சாபம் வரமாவது வாழ்வின் புதிர்.

சமீபத்தில் மதுரைக்குச் சென்றிருந்தேன். அங்கே வைகைநதி வெறும் மணல் காடாய் இருப்பதைக்கண்டு மனம் வெதும்பினேன். மதுரை பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுத இருப்பதால் இப்போது வேண்டாம். திரும்பும்போது முதல்வகுப்பு ஏ.சி-யில் வந்தேன். சொகுசுக்காக அல்ல. இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்துகொள்வது சிறுவயதில் இருந்தே பழகிப்போய்விட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக எப்போது ரயிலில் பயணம் செய்தாலும் மேல் பெர்த்துதான் கிடைக்கிறது என்பதால், இரவில் மேலிருந்து கீழே இறங்குவதும் ஏறுவதும் பெரும் சிரமமாக இருப்பதால், முதல் வகுப்பிலேயே பயணம் செய்யவேண்டி இருக்கிறது. முதல் வகுப்பிலும் எனக்கு மேல் பெர்த்துதான் கிடைக்கும் என்றாலும், அது கொஞ்சம் உயரம் கம்மியாகவும் ஏறி இறங்க வசதியாகவும் இருப்பதால் அவ்வளவு பிரச்னை இல்லை.அது ஒரு மறக்க முடியாத பயணம். காரணம், என் பெட்டியில் சக பயணிகளாக இருந்தவர்கள் பலருடைய திருமுகங்களையும் ஜூனியர் விகடன் போன்ற இன்வெஸ்டிகேடிவ் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன். சினிமா வில்லன்கள் எல்லாம் சும்மா பிசாத்து.  கழுத்தில் அடை அடையாகத் தங்கச் சங்கிலிகள்.  கையிலும் தங்கச் சங்கிலி.  கட்டை விரல் தவிர்த்து, மற்ற விரல்களில் குண்டு குண்டு சைஸில் அவர்களின் தலைவர் படம்போட்ட  மோதிரங்கள். ஆமாம்… எல்லாம் கரை வேஷ்டி கோஷ்டி.  இதை எல்லாம்விட என்னைக் கவர்ந்தது அவர்களின் தொப்பை. அவர்களின் கையை நீட்டினால் அந்தக் கையும் தொப்பையும் ஒன்றுக்கு ஒன்று சமமாக இருக்கும். அவ்வளவு நீ………ண்ட தொப்பை.  இன்ஜின் டிரைவருக்கே கேட்டுவிடும் அளவுக்குக் கத்திப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்தப் பெட்டியில் ஒரு எலிக்குஞ்சைப்போல் பதுங்கிக் கிடந்த என்னை அவர்கள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.  டிக்கெட் பரிசோதகர் வந்துவிட்டுப் போனதுமே பாட்டில்களைத் திறந்து குடிக்க ஆரம்பித்தார்கள். அதைவிட அதிர்ச்சி என்னவென்றால், அவர்கள் வரும்போது மூட்டை மூட்டையாகக் கொண்டுவந்து இருந்ததெல்லாம் அவர்களின் பயணப்பைகள் அல்ல.  சாப்பாட்டுப்பைகள் என்று தெரியவந்தது. சிக்கன் 65, குடல் பொரியல், மூளை வறுவல், இஞ்சி சிக்கன், வறுத்த வஞ்சிரம் என்று பலவிதமான அசைவ ஐட்டங்கள் அதகளப்பட்டது. எல்லாவற்றில் இருந்தும் எண்ணெய் வழிந்து ஓடிக்கொண்டு இருந்தது. 50 பேர் தீனியைப் பத்தே பேர் தின்றுகொண்டு இருந்தார்கள். அப்போதுதான் அவர்கள் தொப்பையின் தாத்பர்யம் எனக்குப் புரியலாயிற்று. 12 மணிவரை அட்டகாசம் ஓயவில்லை. அவர்கள் பேசிக்கொண்டு இருந்த சேதிகளை எல்லாம் இங்கே எழுத எனக்குத் துணிச்சல் இல்லை. ஆனால், ஒன்று… ஆளும் கட்சியாக இல்லாதபோதே இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்றால், ஆளும் கட்சியாக இருந்தபோது என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று ஆச்சர்யம் அடைந்தேன். பத்திரிகைகளில் செய்தி வரும்போது ஏதோ சென்சேஷனுக்காகக் கொஞ்சம் கை சரக்கையும் சேர்த்துப் போடுகிறார்கள் என்று நினைப்பேன். ம்ஹும்… பத்திரிகைகளில் வருவது ரொம்பக் கொஞ்சம் என்பது அவர்கள் பேச்சில் இருந்து தெரிந்தது.

