பசி இல்லையேல் உலகம் இல்லை .

தியம் சாம்பாருக்குப் பதிலாகக் கிடைத்த பருப்பைப் பார்த்துவிட்டு, டின்னருக்குக் கோழிகளை அறுக்க ஆரம்பித்தார் எங்கள் செஃப் பிரபு. நாங்கள் கேம்ப் ஃபயர் போட்டு சுற்றி அமர்ந்துகொண்டு இலக்கிய விவாதம் செய்துகொண்டு இருந்தோம். நள்ளிரவு பனிரெண்டைத் தாண்டிக்கொண்டு இருந்தபோது இரண்டு இளைஞர்கள் அங்கே பைக்கில் வந்து நின்றார்கள். எங்கள் யாராலும் முதலில் அதை நம்பவே முடியவில்லை.  ராஜா மற்றும் பார்த்திபன். கல்லூரி மாணவர்களான அவர்கள் அவிநாசியில் இருந்து பைக்கிலேயே கிளம்பிவந்து இருக்கிறார்கள். நான் அடிக்கடி எனக்கு மிகப் பிடித்த நாவலான Zorba, the Greek பற்றிக் குறிப்பிடுவதுண்டு.  அந்த நாவலில் ஸோர்பாவும் எழுத்தாளனும் ஓர் இரவு முழுவதும் கடற்கரையில் அமர்ந்து மது அருந்தியபடி ஒரு முழு ஆட்டை பார்பெக்யூ செய்து சாப்பிடுவார்கள். ”அதேபோல் உங்களோடு சாப்பிட வேண்டும் என்பதற்காக ஆட்டை எடுத்துக்கொண்டு வந்தோம்” என்றார் ராஜா. பைக்கில் ஆட்டை எடுத்துக்கொண்டு வரும்போது ஆட்டுத் திருடர்கள் என்று போலீஸ் பிடித்துக்கொள்ளும் என்பதற்காக, ஆடு வாங்கிய இடத்தில் முன்கூட்டியே ரசீதும் கொடுத்திருக்கிறார்கள். பல இடங்களில் போலீஸ் மடக்கியபோது அந்த ரசீதைக் காண்பித்துத்தான் தப்பி இருக்கிறார்கள்.  சில இடங்களில் குழந்தையைக் கடத்திக்கொண்டு போகிறார்கள் என்ற சந்தேகத்திலும் மடக்கி இருக்கிறது போலீஸ். (ஆடு கத்துவது, போலீஸுக்குக் குழந்தை கத்துவதுபோல இருந்திருக்கிறது).  எப்படியோ இரவு 10 மணி அளவில் எப்பநாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். மழை பெய்து பாறைகள் வழுக்கிய நிலையில் ஆட்டையும் தூக்கிக்கொண்டு ஏறுவது சாத்தியமே இல்லை. பல இடங்களில் வழுக்குப் பாறைகளில் பைக் சறுக்கி விழுந்து இருவரின் உடம்பிலும் சிராய்ப்பு.  சில இடங்களில் ஆட்டைத் தூக்கிக்கொண்டு, பைக்கை நகர்த்திக்கொண்டே வந்திருக்கிறார்கள். கும்மிருட்டு. ஆட்டின் ‘பே பே’ சத்தத்தில் வன மிருகங்கள் வந்துவிடுமோ என்ற பயம் வேறு. பைக்கில் பின்னால் அமர்ந்து இருந்த பார்த்திபனின் மடியில் இருந்த ஆடு, இருட்டிலும் அந்த வினோதமான பயணத்திலும் பயந்துபோய் பைக்கை ஓட்டிக்கொண்டு இருந்த ராஜாவின் முதுகைக் கடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் கடி தாங்க முடியாமல் காட்டுக்குள்ளேயே ஒரு மரத்தில் ஆட்டைக் கட்டிப்போட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். ஆட்டைக் கட்டுவதற்காகக் கயிறையும் கொடுத்திருக்கிறார் ஆட்டின் உரிமையாளர். என்ன ஒரு வியாபார நேர்மை!

