல் அந்தப் பெண் ‘600’ என்றாள்.  இவரும் சொல்லி வைத்ததுபோல் ‘200’ என்றார். ‘நீ மீனு வாங்க வந்தியா… இல்ல, சும்மா வேடிக்கை பார்க்க வந்தியா?’ என்றும் இன்னும் சில மெல்லிய வசவுகளும் விழுந்தன அம்ஜத்துக்கு.

‘வேடிக்கை பாக்கவா வருவாஹ? சரி, நீயே வெச்சுக்க’ என்று அடுத்த கடைக்கு நீண்டார் அம்ஜத்.

‘சரி சரி, கடைசி விலை… 300 குடு… நீ வாடிக்கையா வாங்குற ஆளுங்கிறதால சொல்றேன்…’

‘உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம்… 250?”

‘எங்கேயாவது வாங்கிட்டுவா… இந்த மீன நான் சும்மாவே தர்றேன்…’

‘அடப் போம்மா…’

‘எல்லாக் கடையையும் பாத்துட்டுவருவோம். ஒரு கடையிலயே நின்னுடப்படாது…’ என்று சொல்லி, என்னை மேற்கொண்டு அழைத்துச் சென்றார் அம்ஜத்.  ஒரு கடையில் முப்பது ரூபாய்க்குப் பை நிறைய கெண்டை மீன்களை வாங்கிப் போட்டுக்கொண்டார். ஆற்றுக் கெண்டை. இன்னொரு கடையில் இரண்டு சுறாவை அக்கிரமமாக விலை கேட்டு வாங்கிக்கொடுத்தார். 800-க்கு 300!

திரும்பி வரும்போது அதே கொடுவா பெண்ணிடம் ‘ம்… என்ன சொல்றே?’ என்றார். ‘500’ என்றாள் அவள்.

”என்னது 500-ஆ? சித்தெ மின்னெதானே 300-னே?”

‘அது அப்போ… இப்போ விலை 500’

கடைசியில் 300-க்குப் படிந்தது.

எல்லா மீன்களையும் எடுத்துக்கொண்டு மீனை வெட்டிக் கொடுக்கும் பெண்களிடம் போனோம். அம்ஜத் தான் வழக்கமாகக் கொடுக்கும் பெண் என்று சொல்லி அவரிடம் கொடுத்தார். ஆனால், அந்தப் பெண்ணோ ஒரு துருப்பிடித்த அரிவாள்மனையை வைத்துக்கொண்டு அல்லாடிக்கொண்டிருந்தார். பார்க்க பாவமாக இருந்தது. நடுக்குப்பத்தில் இந்த வேலையை ஆண்கள் செய்வார்கள்.  பெரிய பட்டாக் கத்தியால் ஐந்தே நிமிடத்தில் வேலையை முடித்துவிடுவார்கள்.  பெரிய மரத்தை அறுத்து மேடை போல்வைத்து அதற்குமேல் மீனைப்போட்டு சரசரவென்று செதில்களைச் சீவி மீனைத் துண்டு போட்டுவிடுவார்கள். நொச்சிக்குப்பத்தில் ஆண்களே இல்லை. எல்லா பெண்களுமே ஒரு சிறிய அரிவாள்மனையை வைத்துக்கொண்டு போராடிக் கொண்டிருந்தார்கள். தவறாமல் எல்லோர் கழுத்திலும் காதிலும் அடை அடையாகத் தொங்கியது தங்கம்.

எனக்குக் காலும் இடுப்பும் கடுக்க ஆரம்பித்துவிட்டது. மழை சிலுசிலுவென்று தூறிக் கொண்டிருந்தது. எதிரே கடலில் அலைகள் அதிகம். அந்த அலையிலும் மீனவர்கள் படகில் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள். தொலை தூரத்தில் நிறையக் கப்பல்கள் தெரிந்தன. குடையைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டே இருந்தேன். மழை தூற ஆரம்பித்ததுமே மீன் வெட்டும் அந்தப் பெண்ணுக்கும் தனக்குமாக குடையை விரித்து அவள் பக்கத்தில் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு குத்துக் காலிட்டு அமர்ந்த அம்ஜத், மீன்களைப் பற்றியும் பொதுவாக வாழ்க்கையைப் பற்றியும் அந்தப் பெண்ணிடம் உரையாட ஆரம்பித்தார். என்னால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நடக்க முடியும்.  ஆனால், ஒரே இடத்தில் மணிக்கணக்கில் நின்றால் இடுப்பு வலிக்க ஆரம்பித்துவிடும். அந்தப் பெண், மீனை வெட்டிக் கொடுக்கும்போது மணி பனிரெண்டு.  ஒன்றரை மணி நேரம் வெட்டியிருக்கிறாள்.