மறுநாள் சென்னைவந்து என் நண்பர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ராகவனிடம் விஷயத்தைச் சொன்னேன். ’50 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த அரசியல்வாதிகளின் தந்தைமார்கள் கைவண்டி தள்ளுபவராக, காய்கறி விற்பவராக, கட்டடத் தொழிலாளியாக விளிம்புநிலையில் வாழ்ந்திருப்பார்கள். அவர்களின் தனயன்கள் தலையெடுத்து அரசியலில் நுழைந்து இப்படி ஆகிவிட்டார்கள்’ என்றேன். மேலும் சொன்னேன்: ‘இவர்களின் தந்தைமார்களுக்குக் கிடைத்த நிம்மதியான வாழ்க்கை இவர்களுக்குக் கிடைத்திருக்கிறதா? முக்கியமாக, இவர்களின் தந்தையர் 85 – 90 வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால், இவர்களோ 35 வயதிலேயே பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டு (பலருடைய நெஞ்சில் தழும்பு இருந்தது) சிக்கனையும் மட்டனையும் ’மலை’யையும் முழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆட்சி மாறினால், குண்டர் சட்டத்தில் ‘உள்ளே’ போகிறார்கள். அரசியலில், தலைவர்கள்தான் தொண்ணூறுக்கும் மேல் ஆரோக்கியமாக இருக்கிறார்களே ஒழிய, இவர்களைப் போன்ற தொண்டர்கள் வயது 50 ஆனதுமே ‘மேலே’ போய் விடுகிறார்கள். உயிரையே பறித்துவிடக்கூடிய அளவுக்கு ஒரு மோசமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.  இவர்களுக்குக் கிடைத்த செல்வமும் அதிகாரமுமே இவர்களின் சாபமாகப் போய்விட்டது பார்த்தீர்களா?’உடனே ராகவன், ராமாயணத்தில் இருந்து ஒரு கதை சொன்னார். ‘ தசரதனுக்கு மூன்று மனைவிமார்கள் இருந்தும் குழந்தை இல்லாமல் இருந்தது. அதனால், பெரும் துக்கத்தில் இருந்த தசரதன் ஒருநாள் காட்டுக்குச் செல்கிறான். அப்போது ஏதோ ஒரு மிருகம் நதியில் நீர் அருந்தும் சத்தம் கேட்டிருக்கிறது. அவனிடம் சப்தவேதி என்ற ஒரு திறமை உண்டு. அது, இலக்கைப் பார்க்காமலேயே சத்தம்வரும் திக்கை நோக்கிக் குறிவைக்கும் கலை. மூன்று மனைவி இருந்தும் குழந்தை இல்லாத டென்ஷனில் இருந்த தசரதன், சத்தம்வந்த இடத்தைநோக்கி அம்பை எய்துகிறான். அடுத்தகணமே ஒரு சிறுவனின் ‘ஐயோ’ என்ற குரல் வருகிறது. அவன் நினைத்ததுபோல் தடாகத்தில் நீர் அருந்தவந்த யானை அல்ல அது.  தன் பெற்றோருக்காகக் கமண்டலத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு இருந்த சிறுவன் சிரவண குமாரன். அவன் தசரதனைப் பார்த்து ‘ என் தாய் தந்தையருக்குக் கண் பார்வை கிடையாது; அவர்களுக்காகத் தண்ணீர் எடுக்கவே வந்தேன். என் பெற்றோர் எனக்காகக் காத்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களின் தாகம் தீர்க்கத் தண்ணீர் கொண்டுபோய் கொடு” என்கிறான்.

சிறுவனின் பெற்றோர் தங்கள் புத்திரன் இறந்து விட்டதை அறிந்து, தங்களைப் போலவே தசரதனும் புத்திர சோகத்தில் தவிக்க வேண்டும் என்று சாபம் இடுகின்றனர். அதைக் கேட்ட  தசரதன் கைகேயியிடம் விஷயத்தைச் சொல்கிறான். அவள் தசரதனிடம் ‘அது சாபம் அல்ல; வரம்’ என்கிறாள். அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்பதை நான் விளக்கத் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.  ஆக, பல தருணங்களில் நமக்கு வரமே சாபமாகவும், சாபமே வரமாகவும் மாறுவது வாழ்வின் புதிர்களில் ஒன்றுதானே?

