பேரழகிகள் அணியும் ஆடைகள்!

இதை நான் தாய்லாந்தில் இருந்து எழுதுகிறேன். குறிப்பாகச் சொன்னால் புக்கட் தீவு. தாய்லாந்துக்கு வரும் டூரிஸ்ட்களில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் தமிழர்கள். காரணம், தமிழர்களின் பாலியல் வறுமை (sexual starvation). மற்றொரு காரணம், தாய்லாந்தில் விபசாரம் கொடிகட்டிப்பறக்கிறது என்ற நம்பிக்கை. இந்த முறை என் தாய்லாந்துப் பயணத்தில் இந்தக் கருத்து மிகவும் தவறானது என்பதைத் தெரிந்துகொண்டேன். பாங்காக்கில் பட்பாங்க் என்ற ஒரு இடம் மட்டும்தான் சிவப்பு விளக்குப் பகுதியாக இருக்கிறது. மற்றபடி எல்லா ஊர்களிலும் நாம் பார்க்கக்கூடிய அதே வாழ்க்கையைத்தான் தாய்லாந்த் குடிமக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  நேற்று காலையில் நான் பாங்காக்கில் இருந்து கிளம்பி தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள புக்கட் தீவுக்கு வந்தேன். உங்களில் சிலர் புக்கட்டுக்கு வந்திருக்கலாம். ஆனால், பொதுவாகத் தாய்லாந்துக்குவரும் தமிழர்கள் சென்றிருக்காத ஒரு தீவுக்கு இன்று சென்றேன். Yao Noi என்பது அந்தத் தீவின் பெயர். (உச்சரிக்கும்போது யாவோ என்று சொல்லக்கூடாது. யாவ் என்பதே இவர்களின் உச்சரிப்பு. இதன்படி, லாவோஸ் என்பதும் தப்புதான். லாவ் என்றே இங்குள்ளவர்கள் உச்சரிக்கிறார்கள்). தாய்லாந்துக்காரர்களுக்கு ‘ர’ என்ற உச்சரிப்பே வரவில்லை. ரைஸை லைஸ் என்கிறார்கள். ராமகிருஷ்ணன் என்பதை லாமகிருஷ்ணன் என்கிறார்கள். தாய்லாந்தின் மன்னரின் பெயர் ராமா. ராமா 1, ராமா 2 என்று நம்பர் அடிப்படையில்போய்க்கொண்டு இருக்கிறது. மன்னரின் பெயரை லாமா என்றே உச்சரிக்கிறார்கள். (அதிகம் மீன் சாப்பிட்டால் ஆர் வராதோ?)

யாவ் நாய் என்பது இந்தப் பூலோகத்தின் சொர்க்கம். உலகின் அதி அற்புதமான தீவு என்று பட்டியலிட்டு இருக்கிறார்கள். நம்மைப்போல் இவர்களே சொல்லிக்கொள்ளவில்லை. சர்வதேச அளவில் அப்படிச் சொல்லப்படுகிறது. அந்த விஷயம்கூட யாவ் நாய் மக்களுக்குத் தெரிந்திருக்காது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பார்த்து அனுபவிக்கவேண்டிய அற்புதம் இந்தத் தீவு. இங்கே மதுவும் விபச்சாரமும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தாய்லாந்தை விபசார தேசம் என்று சொல்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா? இந்தத் தீவின் கடலில் யாரும் குளிக்கக்கூடாது. கடலில் அலையே கிடையாது. ஏதோ தவத்தில் இருக்கும் முனிவனைப்போல் அலையே இல்லாமல் நிசப்தமாக இருக்கிறது கடல். நீல நிறக் கடல். கடல் நீர் பளிங்கைப்போல் இருப்பதால் நீரில் அலையும் வண்ண வண்ண மீனகளைப் பார்க்க முடிகிறது. யாரும் இங்கே குப்பை போடக்கூடாது.  பெண்கள் நாகரிகமான உடையே அணிந்திருக்க வேண்டும். இவ்வளவுக்கும் காரணம், இங்கே வசிப்பது முஸ்லீம்கள். தாய்லாந்தின் தென்பகுதி முழுவதுமே முஸ்லீம்கள் வாழ்வதால் தாய்லாந்தின் மற்ற பகுதிகளில் பார்ப்பதைப்போல் பெண்களை அரைகுறை ஆடையில் பார்க்க முடியவில்லை.  தாய்லாந்துப் பெண்கள் பெரும் அழகிகள். என்ன அர்த்தம் என்றால், ஒரு சாதாரணமான உணவு விடுதியில் வேலைசெய்யும் பெண்கூட பேரழகியாக இருக்கிறாள். ஆனால், பெண்களின் ஆடைதான் ஆபாசமாக இருக்கிறது. இரண்டு இஞ்ச்சுக்கு கீழே ஒரு நிக்கர். மேலே ஒரு சட்டை. பலருக்கும் நிக்கரே தெரியவில்லை.  வெறும் சட்டை மட்டுமே தெரிகிறது. பாங்காக் பூராவும் இதுதான் நிலைமை.  இதனால், இவர்களை யாரும் குறை சொல்லிவிட முடியாது. மிகக் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட்டிருக்கும் இவர்கள், டாக்ஸி டிரைவர் வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். ஆனாலும் எனக்குப் பெரும் பிரச்னையாக இருந்தது இவர்களின் உடை. ஏன் இப்படி இவர்கள் தங்கள் உடம்பைக் காண்பிக்க வேண்டும்? ஆண்கள் எல்லாம் நாகரிகமாகத்தானே உடை அணிகிறார்கள்? ”தாய்லாந்துப் பெண்கள் மட்டும் அல்ல; உலகம் பூராவுமே இளம்பெண்கள் இப்படித்தான் உடை அணிகிறார்கள்” என்றார் என் நண்பர்.