‘ஆட்டோ வேறு வெயிட்டிங்கில் நிற்கிறது; என்ன சொல்லப் போகிறானோ?’ என்றேன் கவலையுடன்.

‘என்ன சார், ஆட்டோவா? அதை அப்பவே அனுப்பிடலியா? நீங்க அனுப்பிட்டீங்கன்னுல்ல நினைச்சேன்?’

ஆட்டோவை அனுப்பிவிட்டால் திரும்பிச் செல்ல ஆட்டோ கிடைப்பது சிரமம்.  நடந்தே போய்விடலாம் என்று நினைத்தாராம்.

இந்த மீனை நடுக்குப்பத்தில் 800 ரூபாய்க்கு வாங்கி இருப்பேன். இரண்டு மணி நேரம் மிச்சம். என்னுடைய இரண்டு மணி நேரத்தை எவ்வளவு பணத்தாலும் ஈடு செய்ய முடியாது.

நான் திரும்புவதற்கு அதிக நேரம் ஆகிவிட்டதால் அதற்குள் முள்ளங்கியைப் போட்டு குழம்பு வைத்திருந்தாள் அவந்திகா. இவ்வளவு மீனை வாங்கிவிட்டு சைவத்தைச் சாப்பிடுவதா என்று துக்கித்துக்கொண்டிருந்தபோது கேட்டைத் தட்டினார் அம்ஜத். சமைக்க வெங்காயம் இல்லை என்று சொல்லி இருந்தேன்.  அதனால், நாலைந்து வெங்காயம் கொண்டுவந்திருந்தார். ‘இல்லை வேண்டாம்; சமையல் முடிந்து விட்டது’ என்றேன். ‘அப்படியா?’ என்று சொல்லிக் கிளம்பியவரிடம் ‘சமைத்த பிறகு முடிந்தால் எனக்குக் கொஞ்சம் குழம்பு கொடுங்கள்… நிறைய வேண்டாம்… கொஞ்சம்’ என்றேன்.  திரும்பி உள்ளே வருவதற்குள் பணிப்பெண்ணே மீனைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். பொதுவாக மீனை நானே சுத்தம் செய்தால்தான் எனக்குத் திருப்தி ஆகும். எனக்கு வேலை இருந்தால் அவந்திகா செய்வாள்.  பணிப்பெண்ணிடம் கொடுப்பதில்லை.  அம்ஜத்தின் மீன் குழம்பு எளிமையாகவும் ருசியாகவும் இருந்தது. எப்படி என்று தெரியவில்லை. மறுநாள் சாவகாசமாக அவந்திகா மீன் குழம்பு செய்தாள். நட்சத்திர ஓட்டல் குழம்பு. வெறும் மணத்தை வைத்துக்கொண்டே செய்வாள்.  அவள் ஸ்ரீவைஷ்ணவம். ருசி பார்க்கமுடியாது.  அன்றைய தினம் சாப்பிட்டுவிட்டு என் மகன் கார்த்திக் ஒரு விஷயத்தை அறிவித்தான். இனிமேல் வாழ்க்கையில் மீன் குழம்பு சாப்பிடப்போவதில்லை. அவனுக்குப் பொதுவாகவே அசைவத்தில் அவ்வளவு நாட்டம் இல்லை. ஏதோ போனால் போகிறது என்று சாப்பிடுவான். அன்றைய தினம் மீனில் நிறைய செதிள் இருந்ததாம். நறுக்கிய பெண்ணும் சரியாக செதிள் சீவவில்லை; கழுவிய பெண்ணும் சரியாகக் கழுவவில்லை.”

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s