ஆனால், அவர்களுடைய மிகப் பெரிய பதற்றம், இவ்வளவு சிரமப்பட்டு ஏறினாலும் இந்தக் காட்டுவழி, அவர்கள் தேடிவந்த எழுத்தாளனிடம் கொண்டுபோகுமா என்ற சந்தேகம். சரி, இந்த வழி எங்கேயாவது போய் முடியத்தானே வேண்டும்? அவர்களிடம் விசாரித்துக்கொள்ளலாம் என்ற தைரியத்திலேயே அந்த நடுநிசியில் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். போனும் வேலை செய்யாததால் எங்கள் யாரையும் போனிலும் தொடர்புகொள்ள முடியாது. பிறகு, இன்னொரு இடத்தில் தாங்கள் கொண்டு வந்த மது பாட்டில்களை ஒளித்து வைத்துவிட்டு குறைந்தபட்ச சுமையோடு நள்ளிரவு 12 மணிக்கு எங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் சொன்ன கதையைக் கேட்டபோது எனக்கு வெர்னர் ஹெர்ஸாக் Fitzerraldo படத்துக்காக ஒரு நீராவிக் கப்பலை ஒரு செங்குத்தான மலையின் மீது ஏற்றிச்சென்ற சம்பவம் ஞாபகம் வந்தது.        சரி, இப்போது உடனடியாக கட்டிய இடத்தில் இருந்து ஆட்டைக்கொண்டு வந்தாக வேண்டும். கொஞ்சம் முன்னால்தான் டவேராவைத் தள்ளுவதற்காகப் போய்வந்தது ஒரு குழு. இப்போது மறுபடியுமா? ஆனால், இந்த இரண்டு இளைஞர்களும் செய்திருக்கும் அசகாயச் செயலைப் பார்த்துவிட்டு மூன்று பேர் அவர்களுடன் டார்ச்சை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். நள்ளிரவில் கிளம்பிய அவர்கள் ஆட்டோடு திரும்பியபோது மணி இரண்டு.  மறுநாள் மாலையில் பார்பெக்யூவுக்காக வெட்டும்வரை அந்த ஆடு ‘பே பே’ என்று கத்திக்கொண்டு இருந்ததைப்பார்த்து எங்கள் அனைவருக்கும் இரக்கம் சுரந்துவிட்டது. ” இப்படி ஒரு உயிரைக் கொன்று சாப்பிட வேண்டுமா?’’ என்றேன் நான்.  ”அப்படிச் சாப்பிடாவிட்டால் ecobalance மாறுபட்டுப் பிரச்னை ஆகி விடும்’’ என்றார் ஒரு நண்பர். அமெரிக்க ஆந்த்ரொபாலஜிஸ்ட் Marvin Harri-ன் கருத்து அது. ”கலாசாரம் என்பது ecology-ஐச் சார்ந்தே இருக்கிறது. மங்கோலியாவின் பனிப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் சைவ உணவைச் சாப்பிட முடியுமா? ஏன், தாவரங்களுக்குக் கூடத்தான் உயிர் இருக்கிறது!’’ என்றார் இன்னொருத்தர். ”சரி, பசி என்ற உணர்வே இல்லாமல் இருந்தால் இந்தக் கொலையெல்லாம் இல்லாமல் இருக்கலாமே’’ என்றேன் நான்.  பசி என்ற உணர்வு இந்தப் பிரபஞ்ச உயிர்களுக்கு இல்லாவிட்டால் இந்த உலக வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? உலகம் அழிந்து போயிருக்கும் இல்லையா? பசி என்ற உணர்வு இல்லாவிட்டால் இதைப் படித்துக்கொண்டு இருக்கும் நீங்கள் இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறீர்களோ அதைச் செய்திருப்பீர்களா? பார்பெக்யூ இரவில் பிரபு ஏராளமான கப்பல் கதைகளைச் சொல்லிக்கொண்டு இருந்தார். இடையில் அவர் என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். ”செக்ஸ் சிக்னல் கொடுப்பதில் உலகிலேயே கில்லாடிப் பெண்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?” உடனடியாக நான் சொன்னேன். ” நாடு எது என்று சொல்ல முடியாவிட்டாலும் கண்டத்தைச் சொல்லி விடலாம். தென் அமெரிக்கா” என்றேன் நான். ”உண்மைதான்” என்றார் பிரபு. ஒருநாள் கப்பலின் பாரில் மது அருந்திக்கொண்டு இருந்தபோது பக்கத்தில் இருந்த ஒரு பிரேசில் தேசத்துப்பெண் அவரிடம் சிநேகமாகி இருக்கிறாள். கப்பலிலேயே பணியாற்றும் பெண். நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டுப் பிரிந்திருக்கிறார்கள். மறுநாள் அவளிடம் இருந்து பிரபுவுக்கு போன் வந்ததாம். ”அப்புறம் ஏன்… நீ என்னைக் கூப்பிடவே இல்லை?” என்றிருக்கிறாள்.  ஒன்றும் புரியாத பிரபு ”ஏன், என்ன விஷயம்?” என்று கேட்க, ”நீதானே நேற்று ‘See you later’ என்று சொன்னாய்?” என்றாளாம் அந்தப் பெண்!.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s