நண்பர் சொன்னது உண்மை என்று, இன்றைய தினம் ஆட்களே வசிக்காத பல தீவுகளைப் பார்த்துவிட்டு புக்கெட்டுக்குத் திரும்பி வரும்போது படகில் தெரிந்துகொண்டேன். அந்தப் பெரிய மின்சாரப் படகில் 40 பேர் இருந்தார்கள். அதில் சரிபாதி பெண்கள். லெபனான், இங்கிலாந்து, ஸ்பெய்ன், ஃப்ரான்ஸ், ஜப்பான், சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள். யாவ் நாய் தீவில் டூரிஸ்டாக வரும் பெண்கள்கூட உள்ளூர் கலாச்சாரத்தை மதித்து ஒழுங்காக ஆடை அணிய வேண்டும் என்பதால் அந்தத் தீவில் டூரிஸ்டுகளே இல்லை. போகட்டும். படகுக் கதைக்குவருகிறேன்.அந்தப் படகில் இருந்த அத்தனை பெண்களுமே கொஞ்சமும் லஜ்ஜை இல்லாமல் மிக அசிங்கமாக ஆடை அணிந்து இருந்தார்கள். அரச இலை சைஸில் கீழே ஒரு உள்ளாடை. மேலே ஒரு ரிப்பன்தான் மார்க் கச்சை. அது மட்டும் அல்ல. யாரைப் பற்றியும் எந்தக் கவலையும் இல்லாமல் மிக மிக இயல்பாக பப்பரக்கா என்று சகல போஸ்களிலும் அமர்ந்திருந்தார்கள் அவர்கள். நீங்களே புரிந்துகொள்ள வேண்டும்.  இதற்கு மேல் என்னால் எழுத முடியாது. எனக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ‘சமூகம் மட்டும் அனுமதி கொடுத்தால் உலகில் எல்லாப் பெண்களுமே இப்படித்தான் உடை அணிவார்கள்’ என்றார் நண்பர். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், படகில் இருந்த ஆண்கள் 20 பேரும் நாகரிகமாக உடம்பை மூடி இருந்தோம். தங்கள் உடம்பைக் காண்பிக்க வேண்டும் என்று ஏன் பெண்களுக்கு மட்டும் தோன்றுகிறது?

படகில் இன்னொரு விஷயமும் நடந்தது. காலை ஒன்பதரை மணியில் இருந்து மாலை ஐந்து மணி வரை எங்களை அந்தச் சமுத்திரத்தில் பத்திரமாகப் பயணம் செய்யவைத்து, சொர்க்கம் என்று சொல்லத்தக்க பல்வேறு தீவுகளைக் காண்பித்த படகின் டிரைவருக்கு டிப்ஸ் கேட்டார் படகின் நடத்துரான பெண். என்னையும் என் நண்பரையும் தவிர, வேறு யாருமே ஒரு தம்பிடிகூடக் கொடுக்கவில்லை. என் நண்பர் ஒரு தமிழர். கலி முற்றி விட்டது என்கிறார்களே, அது இதுதானா?  உலகமே மனிதாபிமானம் அற்ற மக்கள் கூட்டமாக மாறிக்கொண்டு இருப்பது தெரிகிறது. அந்தப் பெண் மிகவும் வருத்தத்துடன் தன் உடைந்த ஆங்கிலத்தில் சொன்னாள். ”மற்ற எல்லாவற்றுக்கும் செலவு செய்கிறீர்கள். குடிக்கிறீர்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்குகிறீர்கள். ஆனால், உழைக்கும் மக்களுக்கு ஒரு பாட் (தாய்லாந்து பணம்) செலவழிக்கத் தயங்குகிறீர்கள்.”அப்படிச் சொல்லியும் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. நாகூரில் பிறந்து வாழ்ந்ததாலோ என்னவோ எனக்கு யாவ் நாய் தீவில் இருந்தபோதுதான், என் சொந்த ஊரில் இருப்பதுபோல் இயல்பாக இருந்தது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s