என்னுடைய வாசகர் வட்டத்தில் ராஜ ராஜேந்திரன் என்ற வாசக நண்பர் எழுதி இருந்த இந்தப் பதிவு என்னை மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.  ‘கடந்த ஆண்டு ஆகஸ்டில் வாசகர் வட்டச் சந்திப்பு பனையூரில் நிகழ்ந்தது. அந்தக் கடலோர பங்களாவில் ஒரு நாட்டு நாய் இருந்தது. அந்த இடம், அது வாடிக்கையாக, தன்னிச்சையாக உலவும் இடம்போல் இருக்கிறது. திடீரென்று அந்த இடத்தில் ஒரு பெரும் கூட்டத்தைக் கண்டு, உள்ளே வர அஞ்சி, வெளியே தோட்டத்திலேயே சுற்றியபடி இருந்தது. நாட்டு நாய் என்பதால் அவ்வளவு அழகோ, சுத்தமோ இல்லை.மதிய உணவு இடைவேளையின்போது, தோட்டத்தில் புகைப்படம் எடுக்க எங்களுடன் உலவவந்த சாரு, அந்த நாயை ‘வாடா செல்லம்’ என்று அழைத்தவேகத்தில், காதுமடல் மடித்து, வாலைக் குழைத்து, சாருவை நெருங்கியது. அதன் வாயை ஏந்தி, அதன் நெற்றி மையத்தில் தன்னுடைய பெருவிரலால் மெல்ல நீவியபடியே, ‘சாப்டியாடா கண்ணு, ஏன் டல்லா இருக்கே?’ என்றார். அந்த நாய் கண் சொக்கி அதை நன்கு அனுபவித்தது. அதற்குள் புகைப்படம் எடுக்க லொகேஷன் சிக்கியதால், சாரு எங்களுடன் வந்துவிட்டார்.உணவு இடைவேளை முடிந்து அடுத்த அமர்வில் பார்த்தால், அந்த நாய், பங்களாவுக்குள் எங்கள் மத்தியில், தனியாய் ஒரு பெரிய சோபாவில், நிம்மதியாய் உறங்கியபடி இருந்தது. நண்பர்கள் கீழே அமர்ந்து சாருவின் பேச்சைக் கேட்க ஆரம்பித்தோம்.’ராஜ ராஜேந்திரனின் பதிவு என் கண்களைக் கலங்கச் செய்துவிட்டது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் தெருநாய்கள் கிடையாது. இந்தியாவில் தெருநாயாக வாழ்வதன் அவலம் மிகவும் கொடூரமானது. எல்லா மனிதர்களாலும் அருவருப்புடன் துரத்தப்பட்டு, உணவுக்காக ‘நாய்’ படாதபாடுபட்டு, குளிர் காலத்திலும் வெயில் காலத்திலும் சொல்லவொண்ணா வேதனை அடைந்து … வார்த்தைகளால் எழுத முடியாது. கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், மனிதர்களால் வெறுக்கப்பட்டு துரத்தி அடிக்கப்படுவதுதான். ‘சீ, அந்தாண்ட போ’ என்று மனிதர்கள் தெருநாய்களைத் துரத்தும்போது, என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. பிறந்ததில் இருந்தே வெறுப்பையே பார்த்துக்கொண்டு இருப்பதால்தான் தெருநாய்கள் சில சமயம் மனிதர்களைக் கடிக்கின்றன. எப்போதும் துரத்திக்கொண் டு இருக்கும் அவைகளின் கொலைப்பசியும் ஒரு காரணம்.தெருநாய்களைத் தொடும்போது இது கவனத்தில் இருக்க வேண்டும். நடிகை த்ரிஷா வளர்க்கும் நாய் ஒரு நாய்க் காப்பாளரைக் கடித்துவிட்டது. நான் வளர்க்கும் பப்பு மற்றும் ஸோரோ என்ற இரண்டு நாய்களையும் அவ்வப்போது பெட் சென்டர் அழைத்துப்போவேன். அவைகளுக்கு பெடிக்யூர், மெனிக்யூர், காது சுத்தம் செய்தல், ஹேர் ஸ்பா போன்ற காரியங்களுக்காக அங்கே செல்வது வழக்கம். அப்படிப் போய் இருந்தபோதுதான் த்ரிஷா வளர்க்கும் நாய் அங்கே இருந்த பணியாளரைக் கடித்துவிட்டது. ஆனால், தவறு பணியாளருடையதுதான். பணியாளர் அந்த நாயை உயர்ஜாதி நாய் என்று நினைத்துவிட்டார்.  வீட்டிலேயே வளர்க்கப்படும் நாய்கள் சுலபத்தில் கடிக்காது. ஆனால், த்ரிஷா அப்போதுதான் தெருவில் கிடந்த ஒரு நாய்க் குட்டியை எடுத்து வளர்க்க ஆரம்பித்து இருந்தார். தெருநாய்களின் ஜீனிலேயே பயம் ஊறிக் கிடக்கும்.  அதனால்தான் பணியாளர் சௌஜன்யமாக அதைத் தொட்டதும் கடித்துவிட்டது. நாய் கடிக்காமல் அதனுடன் சிநேகம் கொள்ள, நாம் முதலில் அதோடு பேச வேண்டும். நாய்களுக்கு மனித மொழி தெரியாது என்றாலும், நம் குரலில் தெரியும் உணர்வை நம்மைவிட அவைகளால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். முதலில் அப்படிப்பேசி, அதற்குப் பிறகு, நம் கை மணிக்கட்டின் பின்புறத்தை அதற்கு முகரக் காண்பித்து, அது சம்மதம் தெரிவித்த பின்னரே அதைத் தொட வேண்டும்.  சடாரென்று தொட்டால் கடிதான். அது சரி… பணியாளரைத் தன் நாய் கடித்த விஷயம் த்ரிஷாவுக்குத் தெரியுமா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s